திங்கள், 11 ஆகஸ்ட், 2014

மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - ௨ )

சார்பெழுத்துகளின் வடிவம்

     “மொழியின் உயிர் வாய்க்கும் செவிக்கும் இடையே உள்ளது. எழுதுகோலுக்கும் கண்ணுக்கும் இடையே இல்லை” என்பார் அறிஞர் மு.வ. இதன் மூலம் எழுத்தின் ஒலி வடிவமே நிலையானது. வரிவடிவம் மாறும் தன்மையுடையது என்பதை அறிகிறோம்.  பழங்காலத் தமிழிக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் வடிவம் தற்போது நிறைய மாற்றங்களை அடைந்துள்ளது.  சார்பெழுத்துகளின் பகுப்பில் இவ்வரிவடிவமும் முக்கியத்துவம் பெறுவதால் அதனைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.

உயிர்மெய்

      தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்தின் வரிவடிவம் பற்றி நூன்மரபில் உள்ள நூற்பாக்கள் தெளிவுபடுத்துகின்றன.  உயிர்மெய் எழுத்துகள் வரிவடிவம் பற்றிய நூற்பா “புள்ளி இல்லா எல்லா மெய்யும்” என்பது.  உயிர்மெய் எழுத்தானது புள்ளி இழத்தல், உருவு திரிதல் என்ற இரு மாற்றங்களைப் பெறுகின்றன.  உரையாசிரியர்கள் இந்த உருவு திரிதலைக் கால் பெறுதல் (கா), கீழ்விலங்கு பெறுதல் (கு), மேல் விலங்கு பெறுதல் (கி), கொம்பு பெறுதல் (கெ), கொம்பும் காலும் பெறுதல் (கொ) என விவரிக்கின்றனர். உயிர்மெய் வரிவடிவம் பொறுத்த அளவில் பெரியார் வா.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தக் கருத்துகள் தவிர்ந்து மரபு இலக்கண நூல்கள் கூறுவதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆய்தம்

     ஆய்த எழுத்தின் வரிவடிவம் ஆய்வுக்குரியதாக உள்ளது. ஆய்தத்திற்குத் தனியே வரி வடிவம் இல்லை என்றும் அது உரசொலியை ஏற்படுத்துகின்ற ஒரு குறியீடு என்றே வாதிடுகின்றனர்.  இந்தி மொழியிலும் : எனும் குறியீடு ‘அஹ்’ எனும் ஒலியை ஏற்படுத்த வருவதைச் சுட்டுவர்.  தொல்காப்பியர் “ஆய்தம் என்ற முப்பாற் புள்ளி” என்று குறிப்பிடுவதால் ஆய்த எழுத்து புள்ளிகள் இட்டு எழுதப்பட்டதெனக் கூறுவார். ஆனால், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் முதலான நூல்களில் இதன் வடிவம் கூறப்படவில்லை.
     கி.பி.800 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசக்குடிச் செப்பேட்டில் ஆய்த எழுத்து தலைகீழ்ப் பிறைக் குறியின் மேலும் கீழும் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது என்றும்,  திருச்செந்துர்க் கல்வெட்டில் வகுத்தல் குறி போல எழுதப்பட்டுள்ளது என்றும் முனைவர் காசிராஜன் கூறுகிறார்.  மேலும் நச்சினார்க்கினியர் காலத்தில் ஆய்த எழுத்து முக்காற்புள்ளி ( : ) யாக எழுதப்பட்டுள்ளது, வீரமாமுனிவர் முப்புள்ளியிட்டு எழுதினார் என்றும் கூறுகிறார்.
     “ஆய்த எழுத்து அடுப்புக் கட்டி போன்ற வடிவத்தினது. அடுப்பில் நெருப்பை அணைக்கும்போது உண்டாகும் ஓசையை ஒருபுடை ஒத்திருப்பதால் ஒருகால் அதன் வரி வடிவு அடுப்புக் கூட்டுப் போல் முப்புள்ளி வடிவில் அமைக்கப்பட்டிருக்கலாம்” என கிரேசிளின் பாலினோ என்பார் கூறுகிறார்.
           “எகர ஒகர உயிர் மிசை ஒற்றின்
           புள்ளி வைத்தமை பொறாஅது ஒருவினர்
           வாழி என்றே வழுத்துதும் யாமே” ( அறுவகை இலக்கணம் )
என வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்த்திருத்ததைப் போற்றும் அறுவகை இலக்கண நூலாசிரியரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,
           “----------------------------------------- உரித்த தேங்காய்க்
           கண்போல் முச்சுழி கவினுறக் காட்டல்
           ஆய்தம்”               ( அறுவகை இலக்கணம் )
என ஆய்த எழுத்தின் வடிவத்தை விளக்குகிறார்.  எப்படிப் பார்க்கினும் ஆய்த எழுத்தை எழுத, எழுதுகோலால் மூன்று முறை ஒற்றும் முயற்சி இருந்துள்ளமை அறியலாகிறது.

அளபெடைகளின் வடிவம்

     செய்யுளில் ஓசையை நிறைவு செய்ய வருவன அளபெடை.  உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் நீண்டு அளபெடுக்கும். அவ்வாறு அளபெடுக்கும் போது அதன் இனக் குறில் அடையாளமாகப் பக்கத்தில் எழுதப்படும்.
           “குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
           நெட்டெழுத்து இம்பர் ஒத்தகுற் றெழுத்தே”  (தொல். )
என்கிறது தொல்காப்பியம்.  மேலும்,
           “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
           கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்”  ( தொல்.  )
என்றும் கூறுவதால் உயிரளபெடை நெடில் + குறில் இணைத்து எழுதப்பட்டது. இனம் இல்லாத எழுத்துகளான ஐகாரம் இகரத்தையும், ஒளகாரம் உகரத்தையும் அடையாளக் குறியாகப் பெற்றன.
     இதே போல ஒற்று அளபெடுக்கும் சூழல் நேரும்போது அதே ஒற்று மறுமுறை எழுதப்பட்டது.  அளபெடை எழுத்துகளின் வரிவடிவத்தில் இலக்கண நூல்கள் யாவும் ஒரே கருத்துகளையே கூறுகின்றன.குற்றியலுகரமும் குற்றியலிகரமும்

      வடிவம் பற்றிய சிந்தனையில் குற்றியலுகரமும் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில் தொல்காப்பியர் குற்றியலுகரம் புள்ளிபெறும் என்கிறார்.
           “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”
           “குற்றிய லுகரமும் அற்று என மொழிப”  ( தொல். )
என்ற நூற்பாக்களால் குற்றுகரம் புள்ளியிட்டு எழுதப்பட்ட நிலையை அறிகிறோம்.  மேலும், உகர எழுத்துக்கு ஒரு மாத்திரை. குறுகும் உகரத்திற்கு அரை மாத்திரை.
     பொதுவாக எழுத்துகள் தன் மாத்திரையில் இருந்து பாதி அளவு குறையும் போது புள்ளியிடப்பட்டது. இந்தக் கோட்பாட்டைத் தொல்காப்பியத்தின் மூலமே அறியலாம்.  மகர ஒற்று ஏற்கெனவே ஒற்றுடன் உள்ளது. இது மேலும் குறுகும்போது மகரத்தின் உள்ளேயும் ஒரு புள்ளியிட்டு எழுதும் வழக்கை,
           “உட்பெறு புள்ளி உருவா கும்மே” ( தொல். )
எனும் நூற்பாவால் தெளியலாம்.  எனவே, உகரம் பாதி அளவில் குறைந்ததால் புள்ளியிட்டு எழுதப்பட்டது.  சிலர், குற்றியலுகரம் புணர்ச்சியின் போது உகரம் கெட்டு மெய் ஈறாக நின்று சேர்வதால் புள்ளியிட்டு எழுதப்பட்டது என்றும் கூறுவர். யாப்பிலக்கணத்தில் குற்றியலுகரச் சொற்கள் முன் வருமொழியில் உயிர் வரும் போது உகரம் கெடும் என்பதை அறிவிக்கும் குறியீடாகவும்  புள்ளியிட்டு எழுதப்பட்டிருக்கலாம்.
           “குற்றிய லிகரமும் குற்றிய லுகரமும்
           மற்றவை தாமே புள்ளி பெறுமே”
எனச் சங்கயாப்பு எனும் நூல் கூறுவதாக யாப்பருங்கலம் நவில்கிறது. நச்சினார்கினியரும் முத்துவீரிய ஆசிரியரும் குற்றியலுகர குற்றியலிகரங்கள் புள்ளி பெற்று வழங்கின எனச் சுட்டுகின்றனர்.
     “குற்றியலுகரம் என்பது உகரத்தின் திரிபு அல்லது மாற்றுஒலி அல்ல. அது வல்லெழுத்தை உச்சரிக்கின்றபோது ஏற்படுகின்ற விடுப்பொலி அல்லது வழுக்கொலி. குற்றியலிகரமும் இதைப் போன்றதே” என்கிறார் முனைவர் காசிராஜன்.  எனவே, உரசொலி உண்டாக்கும் ஆய்தம் ஒற்றுகளிட்டு அடையாளப்படுத்தப்பட்டது போலக் குற்றுகர இகரங்கள் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளன.
     நால்வகைக் குறுக்கங்களில் மகரக் குறுக்கத்திற்கு மட்டும் குறியீட்டு வடிவம் இருந்தமையைத் தொல்காப்பியர் மூலமாக அறிகிறோம்.
           “அரைஅளபு குறுகல் மகரம் உடைத்தே
           இசையிடன் அருகும் தெரியும் காலை”
           “உட்பெறு புள்ளி உருவா கும்மே”   ( தொல். )

என்ற நூற்பாக்கள் மகர ஒற்று மேலும் ஓர் ஒற்றை உள்ளே இட்டு எழுதப்பட்டுள்ளது.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - 1)


மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள்


      தமிழ் மொழியில் மரபு இலக்கண நூல்கள் யாவும் எழுத்துகளை முதல், சார்பு என வகைப்படுத்தியுள்ளன.  இவற்றில் சார்பெழுத்து உட்பிரிவில், தொகைகளைக் குறிப்பிடுவதில் ஒவ்வோர் இலக்கணிகளும் வேறுபட்டுள்ளனர். மேலும் சார்பெழுத்துப் பற்றிய கொள்கைகளைக் கையாளுவதில் ஒவ்வோர் ஆசிரியரும் முரண்பட்டுள்ளனர்.  தொல்காப்பியத்தைத் தொடர்ந்து வீரசோழியம், நேமிநாதம், இலக்கண விளக்கம், இலக்கணக்கொத்து, தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் முதலான நூல்கள் மரபு இலக்கணத்தை அவ்வப்போது மீட்டுருவாக்கம் செய்து வந்துள்ளன. இவற்றில் சார்பெழுத்துகளின் பன்முகத் தன்மைகளை இக்கட்டுரை முன்னெடுத்துச் செல்கிறது.

சார்பெழுத்துகளின் மீட்டுருவாக்க வகைப்பாடு

      பொதுவாக எழுத்துகளுக்கு ஒலிவடிவம், வரி வடிவம் ஆகிய இரு கூறுகள் முக்கியமானவை.  வரிவடிவம் காலத்திற்குக் காலம் மாறுபட்டு வந்துள்ளது.  பிராமி எழுத்து, வட்டெழுத்து எனப் பரிணமித்த இவ்வெழுத்துகள் தற்போதைய நிலையை எய்தியுள்ளன.  ஆனால், ஒலிவடிவம் மாறுபடாதது.  முதல் எழுத்துகள் யாவும் தனித்த ஒலியைக் கொண்டவை.  சார்பெழுத்துகள் யாவும் முதல் எழுத்தைச் சார்ந்தே ஒலியைப் பெறுகின்றன. ஒலியைக் கணக்கிட இலக்கண ஆசிரியர்கள் மாத்திரை முறையைக் கையாண்டுள்ளனர். மேலும் சார்பெழுத்துகள் இயங்குகின்ற களங்கள் முக்கியமானவை. மொழி முதல், இடை, கடை என்பவற்றுடன் புணர்நிலை இயல்பு முதலானவை அக்களங்கள். எனவே, சார்பெழுத்துகள் மீட்டுருவாக்கம் பெற்றுள்ளமையை  
                 அ. எண்ணிக்கை
                ஆ. வடிவம்
                இ. வகை தொகை முறை
                ஈ. மாத்திரை முறை
ஆகிய கூறுகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளன. இதனால் சார்பெழுத்துகளின் உண்மையான தன்மையை அறிந்துணர முடியும்.

சார்பெழுத்துகளின் எண்ணிக்கை

      தமிழ் மொழியில் தற்போது கிடைக்கின்ற இலக்கண நூல்களில் பழமையானது தொல்காப்பியம். இந்த இலக்கண நூலை வேராகக் கொண்டு பல்வேறு கால கட்டங்களில் தமிழில் பல்வேறு இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன.  மேலும், பிற்காலத்தே தோன்றிய நூல்கள் காலத்திற்குத் தக்கவாறு மாற்றங்களையும் அடைந்துள்ளன. ஒவ்வோர் இலக்கண நூலும் அதற்கு முந்தைய நூலின் கருத்தைப் பொன்போல் போற்றியும் உரையாசிரியர்களின் கருத்தை ஏற்றியும் கூறியுள்ளனர்.
            “எழுத்தெனப் படுப
            அகர முதல னகர இறுவாய்
            முப்பதென்ப
            சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே”
            ‘அவைதாம்
            குற்றிய லிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
            முப்பாற் புள்ளியும் எழுத்தோர் அன்ன”  (தொல். )

     இந்நூற்பாக்களின் மூலம் தொல்காப்பியர் சார்ந்து வரல் மரபையுடைய எழுத்துகள் மூன்று. அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்று கூறியுள்ளார். “சார்ந்துவரல் மரபின்”, “சார்ந்துவரின் அல்லது”  எனத் தொல்காப்பியர் இவ்வெழுத்துகளைக் குறிக்கின்றார் அன்றித் தனியாகச் சார்பெழுத்து என்று பெயரிடவில்லை. மேலும் பிற்காலத்தே கூறப்பட்டுள்ள ஏனைய சார்பெழுத்துகள் பற்றிய குறிப்புகளும் தொல்காப்பியத்தில் ஆங்காங்கே பயின்று வந்துள்ளன.  “புள்ளி இல்லா எல்லா மெய்யும்” எனும் நூற்பா உயிர்மெய் பற்றியும், “குன்றிசை மொழிவயின்” எனும் நூற்பா உயிரளபெடையையும், “அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்” என்பது ஒற்றளபெடையையும், “ஓரளபாகும் இடனுமாருண்டே” என்பது ஐகார ஒளகாரக் குறுக்கங்களையும், “அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே” எனும் நூற்பா மகரக் குறுக்கத்தையும், “உருவினும் இசையினும் அருகித் தோன்றும்” என்பது ஆய்தக் குறுக்கத்தையும் சுட்டுவனவாக அமைந்துள்ளன.
      தொல்காப்பியத்திற்கு அடுத்துத் தோன்றிய நூலான வீரசோழியம் முதல், சார்பு என்ற வகைப்பாட்டைப் பின்பற்றவில்லை.

     “அறிந்த எழுத்து அம்முன் பன்னிரண்டு ஆவிகள் ஆனகம்முன்
      பிறந்த பதினெட்டு மெய்நாடு ஆடிதம் பெயர்த்து இடையா
      முறிந்தன”      ( வீரசோழியம் )

இந்நூற்பாவில் கவனிக்கத்தக்கது ஆய்த எழுத்து உயிருக்கும் மெய்க்கும் நடுவில் இடம் பெறச் செய்திருப்பது. மேலும் அடுத்தடுத்த நூற்பாக்களில் உயிரளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், வர்க்கத்தொற்று பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
     எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த நேமிநாதம் முதல், சார்பு என்ற முறையைப் பின்பற்றாமல் முதல் வைப்பு, இரண்டாம் வைப்பு என்று கூறியுள்ளது.

     “ஆவி அகரமுதல் ஆறுஇரண்டாம் ஆய்தமிடை
     மேவும் ககரமுதல் மெய்களாம் “ ( நேமிநாதம் )

என முதல் வைப்பில் உயிருக்கும், மெய்க்கும் இடையில் ஆய்த எழுத்தும் இடம்பெற்றுள்ளது. அடுத்து, இரண்டாம் வைப்பில் உயிர்மெய், வர்க்கத்தொற்று, அளபெடைகள் இடம்பெறக் காண்கிறோம்.
      எழுத்துகளை முதல் எழுத்து, சார்பெழுத்து எனப் பெயரிட்டு வகைப்படுத்தியவர் நன்னூலாரே.  முதல் எழுத்துகள் முப்பது. சார்பெழுத்துகள் பத்து எனவும் கூறியதுடன் சார்பெழுத்தின் விரியையும் எடுத்துரைத்துள்ளார்.

           “உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
           அகிய இ உ ஐ ஒள மகான்                         
           தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும்”   (நன்னூல்  )

எனும் நூற்பா பத்துச் சார்பெழுத்துகளையும் பட்டியலிடுகின்றது.
     பிற்காலத்தே தோன்றிய இலக்கண நூலான இலக்கண விளக்கம், நன்னூலார் கூறியுள்ள சார்பெழுத்துகளில் ஆய்தக் குறுக்கத்தை மட்டும் ஏற்கவில்லை. ஏனைய ஒன்பது சார்பெழுத்துகளையும் கூறுகிறது. வீரமாமுனிவர் தனது தொன்னூல் விளக்கத்தில் நன்னூலாரின் பத்துச் சார்பெழுத்துகளையும் அப்படியே வழிமொழிகின்றார்.  ஆனால், முத்துவீரியம்

           “சார்புஉயிர் மெய்தனி நிலைஇரு பாலன”  (முத்துவீரியம் )

எனும் நூற்பா மூலம் உயிர்மெய், ஆய்தம் ஆகிய இரண்டு மட்டுமே சார்பெழுத்துகள் என்று கூறுகிறது.
     இப்படித் தொல்காப்பியர் காலம் தொட்டுச் சார்பெழுத்துகளின் எண்ணிக்கையில் அல்லது வகைப்பாட்டைப் பகுப்பதில் முரண்பாடுகள் ஏற்படக் காரணம் யாதென எண்ணிப் பார்க்கலாம்.  செய்யுள் வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பெரும்பான்மை இடம்பெறுதல் கருதிக் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற இம்மூன்றைத் தொல்காப்பியர் சார்ந்து வரல் மரபை உடைய எழுத்துகளாக வகைப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் பிற சார்பெழுத்துகள் பற்றி ஆங்காங்கே கூறியுள்ள போதும் அவற்றைச் சார்பு எனும் எல்லைக்குள் தொல்காப்பியர் கொண்டுவரவில்லை.  மகர, ஆய்தக் குறுக்கங்கள் மிகச் சிறுபான்மை. ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் வழக்கில் காணப்பட்டாலும் செய்யுளில் திரிபடைவதில்லை.  அளபெடைகள் பெரும்பான்மை செய்யுளுக்கே உரியன. எனவே தான் குற்றியலுகரத்தையும், அதன் திரிபாக வரும் குற்றியலிகரத்தையும் தன் அருகிலுள்ள எழுத்தின் ஒலியை மாற்றச் செய்கின்ற ஆய்தத்தையும் சார்பெழுத்துகளாகக் கொண்டார்.
     வீரசோழியமும் நேமிநாதமும் தமிழ் நெடுங்கணக்கு முறையைப் பின்பற்றியுள்ளன. உயிர், ஆய்தம், மெய் என்ற வரிசையில் எழுத்துகளைக் கூறுவதும், அடுத்த வைப்பு முறையில் வருக்கத்தொற்று ( இன எழுத்து) என்பதைச் சேர்த்திருப்பதும் புதுமையாக உள்ளது.  இலக்கண விளக்கம் ஆய்தக் குறுக்கம் பயன்பாட்டில் அருகிய நிலை கருதிச் சொல்லாமல் விட்டுவிட்டது. நன்னூலார் தனித்த ஒலியை உடையன முதல் எழுத்து என்றதுடன், முதல் எழுத்துகளை யாதேனும் ஒருவகையில் சார்ந்து வருவதால் சார்பெழுத்து வகைக்குள் பத்தினையும் அடக்கிவிட்டார் எனலாம்.
     முத்துவீரியம் உயிர்மெய், ஆய்தம் என்ற இரண்டினை மட்டும் சார்பு எனக் கொள்வதற்குக் காரணம் எண்ணிப் பார்க்கும்போது அது தனி எழுத்தொலிக் கோட்பாட்டை வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது.  உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த போதும் உயிர்மெய் உயிரின் அளவையே தனித்துப் பெறுகிறது. ஆய்த எழுத்து தனக்கு அடுத்து வரும் வல்லோசையை உரசொலியாக மாற்றுகிறது. ஆனால், இதர சார்பெழுத்துகளாகச் சுட்டப்படுவன புணர்நிலைக்கு உட்பட்டதாகவும் செய்யுளில் மட்டுமே வருவதாகவும், சொல்லுக்குள் மட்டுமே அகப்பட்டதாகவும் உள்ளன. அதனால் உயிர்மெய்யும் ஆய்தமும் மட்டுமே முத்துவீரியத்தில் சார்புகளாயின.  ஆனால், இன்றைய மொழிநூல் கொள்கையின்படி பார்த்தால் நன்னூலார் கூறுகின்ற பத்தும் சார்பெழுத்துகளாகக் கூறலாம். ஏனெனில் அவை யாவும் முதல் எழுத்தின் ஒலியையே சார்ந்து இயங்குகின்றன.
           “சார்பெழுத்து ஏனவும் தம்முதல் அனைய”  (நன்னூல் )

எனும் பிறப்பியல் நூற்பா இதனை உறுதிபடுத்துகின்றது.   
>