திங்கள், 7 ஜூலை, 2014

குறுக்கங்களும் தருக்கங்களும்

        சார்பெழுத்துகளுள் ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் உள்ளன. தொல்காப்பியர் நெறிப்படி குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றே சார்பெழுத்துகள்.  ஆனாலும், உரையாசிரியர்கல் ஆங்காங்கே கூறிய செய்திகளின் தொகையாகப் பவணந்தியார் காலத்தில் சார்பெழுத்துகள் எண்ணிக்கை பத்தாயின.  தொல்காப்பிய நூன்மரபு இயலின் ஒழிபே மொழிமரபு என்று சிவஞான முனிவர் கூறுவார். இந்தப் பதிவில் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் குறித்துப் பேசுவோம்.

      ஐகாரத்திற்கு அதாவது ஐ எனும் எழுத்திற்கு மாத்திரை இரண்டு.  ஆனால், இதே ஐ எனும் ஒலி மொழியில் இடம்பெறும் போது தன் மாத்திரையில் குறைகிறது.  மொழி முதலில் ஒன்றரை மாத்திரை. மொழி இடை, கடைகளில் ஒரு மாத்திரை. அதே போல ஒள தனியாக ஒலிக்கும் போது இரண்டு மாத்திரை. மொழி முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை. ஒள மொழி இடை கடைகளில் வராது. இந்த இலக்கணத்தைத் தமிழ் கற்ற அனைவரும் அறிவர்.

           “தற்சுட் டளபொழி ஐம்மூ வழியும்
            நையும் ஒளவும் முதலற் றாகும்”  (நன்னூல்)

       இந்த ஐகார, ஓலைகாரக் குறுக்கம் பற்றி வெளிப்படையாகத் தொல்காப்பியத்தில் இல்லை என்றாலும் நான் கல்லூரியில் பயின்ற போது எனது இலக்கண ஆசிரியர் நுண்ணிதின் கூறிய செய்தியைத் தற்போது பகிர்ந்து கொள்கிறேன். தொல்காப்பிய மொழி மரபு இயலில்,

           “ஐஒள   என்னும்  ஆயீ ரெழுத்திற்கு
           இகர   உகரம் இசைநிறை  வாகும்” (தொல்காப்பியம்)

எனும் நூற்பாவை நோக்குங்கள்.  இந்த நூற்பா அளபெடை விளக்கத்திற்குப் பின்வரும் நூற்பா. இதில் இருந்து ஐகாரக்குறுக்கம் பற்றியும் உயிரளபெடை பற்றியும் அறியலாம். முதலில் ‘இசைநிறைவாகும்’  என்றதால் இசைநிறை அளபெடை மட்டுமே கூறியுள்ளது புலனாகிறது. மற்றொன்று ஐகாரம் மொழியில் ( சொல்லில்) வந்தால் இசை நிறைவாக இராது என்பதும் புலனாகிறது. எனவே, ஐகாரம் குறுகுவதை இந்நூற்பா ஒருவாறு சுட்டுகிறது.  உயில அளபெடை வகைப்பாடுகள் பிற்காலத்தே எழுந்தவை. அதை வேறொரு பதிவில் காண்போம். சரி.  இந்த ஐ எவ்வளவு மாத்திரை குறுகுகிறது என்பதில் தெளிவு இல்லை. முன் கூறியவாறு நன்னூலில் மட்டுமே மொழி இடை, கடைகளில் குறுகுகிறது என்பதை அறிகிறோம். நன்னூலுக்கு முந்தைய நூலான யாப்பருங்கலம் ஐகார ஒளகாரத்திற்குச் சொல்லும் விளக்கம்,

   “ ஐகார ஒளகாரக் குறுக்கம் ஆமாறு:  அளபெடுத்தற் கண்ணும் தனியே சொல்லுதற் கண்ணும் என இரண்டிடத்தும் அல்லாத வழி வந்த ஐகார, ஓளகாரம் என்பன தம் அளவில் சுருங்கி ஒன்றரை மாத்திரையாம். ஐகாரம் தனியே நின்று ஒரோவிடத்து ஒருபொருளைச் சொல்லுதற்கண் ஒன்றரை மாத்திரையாம். என்னை?
    “அளபெடை தனிஇரண்டு அல்வழி ஐஒள
     உளதாம் ஒன்றரை தனியும் ஐ ஆகும்”
என்றார் அவிநயனார்”  எனக் கூறுகிறது.

      இந்த உரையில் இரண்டு விசயங்கள் உள்ளன.  ஐகாரம் போலவே ஒள மூவிடங்களில் வரும் என்பதும், ஐ, ஒள தனியே நின்று பொருள் உணர்த்தி வரும் போது ஒன்றரை மாத்திரை என்பதும் ஆகும்.
 
      ஒளகாரம் மொழிக் கடையில் வருவதற்குச் சான்றுகள் ஏற்புடையதாக இல்லை. அவை:  சிறுதலை நெளவி மான்,  நறுமலர் வெளவினர்.    இவை எப்படிச் சொல்லாகும்?  சொற்றொடர் அல்லவா?

      சூ ......அடடடா.....இப்பவே கண்ணக் கட்டுதே.....என்று கூறுகிறீர்களா?  

   அஇ – ஐ ,  அய் – ஐ .  ஆனால் அகர ஒலியுடன் ஆய்தம் சேர்ந்து ஐ ஒலியை உருவாக்குகின்றதாம்!  

    கண்டுபிடி அதனைக் கண்டுபிடி! குட்டையைக் குழப்பிட்டுப் போறவனைக் கண்டுபிடி......சந்திப்போமா!


7 கருத்துகள்:

 1. புலவர்க்கு வணக்கம்.
  நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் பதிவொன்றைக் காணும் போது மிக்க மகிழ்ச்சி!
  மிக முக்கியமான மூன்று சூத்திரங்களுடன் அமைந்துள்ளது உங்களின் பதிவு,
  தற்சுட் டளபொழி ஐம்மூ வழியும்
  நையும் ஒளவும் முதலற் றாகும்” எனுமிடத்தில்
  தன்னைச் சுட்டுமிடம் அல்லாத ( தற்சுட்டொழி), அளபெடுக்கும் இடம் அல்லாத ( அளபொழி) ஏனைய இடங்களில் இவ்விரு எழுத்துக்களும் தம் அளவில் குறைந்து ஒலிக்கும் என்கிறார் நன்னூலார்.
  எனவே அளபெடைக்கு அருகில் குறில் எழுதப்படுவது ஓசை நீடற்குரிய அடையாளமாகவே பயன்பட்டிருக்க வேண்டும். பின்பு அது செய்யுளில் ஓசைகுறையுமிடத்து செய்யுளிசையாகப் பரிணமித்து இருக்க வேண்டும். இது ஒரு கருத்து.

  “இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
  அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே“ (நன்-91)
  என அளபெடைக்குக் குறியாக இந்த குற்றெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன எனக் கூறும் நன்னூலார்
  குற்றுயிர் அளபெழின் ஈறாம்“ (நன-108) என அளபெழும் போது குற்றேழுத்துக்கள் ஈறாக அமையும் எனக்கூறித் தம்மோடு தாம் முரணுவார்.
  நீங்கள் காட்டிய சூத்திரம் அளபெடைக்கு அருகில் குறில் எழுதப்படுவது குறியீடே ஒழிய எழுத்தன்று என்பதை விளக்கும் சான்றாகவே நான் காண்கிறேன். எழுத்தோரன்ன என தொல்காப்பியரால் காட்டப் படும் சார்ந்து வரல் மரபின யாவும் எழுத்தல்ல முதலெழுத்தைச் சில அடையாளங்களுடன் (குறி) ஓசையை வேறுபடுத்த வருவனவாகவே நான் காண்கிறேன். உங்களைப் போன்றோர் தான் இதைப் பெருக ஆராய வேண்டும்.
  அடுத்து நீங்கள் காட்டி தொல்காப்பிய மொழிமரபின் ஒன்தாம் நூற்பா நூன்மரபின் ஒழிபை மொழிமரபிலிருந்து பிரிக்கும் எல்லைக் கோடாய் உரையாசிரியர்களால் காட்டப்படும் முக்கியத்துவம் உடையது.
  நெடில் ஏழனுள் இனமில்லாத இவ்விரு நெடில்களும் அளபெழும் காலத்து இடவேண்டிய குறிகள் இல்லாமையால் அவ்வெழுத்தின் நிறைவில் (முடிவில்) தோன்றும் இசை நோக்கி (இசைநிறையாய் )
  இ உ எனும் இரு எழுத்துக்கள் சுட்டப் பட்டதாகக் கருதியிருந்தேன். நீங்கள் கூறிய செய்தி புதுமையானது.
  யாப்பருங்கல முதற் சூத்திர விருத்தி காட்டும் நீங்கள் கூறும் செய்தி மிக முக்கியமானதும் ஆய்தம் பற்றியும், சார்பெழுத்து பற்றியுமான என் தேடலுக்கு புதிய வெளிச்சத்தைத் தருவதுமாய் அமைந்தது . ஆய்தம் என்னும் எனது பதிவொன்றில் அதைப் பின்வருமாறு குறித்திருக்கிறேன்  “ ஆய்தமும் யவ்வும் அவ்வொடு வரினே

  ஐயென் எழுத்தொடு மெய்பெறத் தோன்றும்.’
  என்ற அவிநயனார் பாடலை மேற்கோள் காட்டும்

  விருத்தியுரைக்காரர்,
  அய்யன், கய்தை, தய்யல், மய்யல், கய்யன் - என

  அகரத் தோடு யகர ஒற்று வந்துள்ளதை, ஐயன்,

  கைதை, தையல், மையல், கையன் என்பது போல,
  கஃசு, கஃதம், கஃசம் - என அகரத்தோடு ஆய்தம்

  வந்துள்ளதை, கைசு, கைதம், கைசம், என

  ஐகாரமாக்கி உச்சரிக்குமாறும் கூறுவதிலிருந்து

  கைசு என எழுதப்பட வேண்டியது, கய்சு

  என்றுமட்டும் அல்லாமல் கஃசு (கஃசு என்பதைக் =

  கைசு எனப்படிக்க வேண்டும். ) எனும் ஆய்தக்

  குறியீடிட்டும் எழுதப்பட்டு வந்துள்ளது தெளிவாகிறது.

  அருமையான சிந்தனையைத் தூண்டும் பதிவொன்றைத் தந்தமைக்கு நன்றி அய்யா!  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமை ஐயா. அசத்திவிட்டீர்கள். உங்களிடம் நான் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கருத்திட்டமைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 2. சிறந்த இலக்கண விளக்கம்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 3. மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா!

  இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டு இங்கு வந்தேன்.

  அருமையான இலக்கண விளக்கப் பதிவு ஐயா!
  எனக்கும் மிகவும் பிடித்தமானதே...

  தொடருங்கள்!.. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  பதிலளிநீக்கு

>