திங்கள், 6 அக்டோபர், 2014

மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் - பகுதி - ௩
சார்பெழுத்துகளின் வகைதொகை முறையும் களங்களும்

     சார்பெழுத்துகளின் எண்ணிக்கை மூன்று, பத்து, ஒன்பது, இரண்டு எனக் கூறுவது ஒருபுறம் நிற்க, அவற்றைத் தொகுத்து மொழியிடை, புணர்மொழி இடையிலான களங்களின் அடிப்படையில் கூறும் போக்கை நன்னூல் தொடங்கி அறிகிறோம்.

          “உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம்
           எட்டு, உயிரளபு எழுமூன்று, ஒற்றளபெடை
           ஆறேழ் அகும் இம்முப் பானேழ்
           உகரம் ஆறாறு, ஐகான் மூன்றே,
           ஒளகான் ஒன்றே, மகான் மூன்றே
           ஆய்தம் இரண்டோடு சார்பெழுத்து உறுவிரி
           ஒன்றுஒழி முந்நூற்று எழுபான் என்ப”   (நன்னூல் )

எனும் நூற்பா 369 சார்பெழுத்து விரியைக் கூறுகிறது.

     உயிர்மெய் – 216  (  12 உயிர்  x  18 மெய்  = 216 )
      ஆய்தம்   - 8    ( வல்லின வகையால் ஆறு+புணர்ச்சி+தோன்றல் ஆய்தம்)
     உயிரளபெடை-21 (7உயிர் நெடில்   x  3இடங்கள் )
     ஒற்றளபெடை- 42 (ஙஞணநமனவயலள ஆய்தம் 11 x
        குறில்இணை,குறில் கீழ், இடை, கடை 4  இடங்கள்.
 இவற்றில்  ஆய்தம் குறில் இணை, குறில் கீழ் வராது)
குற்றியலுகரம் - 36   (தனி நெடில் 7, ஆய்தம் 1, ஒள நீங்கிய உயிர் 11,           வலி 6, மெலி  6, வகரம் நீங்கிய இடையினம் 5)
குற்றியலிகரம் - 37  ( மேலதுடன்  கேண்மியா எனும் சொல் )
ஐகாரக்குறுக்கம் – 3 ( மொழி முதல், இடை, கடை )
ஒளகாரக்குறுக்கம் – 1 (மொழி முதலில் மட்டும்)
மகரக்குறுக்கம் – 3 ( மருண்ம், போன்ம், ம் முன் வ )
ஆய்தக்குறுக்கம் - 2 ( ல ள ஈற்று இயைபு ஆய்தம் )
     இலக்கண விளக்கம் சார்பெழுத்தின் விரி 240 என்று கூறுகிறது.

           “உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு, உயிரளபு ஏழ்
           ஒற்றளபு பதினொன்று  ஒன்றொன்று ஏனைய
           ஆயிரு நூற்றுஎண் ஐந்தும் அதன் விரியே” (இலக்கண விளக்கம் )
என்பது நூற்பா.

     நன்னூலார் எழுத்தின் எண்ணிக்கையையும் அவை சொல்லினுள் இடம்பெறும் நிலைக்களனையும் எண்ணிக் கூற, இலக்கண விளக்கம் வெறும் எழுத்து எண்ணிக்கையை மட்டுமே விரித்துக் கூறுகிறது.  ஆனால், சுவாமிநாதமோ,

           “உயிர்மெய் நூற்றுஎண் ணிரட்டு உயிரளபுஏழ் ஒற்றின்
           உகுமளவு பதினொன்று ஒரு   இருநூற்று நாற்பான் என்று
           சார்பெழுத்து இருநூற்று எழுபத்தொன்று எண் ஆகும்”

        அதாவது முதல் எழுத்துகள் முப்பத்து ஒன்று.  சார்பெழுத்துகள் இருநூற்று நாற்பது. ஆக இருநூற்று எழுபத்தொன்று.  இந்த நூற்பாவில் கவனிக்க வேண்டியது முதல் எழுத்தையும் கூட்டிச் சொல்லியது தான்.  தற்போது பள்ளிகளில் தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை இருநூற்று நாற்பத்தேழு என்று கூறுவதில் உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகியன இடம்பெறுகின்றன. இந்த எண்ணிக்கை மற்றும் பகுப்புமுறை முத்துவீரியத்தைப் பின்பற்றுவதாக உள்ளது.

அளபெடையின் விரிவு

      மேலும் அளபெடையின் வகைப்பாட்டில் வேற்றுமை காணப்படுகிறது. தொல்காப்பியர் பொதுவாகக் குறிப்பிடும் உயிர் அளபெடையை நன்னூலின் உரையாசிரியர்கள் செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்றாகப் பிரிக்கின்றனர்.  நச்சினர்க்கினியரோ  இயற்கை அளபெடை ( குரீஇ ), செயற்கை அளபெடை ( ஓஒதல் ) என இரு வகையாகக் கூறுவார்.  முத்து வீரியம்,

           “இயற்கை, செயற்கை, இன்னிசை, சொல்லிசை,
           நெடில்,குறில், ஒற்றளபு, எழுத்துப் பேறுஅளபு
           எண்வகைப் படும் என்மனார் புலவர்”(முத்துவீரியம் )

என அளபெடையை எட்டு வகைகளாகப் பாகுபாடு செய்திருப்பது தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் காணப்படாததொன்றாகும்.

குற்றுகர இகரங்களின் விரிவு

           “ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
           ஆய்தத் தொடர்மொழி வன்தொடர்  மென்தொடர்
           ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்” ( தொல். )
           “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்
           ஒற்றிய நகர மிசை நகரமொடு முதலும்”  (தொல்.  )

எனக் குற்றியலுகரத்தின் விரி ஏழு எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
அதாவது,
           தனிமொழிக் குற்றியலுகரம்              -   1
           தொடர்மொழிக் குற்றியலுகரம்         –   5
           மொழிமுதல் குற்றியலுகரம்(நுந்தை)- 1
                வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியன தொல்காப்பியர் கூறும் மொழி முதல் குற்றியலுகரத்தைத் தவிர மேற்சுட்டிய ஆறு விரிகளை எடுத்துரைக்கின்றன. யாப்பருங்கலத்தில்,

           “நெடிலே குறில்இணை குறில்நெடில் என்றிவை
           ஒற்றோடு வருதலோடு குற்றொற்று இறுதிஎன்று
           ஏழ் குற்றுகரக்  கிடக்கென மொழிப” ( யாப்பருங்கலம் )
என வருவதைக்கொண்டு பார்க்கும் பொது குற்றியலுகரத்தின் விரிவு ஏழு ஆகிறது.

     அடுத்து, குற்றியலுகரத்தின் முன் யகரம் முதலான சொற்கள் வரும் போது உகரம் கெட்டு இகரம் தோன்றி நலியும். இது குற்றியலிகரம். இந்தக் குற்றியலிகரம், குற்றியலுகரத்தின் அடியாக வருவதால் அதன் விரியை அப்படியே பெறுகிறது.  மேலும், ‘கேண்மியா’ எனும் சொல்லில் வரும்
 இகர ஒலி குறுகுவதை எல்லா இலக்கண நூல்களும் கூறுகின்றன.

நால்வகைக் குறுக்கங்களின் விரிநிலை

     ஐகாரக் குறுக்கம் மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று களங்களில் இடம்பெறுகிறது. ஒளகாரம் மொழி முதலில் மட்டுமே நிற்கிறது. நன்னூலார்,
           “தற்சுட்டு அளபொழி ஐம் மூவழியும்
           நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்” ( நன்னூல் )
என்பார்.  நேமிநாதம்,
           “மும்மை இடத்து ஐ ஒளவும் குன்றும்” (நேமிநாதம் )
என்கிறது. சுவாமிநாதம்,
           “ஐ ஒள முதல் ஈறு ஒன்றரை இடை ஒன்றாம்”(சுவாமிநாதம்)
என்கிறது. முத்துவீரியம்,  ஐகாரம் மூன்று இடங்களிலும், ஒளகாரம் மொழி முதலிலும் மட்டும் வரும் என்று கூறுகிறது. யாப்பருங்கலம் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் மூன்று இடங்களிலும் வருவதைக் காட்டுகிறது. எனவே, யாப்பருங்கலம், நேமிநாதம், சுவாமிநாதம் ஆகியன மூன்று  இடங்களிலும் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் இடம்பெறும் எனும் கொள்கையில் மாறுபடவில்லை.
     மகரக்குறுக்கம் போலும், மருளும் எனும் சொற்கள் செய்யுளில் போன்ம், மருண்ம் என இடம்பெறும் இரண்டு இடங்களிலும், தொடரில் மகர ஈற்றுச் சொல்லைத் தொடர்ந்து வகரம் முதலான சொல் வரும் இடம் என இம்மூன்று இடங்களிலும் குறுகி ஒலிக்கும் இடங்களாக இருப்பதை எல்லா இலக்கண நூல்களிலும் காணலாம்.
     ஆய்தக்குறுக்கம் ல,ள  ஈற்றுச் சொற்களின் திரிபு ஆகிய இரண்டு இடங்களில் குறுகி ஒலிக்கின்றது.
     இவ்வாறு சார்பெழுத்துகளின் தொகை விரி நிலை காலத்திற்குக் காலம் வேறுபட்டு நிற்கிறது.

சார்பெழுத்துகளின் மாத்திரை அளவு

      எழுத்துகள் ஒலிக்கும் கால அளவைக் கணக்கிட மாத்திரை எனும் முறையை நம் முன்னோர் கையாண்டுள்ளனர். சார்பெழுத்துகள் யாவும் தமது முதல் எழுத்தை அடியொற்றி ஒலிக்கப்பட்டாலும் அதன் ஒலி அளவில் வேறுபடுகின்றன.  அதில், உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகியவற்றின் மாத்திரை அளவைக் குறிப்பிடுவதில் எல்லா இலக்கண நூல்களும் ஒன்றுபடுகின்றன.  ஆனால், ஐகார, ஒளகாரக் குறுக்கங்களின் மாத்திரை அளவுகள் இடத்தைப் பொறுத்து மாறுபடும் கருத்தைச் சொல்வதில் வேறுபடுகின்றன.
      தொல்காப்பியர் ஐகார, ஒளகாரக்குறுக்கங்களுக்கு ஒரு மாத்திரை என்பார்.  ஆனால், இடம் சுட்டவில்லை.
          “ஓரளபு ஆகும் இடனுமார் உண்டே
           தேரும் காலை மொழிவயி னான” (தொல்.)
என்பது நூற்பா.  நன்னூலார் மொழி முதலில் மட்டும் ஐகாரம் ஒன்றரை மாத்திரை. மொழி இடையிலும் கடையிலும் ஒருமாத்திரை என்பார்.   நேமிநாதம் இடம் சுட்டாமல் ஐ, ஒள மொழிக்கண் ஒன்றரை மாத்திரை என்கிறது. இலக்கண விளக்கமும் தொன்னூல் விளக்கமும் முத்துவீரியமும் இடம் சுட்டாமல் ஒரு மாத்திரை என்கின்றன.
     யாப்பருங்கலம் மொழி முதலிடை கடைகளில் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரை பெறும் என்று கூறுகிறது.


           “ஒருசூத் திரத்திற்கு ஒவ்வோர்  ஆசிரியர்
           ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே” (இலக்கணக் கொத்து)
என இலக்கணக் கொத்து கூறுவது போலச் சார்ந்து வரல் மரபினை உடைய சார்பெழுத்துகள் பற்றிய கோட்பாட்டில் தொல்காப்பியம் தொடங்கி ஒவ்வோர் இலக்கண நூல்களும் வேறுபட்டுள்ளன என்பதை அறிகிறோம். இவ்வாறாக, சார்பெழுத்துகளை ஒலிவடிவில் பார்க்கும் போது ஆய்தம் நலிகிறது; அளபெடைகள் நீள்கின்றன; இ, உ, ஐ, ஒள, ம் முதலியன குறுகுகின்றன.

     வரிவடிவக் கோட்பாட்டில் அணுகும் போது தனித்த வரி வடிவம் உள்ள சார்பெழுத்துகளாக உயிர்மெய், ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மகரக் குறுக்கம் ஆகியனவும் வரி வடிவம் இல்லாது குறியீட்டளவில் விளங்குவன உயிரளபெடை, ஒற்றளபெடைகளும், வரி வடிவம் இல்லாது மொழிக்கண் இடம் பெறுவனவாக ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் திகழ்கின்றன.

     செய்யுளில் மட்டும் நீட வந்த உயிரளபெடை நச்சினார்க்கினியரால் இயற்கை அளபெடை, செயற்கை அளபெடை என இரண்டாக விரிவுபடுத்தப்பட்டு முத்துவீரிய காலத்தில் எட்டாக வளர்ந்துள்ளது.

     ஐகாரக் குறுக்கத்தின் மாத்திரை அளவு ஒன்றரை, ஒன்று என வேறு வேறாகக் கூறப்பட்ட போதும் யாப்பில் இடம்பெறும் போது மொழி முதலில் நெடிலாகவும், இடை கடைகளில் குறிலாகவும் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவதை யாப்பிலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன.

     ஒளகாரக் குறுக்கம் மொழியின் மூன்று இடங்களிலும் இடம்பெறும் எனச் சில நூல்கள் கூறினாலும் மொழி இடை, கடைகளில் வருவதற்கான சான்றுகள் இல்லை.

     மகரக்குறுக்கம் புள்ளிபெறும் எனும் வழக்கு  தொல்காப்பியத்திற்கு அடுத்து மறைந்து போய்விட்டது.


     புணர்நிலையில் இடம்பெறும் ஆய்தக் குறுக்கச் சான்றுகள் வழக்கொழிந்த போதும் தொல்காப்பியர் கூறுகின்ற உருவினும் இசையினும் மட்டும் அருகித் தோன்றும் ஆய்தங்கள் வழக்கில் உள்ளன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. சிறந்த இலக்கணப் பதிவு
    பயன்தரும் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. தஞ்சாவூரில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. பதிவைப் படித்தேன். பல சொற்றொடர்கள் புரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து படிக்கவும், புரிந்துகொள்ளவும் முயற்சிப்பேன். ஒரு குறிப்பிட்ட பொருண்மையில் இவ்வாறாக எழுதுவது மிகவும் சிரமமான பணியாகும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

>