வெள்ளி, 3 ஜனவரி, 2014

புதுமை அடைய வேண்டும் பதிப்புத் துறை



              கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி” என்று தமிழ் மொழியின் சீரிளமைத் திறம் வியந்து போற்றுகின்ற தமிழர்கள் நாம். இன்றளவிலும் பழமையின் பண்பு மாறாததாய் விளங்கும் செம்மொழிகள் வரிசையில் தமிழ் விளங்குகிறது. அத்தகைய தமிழின் பழமையான இலக்கண இலக்கிய வளங்களைத் தேடும் முயற்சியில் சான்றோர் பலர் அலைந்தனர். ஓலைச்சுவடியில் இருந்த தமிழ் உ.வே.சா. முதலான சான்றோரால் அச்சாக்கம் பெற்றது.
               உதித்து மறைந்து மீண்டும் எழுவது சூரியனுக்கும் வளர்ந்து தேய்ந்து பின் வளர்வது நிலவிற்கும் இயல்பாக அமைந்தது போல் தமிழின் நிலையும் வரலாற்றில் காணப்படுகிறது.  யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலான நூல்களின் உரைகளில் அந்த நூலுக்கு முன் ஏராளமான இலக்கண நூல்கள் இருந்தமை அறிய முடிகிறது. பாளித்தியம், பிங்கலம், குணகாங்கியம், நிருத்தம் என்பன அவற்றுள் சில. அந்நூல்கள் கிடைத்தனவா என்றால் ???  காரணம், இறையனார் களவியல் உரையில் கூறப்பட்டது போலக் கடற்கோளால் அவை அழிவுற்றிருக்கலாம்.
                பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் உரையாசிரியர் காலம் தொடங்குகிறது. உரையாசிரியர்கள் சில இடங்களில் குறிப்பிட்டுச் செல்கின்ற நூல்களும் காலவெள்ளத்தில் அழிந்து போயின.  மயிலை சீனிவேங்கடசாமி என்பாரின் “ மறைந்து போன தமிழ் நூல்கள் ” எனும் நூலில் இப்படிக் காலத்தால் அழிந்து முழுமையாகக் கிட்டாமல் ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளின்படி திரட்டப்பட்ட  பல நூல்களின் தொகுப்பைக்  காணலாம்.
                கடல்கோளின் தாக்கம், சுவடிகளின் பராமரிப்பின்மை, மூடநம்பிக்கையால் ஆற்றில் விடப்பட்டமை, கறையான்களின் காவு இக்காரணங்களால் பல நூல்கள் மறைந்தன.
                அச்சு எந்திரத்தின் வருகையால் தமிழ் மீண்டும் எழுச்சிக் கண்டது. உ.வே.சா., சி.வை. தாமோதரனார், கணேசையர் முதலானோர் ஓலைச்சுவடிகளை அரிதின் முயன்று அச்சடித்துத் தமிழை அரியாசனத்தமர்த்தினர்.  பழைய நூல்கள் பல எளிய விலைகளில் வெளிவந்தன. ஆனால், இன்று அந்நூல்கள் காணக் கிடைத்தில.  பல மறு பதிப்பின்றிக் கிடக்கின்றன. பல தமிழ் மூதறிஞர்களிடம் அந்நூல்கள் வெளி வராது இருக்கின்றன.  பழமையான நூலகங்களில் கூட அவை இன்று காட்சிப் பொருளாகவே உள்ள நிலையைப் பார்க்கும் போது அந்தோ!!!
                                   சில மாதங்களுக்கு முன் மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்குச் சென்றிருந்தேன்.அங்குள்ள செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்ற போது அந்த நூலகத்தில் தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தி, தொன்னூல் விளக்கம் முதலான நூல்களை வாங்கிச் சென்று படித்துள்ளேன்.  ஆனால், தற்சமயம் அவையாவும் அரியவகை நூல்கள் பட்டியலில் உள்ளன. எனவே, அவற்றை ஒளிப்படி எடுக்கக்கூட அனுமதி இல்லை. 
              சங்கம்வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் கம்பராமாயணமும் திருக்குறளும் கிடைக்காது வருந்தி, பின்பு பொன்.பாண்டித்துரையார் தனது இல்லத்தையே தமிழ்ச் சங்கமாக மாற்றினார்.  இன்று அதே தமிழ்ச் சங்கத்தில் அரிய நூல்கள் பல சிதிலமடைந்து கிடக்கின்றன.  காரணம் பல நூல்கள் மறு பதிப்புப் பெறாமையே ஆகும்.
             உரையாசிரியர்களின் உரையால் அழிந்து போன பல நூல்களை அறிந்து கொண்டோம்.  தற்போது நூலின் பின்புறம் காணப்படும் துணை நூல்களின் பட்டியல் மூலமாக மட்டுமே அச்சேறிய பழமையான  நூல்களின் பெயர்கள் அறிய முடிகிறது.  பழந்தமிழ் இலக்கண ஆய்விற்கு உரிய நூல்கள் கிடைக்காமையால் தான் என்னவோ, இலக்கணத்தில் ஆய்வு வளர்ச்சி குன்றியுள்ளது.
புத்தாக்க முயற்சி:
              சிதிலம் அடைந்த சுவடிகளை மீளவும் சுவடியாக்கம் செய்ததும்,  சுவடிகளை நூலாகப் பதிப்பித்ததும் தமிழின் வளர்ச்சியில் முக்கிய திருப்பம்.   நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்ப்பதுடன், இங்குள்ள பழமையான நூல்கள் மின்னூல் வடிவம் பெறவேண்டும்.
             யாழ்ப்பாணத்தின் “நூலகம்” எனும் இணையம் ஏராளமான தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் எண்ணிமப்படுத்தி வரும் முயற்சி பாராட்டுதற்குரியது.  அதே போல மதுரைத்திட்டம் எனும் இணையமும் நூல்களை மின்னூல் வடிவில் கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் அரிய வகை நூல்களை மின்னூல் வடிவில் கொண்டு வரத்  தமிழறிஞர்களிடம் நூல்களைக் கேட்டு அழைப்பு விடுத்துள்ளது.
             தமிழில் உள்ள ஐந்திணையுடன்,  இணையம் எனும் ஆறாம் திணை இணைந்துள்ளது.  கணினியில் நுழைந்தது காலாவதி ஆவதில்லை. எனவே, சுவடி – நூல்களில் இருந்த நம் தமிழ் மின்னூல்களாக உலா வர வேண்டும்.  அரியவகை நூல்கள் விரைவில் மின்னூல் வடிவம் பெற வேண்டும். தமிழ் இலக்கணத்தில் ஆய்வுப் பரப்பு வானமென விரிவடைய வேண்டும். வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்ற தமிழ் வானில் உலாவி வலை வாசலில் நம்மை வரவேற்க வேண்டும்.
            அரிய நூல்களுக்கு அழிவில்லா நிலையை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும். மீண்டும் கடற்கோள், கறையான், அந்துப் பூச்சி இவற்றின் பிடியில் தமிழ் விழ நாம் சற்றும் அனுமதிக்கக் கூடாது விரைவோம். பதிப்பியல் துறை மின்னூல் துறை என்று புதியதோர் பரிமாணம் பெற முயல்வோம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

              

புதன், 1 ஜனவரி, 2014

பூத்தது 2014-ஆம் ஆண்டு

"பழையன கழிதலும் புதியன  புகுதலும்
வழுவல கால வகையி னானே”   ( நன்னூல்)


         பழமையின் வழியில் புதுமையை வரவேற்போம். 
   வலைவாசலுக்கு வரும் உள்ளங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு                             நல்வாழ்த்துகள்.  

சனி, 23 நவம்பர், 2013

ஔவை யார் ? ஒருவரா? பலரா?

    
                     தமிழறிந்த எவரும் ஔவையாரைப்பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். எழுத்தறிவு இல்லாதவர்கள் கூட ஒளவையை அறிந்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் தோன்றிய பெண்பால் புலவர்களுள் யாவரும் அறிந்த தலைசிறந்த அறிஞராகத் தொன்றுதொட்டுப் பேரோடும் புகழோடும் விளங்கி வருபவர் ஔவையார்.
     நம் நாட்டில் ஔவையார் என்று குறிப்பிடுகின்ற பெருமைக்குரியவர் ஒருவர் அல்லர்; பலர் என்று கூறுகின்றனர். பண்டைத் தமிழறிஞர்களுக்கு முறையான வரலாறு குறிக்கப்படாத குறை பெருங்குறையாக இருந்து வருகிறது.  எனவே, பல்வேறு காலத்தில் தோன்றிய மொழிப்புலமை மிக்க பெண்ணறிஞர் பலர் ஔவையார் என்ற பொதுச்சிறப்புப் பெயரால் போற்றப்பட்டு வந்திருக்கின்றனர். 
     பேராசிரியர் மது.ச. விமலானந்தன் அவர்கள் சங்ககால ஔவை, சங்கம் மருவிய கால ஔவை, சோழர் கால ஔவை, பிற்கால ஔவை என நால்வகை ஔவையார் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.  அதியனின் நண்பர், பாரி மகளிர்க்கு மணமுடித்தவர்,  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி பாடியவர்,  ஞானக் குறள், விநாயகர் அகவல் பாடியவர் எனப் பகுத்துக் காட்டுகிறார்.
      பேராசிரியர் பூவை அமுதன் அவர்கள் “ஔவை” எனும் தன்னுடைய நூலில் சங்க கால ஔவை, இடைக்கால ஔவை என இரு வகை அவ்வையார்களைச் சுட்டுகிறார்.
      முனைவர். ஜே.ஆர். இலக்குமி அவர்கள் “ வரலாற்றில் ஔவை” எனும் தமது நூலில் ஆறு அல்லது ஏழு ஔவையார் வாழ்ந்ததாகப் பதிவு செய்துள்ளார். 
      கவிஞர் இன்குலாப் அவர்கள் “ஔவை” எனும் தனது நூலில் சங்க கால ஔவை நம்மிடையே தொலைந்துபோய்விட்டார் என்றும் பிற்கால ஔவையின் உருவமே நம்மில் நிழலாடுவதையும் சுட்டுகிறார்.      ஔவையார் என்றாலே மூதாட்டியின் உருவமே நமது மனக்கண்ணில் பிம்பமாகத் தெரிகிறது. காரணம் ஔவைப் பாட்டி எனும் வழக்கு. மேலும்,  இதற்கு அரணாகத் திரைப்படத்தில் ஔவை, புராணக் காட்சிகளுடன் பாட்டி வடிவில் படைக்கப்பட்டுவிட்டார்.  ஆனால்,  ஔவையார் சங்க காலத்தில் ஆடல், பாடல், இசை வல்ல பாண் குடியில் தோன்றியவர். பாண் குடியில் பிறந்த பெண் பாடினி எனப்பட்டாள்.
        தொல்காப்பியப் பொருளதிகாரக் கற்பியலில் ஊடலை உணர்த்தும் வாயில்கள் பற்றிய நூற்பாவில் “ பாட்டி “ சொல் “ பாடினி “ எனும் பொருளில் தொல்காப்பியரால் கையாளப்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.  மேலும், பெருமைக்குரிய பெண்களைக் குறிக்க “ பிராட்டி “  என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது.  பிராட்டி என்பதே பாட்டி எனவும் மருவி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.   
        அகத்தியர் பெயரில் ஒருவரல்லர்; பலர்.  கபிலர், பரணர், நக்கீரர், கல்லாடர் ஆகிய சங்கப் புலவர்களின் பெயர்களும் பக்தி இயக்கக் கால இலக்கியத் தொகுப்புகளில் காணலாகின்றன.   மக்களிடையே சிறப்புப் பெற்றுத் திகழ்பவரின் பெயர்கள் குழந்தைகளுக்குச் சூட்டி அழகுபார்ப்பது போல, (சான்றாக அஜித், விஜய், விக்ரம்....இன்னமும் எத்தனையோ)  ஔவையின் பெயரும் வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது ஒளவையாரின் பெயரில் இலக்கியங்கள் படைத்தால் வரலாற்றில் நிலைக்கும் எனவும் நம்பிவிட்டனரோ?   எப்படியாயினும் சங்ககால ஔவை மூதாட்டி அல்லள்;  அதியனின் தூதுவராக விளங்கி நாட்டுச் சமரசத்திற்குப் போராடிய வீரப் பெண்மணி ஆவாள்.  

திங்கள், 11 நவம்பர், 2013

தூவும் மழையும் அளபெடையும்

           “அடடா அடடா அடை மழைடா” என்று இனி வரும் காலங்களில் இளைய சமுதாயம் படங்களில் தான் மழையைப் பாரக்கமுடியுமோ என்ற அளவிற்கு மழை பொய்யெனப் பெய்து வருகிறது.  இந்த உலகம் இயங்க மழைநீர் ஆதாரமாக இருப்பதால் தான் அதனைப் பூலோக அமிழ்தம் என்றார் திருவள்ளுவர். வான் சிறப்பு அதிகாரத்தில் அனைவரும் அறிந்த குறட்பா, 
                 “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
                  துப்பாய தூஉம் மழை”.
இந்தக் குறட்பாவை எவரும் “தூவும் மழை” என்றே வாசிக்கின்றனர். “தூஉம்” என்பதில் உள்ள அளபெடையைப் பலரும் மறந்துவிட்டனர் போலும்!
     உண்பவருக்குத் தேவையான உணவுப் பொருள்களை விளையவைப்பதுடன், தானும் உணவாக ஆனது மழை நீர்.   துப்பு + ஆயதூஉம்  = துப்பாய தூஉம் எனச் செய்யுளில் நிற்கிறது. எனவே, துப்பு ஆயதூஉம் எனச் சரியாக அசை பிரித்து வாசித்தால் பொருளில் பிழைபடாது. இல்லையேல் செய்யுளில், மழை மட்டுமே தூவுமே தவிர “மழை நீர் உணவு” என்ற பொருள் வராது.
     தமிழில் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துகள் உண்டு.  இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துகள் உண்டு. மூன்று மாத்திரை ஒலிக்கும் எழுத்து என்று தனியாக இல்லை.. அவ்வாறு ஒலித்திட நேர்கின்ற போது நெடிலுக்கு இணையான இன எழுத்தைப் பக்கத்தில் இட்டு எழுத வேண்டும் மேலும், அந்த ஒலி தனித் தனியே, அதாவது ஆ-அ, ஈ-இ , ஊ-உ, ஏ-எ, ஓ-ஒ, ஐ-இ என விட்டிசைக்காமல் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ என நீட்டி ஒலிக்க வேண்டும்.  அளபெடையை நீருடன் நீர் கலந்தாற்போல ஒலிக்கவேண்டும். இந்த இலக்கணம் கூறும் போதே தொல்காப்பியர்,
            “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
            கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் “
என்று நம்மை அளபெடைப்  பயிற்சியில் ஈடுபடுத்தச் செய்கிறார்.
எனவே, ஒலிப்புமுறையைச் சரியாகக் கற்றுத் தந்தால்  தமிழின் நீர்மை இனிமையினும் இனிமையே!


வெள்ளி, 8 நவம்பர், 2013

வருக வருகவே

எனது வலைப்பூ " இலக்கணத் தேறல்".
தேடினால் எளிதில் கிட்டும்
தமிழின் மயக்கம்  இங்கு தெளிவாகும்.
மயக்கும் தேறல் அன்று , இது
தெளிய வைக்கும் தேறல்.
இலக்கணத் தேடல், சமூகப் பார்வை,
கல்விச் சிந்தனை முதலானவற்றை அடக்கும் தேத்திறால்..
    வருக வருக உங்களை ஆலோசனை தருக 

மரபுகள்

ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியம் தனது பொருளதிகாரத்தில் மரபு பற்றிய இலக்கணத்தை மரபியலில் உரைக்கின்றது. மகவு, குட்டி, கன்று, பார்ப்பு, பறழ், குருளை, பிள்ளை முதலியன இளமைப் பெயர்கள். அந்த வகையில் மாட்டின் இளமைப் பெயர் கன்று. மனிதனின் இளமைப் பெயர் மகவு, பிள்ளை என்பன. பறவைகளின் இளமைப்பெயர் பார்ப்பு. மானின் இளமைப் பெயர் கன்று.
          ஆனால், சமீபத்திய திரைப்படப் பாடல் ஒன்றில் " மான் குட்டியே புள்ளி மான் குட்டியே" என வருகிறது.  இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்ற மாணவர்கள் தமிழ் மொழிப் பயிற்சிக்கு விடையளிக்கும் போது " மான் கன்று " என்று எழுதுவதற்குப் பதிலாக மான் குட்டி என்று விடையளிக்கின்றனர்.
          ஊடகத்தின் தாக்கம் இலக்கணத்தை விஞ்சி விட்டது. எனவே, மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கின்ற பொது தற்போதைய திரைப் படங்களில் வரும் காட்சிகளைக் கொண்டு விளக்குவது மட்டுமின்றி, தவறாக இடம் பெரும் தகவல்களையும் சரிப் படுத்திச் சொல்லித் தர வேண்டிய கட்டாயம் நம் மொழி ஆசிரியர்களுக்கு உண்டு. 

தன்னம்பிக்கை

கற்களுக்குள் கண்கள் கவரும் கலை உண்டு
சொற்களுக்குள் ஞாலம் சுவைகவி உண்டு
மனத்தை திடப்படுத்து மையல் உறாதே
உனதடை யாளம் உணர் .
>