செவ்வாய், 8 ஜூலை, 2014

கேள்விக் கனல்கள்

கேள்விக் கனல் 
              காலம் இப்போதெல்லாம் மிக விரைவாக முன்னேறுகிறது.  நேற்று நான் ஓர் இடுகை இட்டு முடிந்த பின் தான் எவ்வளவு நிகழ்வுகள்.  இது போட்டி யுகம். விரைந்து செயல்பட வேண்டும். நான் ரொம்ப சொங்கி. இதற்குப் பல  காரணங்கள் அடுக்குவது கூட எனது சோம்பேறித்தனத்தையே வெளிப்படுத்துகின்றன.  இடுகைக்கான பின்னோட்டத்திற்குப் பதில் தரக் கூட எனக்குக் கூடுவதில்லை.  இதோ இப்போது அவசர அவசரமாகத் தேர்வு அறையில் தேர்வெழுதும் மாணவனாக நான் தடுமாறித் தடுமாறித் தட்டச்சு செய்கிறேன்.  அவசரத்துல அண்டாவிலும் கை நுழையாது... சரிதான்.

        நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது என் தமிழாசிரியர் சொன்ன கருத்து: “ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியை அரங்கேற்றம் செய்த போது ஒவ்வொரு பாட்டிலும் லயித்துப் போன அரசன் ஒவ்வொரு பொன் தேங்காய் பரிசாகத் தந்தான்”. இப்போது எதற்கு இந்த கருத்து என்று நீங்கள் கேட்கலாம்.  தற்போதெல்லாம் போட்டித் தேர்வில் கேட்கப்படுகின்ற வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் இப்படிப் பொன் தேங்காய் வாரி வழங்கப் படுகின்றதோ எனும் ஐயம் எழுகின்றது. கடந்த மாதம் நடைபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர்க்கான முதனிலைத் தேர்வை நானும் எழுதினேன். வினாக்கள் ஒவ்வொன்றும் தெரிந்தது தான். ஆனால் பதில் தெரிவதில் தான் தடுமாற்றம்,  “அட எங்க இருந்து தான் இப்படி கேள்வி எடுப்பாங்களோ தெரியலை” என்ற குரலைப் பரவலாகத் தேர்வு மையத்தில் கேட்க முடிந்தது.

         இன்று காலையில் எனது செல்பேசி மூலமாக வளரும் கவிதை வலைப் பக்கத்தை உலாவி வரும் போது, நேற்றைய இடுகையில் ஐயா அவர்கள் பல வினாக்களை எழுப்பியுள்ளார்.  வினாக்கள்... தெரியும்....ஆனால் தெரியாது என்று நக்கல் அடிப்பது போல இருக்கின்றன.  ஒரு வேளை முத்துநிலவன் ஐயா தான் இது போன்ற வினாக்களின் ஊற்றோ எனும் எண்ணம் எழுந்தது. நமது தமிழ் மொழியில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியமான வினாக்கள் சார்ந்த பதிவு மிக அருமை.  இந்த வினாக்கள் புதுக்கோட்டையில் நான் பணிபுரிந்த போது ஐயா அவர்களின் தமிழாசிரியர்கள் கருத்தாய்வுக்  கூட்டத்தில்  கலந்து கொண்ட போதே அறிந்து கொண்டேன். முத்துநிலவன் ஐயா அவர்கள் வினாக்களுக்கான விடைத் தேடலை ஜோசப் விஜு ஐயா மற்றும் எனது வலைப் பக்கத்தில் பார்க்குமாறு செய்து விடை பெற்றுள்ளார்.  ஆனால் ஜோசப் ஐயா வேகத்தில் சூரிய ஒளியை மிஞ்சிவிட்டார். இதோ இப்போது தான் எனது வலைப்பக்கத்தில் தட்டெழுத்துத் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

1.    குமரியில் உள்ள வள்ளுவர் சிலையின் உயரம் என்ன?
            --133அடி
2.    சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் எது?
---நன்னூல்.
3.    அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்வரி இடம்பெற்ற நூல் எது?
--கம்பராமாயணம்.
4.    பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் எது?
--பரிபாடல்.
5.    தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் பழந்தமிழ் நூல் எது?
--புறநானூறு.
6.    ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று கூறியவர் யார்?
---திருமூலர்
7.    சாதி இரண்டொழிய வேறில்லை என்ற வரிகள் யாருடையவை?
--ஔவையார்
8.    சாம்போதும் தமிழ்படித்துச் சாதல்வேண்டும்என்றவர் யார்?
--இலங்கைக் கவிஞர் சச்சிதானந்தன்.
9.    தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?
--குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை (வ.வே.சுப்பிரமணியர்)
10. கண்ணதாசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் எது?
--சேரமான் காதலி.
11. தீ இனிதுஎன்று பாடிய கவிஞர் யார்?
--பாரதியின் வசனகவிதை
12. புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்என்ற கவிஞர் யார்?
--அப்துல் ரகுமான்.
13. முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளேஎன்ற கவிஞர் யார்?
--பாரதிதாசன்.
14. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை பின்னர் நாவலாக வளர்ந்தது?
--அக்னிப்பிரவேசம்.
15. பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப்போறேன்  என்றவர் யார்?
--பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
16. தன் மனைவியை இறைவனுக்காக விட்டுக்கொடுத்த நாயனார் யார்?
--இயற்பகை நாயனார்.
17. கடவுளும் கந்தசாமியும் சிறுகதை ஆசிரியர் யார்?
--புதுமைப்பித்தன்
18. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட அண்ணாவின் நாவல் எது?
--குமரிக்கோட்டம்
19. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் யார்?
--கோபாலகிருஷ்ண பாரதி
20. பண்ணாய்வான் பசு எனப் புகழப்படும் இசைத்தமிழறிஞர் யார்?
--குடந்தை ப.சுந்தரேசனார்.
21. வள்ளலாரின் கீர்த்தனைகள் அருட்பா அல்ல, மருட்பா என்றவர் யார்?
--யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை
22. இருபத்துநாலாயிரம் நபிகளில் ஒரு பெண்நபிகூட இல்லையே? ஏன் வாப்பா யார் எழுதிய கவிதை?
--எச்.ஜி.ரசூல்
23. காவிய காலம்என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?
--வையாபுரியார்.
24. புதுக்கவிதை சொற்கள் கொண்டாடும் சுதந்திரதின விழா“ –என்றவர் யார்?
--வைரமுத்து
25.  “இரவில் வாங்கினோம், விடியவே இல்லை“ –என்ற கவிஞர் யார்?
 --சேலம் ம.அரங்கநாதன்

 
 மேலும் சில,
“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ”என்று கூறியவர் யார்?
                       பட்டினத்தார்
“இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே” பாடிய புலவர் யார்?        பக்குடுக்கை நன்கணியார்
(“உண்டாலம்ம இவ்வுலகம்”  கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி)
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” வரிகள் இடம் பெற்ற நூல்கள்
               புறநானூறு, மணிமேகலை
தமிழில் விருத்தப்பாவில் எழுந்த முதல் காப்பியம்?   சீவகசிந்தாமணி
     ( கம்பராமாயணம் இல்லை)
ஐம்பெரும்காப்பியம் எனும் வழக்கை முதலில் கையாண்டவர்? மயிலை நாதர்
“ யான் பெற்ற பெரு பெருக இவ்வையகம்”, “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” எனக் கூறியவர்?
             திருமூலர்
“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்றவர்
             நாமக்கல் கவிஞர் ( பாரதிதாசன் இல்லை)
“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வரி இடம்பெறும் நூல்?
              மனோன்மணியம்
“காக்கை விடு தூது” நூலாசிரியர் யார்? வெள்ளைவாரணர்

       என்னங்க நீங்க... நாங்க எடுக்குரதுக்கு முன்னாடியே நீங்க எடுத்துட்ரிங்க நீங்க ரொம்ப பாஸ்ட்...
இது வடிவேலு வசனம் தான்.  இப்படிதான் எதையும் கொஞ்சம் பிளான் பண்ணி தான் வினாக்கள் எடுக்கிறார்கள் போலும்.  இருந்தாலும் நாமும் கொஞ்சம் தெரிஞ்சுக்கூனும். 
      இப்பொழுதெல்லாம் இளைய தலைமுறை நிறைய கற்க விரும்புகிறது. போட்டித் தேர்வுகள் மிகவும் கடுமை ஆகின்றன.  தமிழ் நாட்டில் நடக்கின்ற குருப் ஒன்றுக்கான முதன்மைத் தேர்வுகளில் கூட தமிழுக்கு இடம் இல்லை. ஒரு வினா கூட கேட்கப் படுவதில்லை. இதெல்லாம் தமிழுக்கும் தமிழ் கற்கின்ற நம் மாணவர்களுக்கும் இழப்பே.  கவனிக்க வேண்டும் தேர்வாணையம்.  
      சரிங்க ரொம்ப நேரம் ஆய்டுச்சு. அப்பிடியே போறப்ப உங்களுக்கு ஒரு கேள்வி:  ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் நமக்குத் தெரியும். ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் இருக்கா?????????????????????????


18 கருத்துகள்:

 1. புலவர்க்கு
  உங்கள் அறிவென்னுள் ஆர்வத்தைக் கிளர்த்துகிறது.
  “கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
  அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
  நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
  மாட்டாதான் நல்ல மரம்”
  “ வாசியா நின்றான் “ என வாசித்து நின்றானில் உங்கள் கேள்வியின் குறிப்பறிந்தேன் அய்யா!
  இஃது ஆநின்று எனும் நிகழ்கால இடைநிலைகளில் ஒன்றென்பது மென் கருத்து.

  பதிலளிநீக்கு
 2. நன்றி கோபி.
  நம்பிக்கையோடு இருக்கிறேன் - உங்கள் தேர்வு முடிவுக்காக...
  ஈகெஎமவிஎ - தெரியலயே சாமி! நீங்கள்தான் விளக்கணும்.
  விஜூ அய்யா சொல்வது புரிவது போல உள்ளது...ஆனா புரியலயே?
  இன்னும் புகழ்பெற்ற தொடர்களைப் பட்டியலிட்டுத் தொடர்ந்தால் பலருக்கும் பயன்படும்.. முயற்சிசெய்யலாமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிப்பிற்குரிய முத்துநிலவன் அய்யாவிற்கு!
   “ நீட்டோலை வாசியா நின்றான் “ என்பதில்
   “ வாசியா நின்றான் “ என்பதை “ வாசியாமல் நின்றான் “ எனப் விரிக்க வேண்டும்.
   இங்கு வாசித்தல் என்பதன் எதிர்மறை “ வாசியாமல்“ அதிலுள்ள
   ‘ மல் ‘ எனும் ஈறு கெட்டது.
   அது நின்றான் எனும் வினைகொண்டு முடிந்ததால்
   ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் ஆயிற்று.
   இது போல் வருவதைத்தான் புலவர் ஐயா ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் என்பார் எனக் கருதியே இது குறித்தேன். சரியா என்பதைப் புலவர் அய்யா தான் விளக்க வேண்டும்.
   அடுத்து “ வாசியாநின்றான் “ என்பதை எதிர்மறையாய்க் கொள்ளாது அதன் இடையில் உள்ள ஆநின்று என்பதை நிகழ்கால இடைநிலையாகக் கொண்டு “வாசிப்பவன்“ எனப் பொருள் கொள்ளுதலும் ஒன்று.
   இப்பாட்டினுக்கு இரண்டாம் இலக்கண அமைதியே சிறக்கும் என்பது என் கருத்து.
   ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் சரியா என்ற விளக்கத்தை புலவர் அய்யாதான் கூறவேண்டும்.
   பதில் காண விழைவுடன் காத்திருக்கிறேன்.
   இப்படிக்குத்
   தங்களின் மாணவன்.

   நீக்கு
  2. விஜு ஐயாவிற்கு வணக்கம். ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் என்ற சொல்லாடல் இலக்கண நூல்களில் எனக்குத் தெரிந்தவரை எங்கும் தென்படவில்லை. பயிற்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அங்குப் புதிதாகக் கேட்கப்பட்ட வினா இது. இதற்குச் சான்று நீங்கள் சொன்னது போலவே ஆ நின்று வருமாறே பலரும் கூறினர். நீண்ட நாள்களாகவே எனக்கு இந்த ஐயம். இதில் நான் அமைத்துக் கொண்ட கருத்து: உடன்பாட்டு வினைஎச்சச் சொல் எதிர்மறை ஆக்கிப் பின் ஈறு கெட்டு அது வினைச் சொல்லை ஏற்க வேண்டும். இது போல அமைத்துப் பார்த்தால், கேளா இருந்தான், வாளாக் கிடந்தான் போன்ற தொடர்களே அமைகின்றன. இன்னொன்று, இந்த மாதிரி ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் என்பதில் முடிகின்ற வினைச் சொல் துணை வினைகளாகவே அமைவதைப் பார்க்கின்றேன். இன்னொரு நண்பர் இதற்கு "இன்னா செய்" எனும் சான்றைக் கூறினார். இதில் இன்னா என்பது வினைச் சொல்லாக இல்லை. அதனால் இதற்குப் பேச்சு வழக்கில் சான்று இன்னும் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். நன்றி ஐயா.

   நீக்கு
  3. அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ளப் பார்க்கிறேன்..மிக்க நன்றி உங்கள் மூவருக்கும். :)

   நீக்கு
  4. அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகிறேன், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல. மிக்க நன்றி உங்கள் மூவருக்கும்.

   நீக்கு
  5. அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகிறேன், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல. மிக்க நன்றி உங்கள் மூவருக்கும்.

   நீக்கு
  6. அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகிறேன், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல. மிக்க நன்றி உங்கள் மூவருக்கும்.

   நீக்கு
  7. அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகிறேன், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல. மிக்க நன்றி உங்கள் மூவருக்கும்.

   நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 3. பலவற்றை அறிந்தேன்... ஆசிரியருக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 4. தங்கள்
  அறிமுகம் நன்று
  நறுக்கான பதில்கள்
  தமிழ் அறிய வைக்கும்
  அருமையான முயற்சி!

  பதிலளிநீக்கு
 5. தங்கள் தளத்தை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன்.
  நேரம் வாய்க்கும் போது பார்க்கவும்.//http://blogintamil.blogspot.in/2014/07/depth-in-writing-big-b.html?showComment=1405525733281#c2746730877402195880//
  நன்றி சகோ!!

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் தோழர் ...
  வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழர்
  http://www.malartharu.org/2012/12/blog-post_4245.html

  பதிலளிநீக்கு
 7. தமிழனெல்லாம் மாடு ஆகணுமா? அப்படித்தானே இருக்கறீங்க

  பதிலளிநீக்கு

>