செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை
சௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை

தோற்றுவாய்

           இந்தியாவில் ஆயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பல பேச்சு வழக்கு மொழியாக மட்டுமே உள்ளன. எழுத்து வடிவமும் பேச்சு வடிவமும் கொண்டவை சில. இவற்றுடன் இலக்கிய இலக்கண வளமுடைய மொழிகள் சிற்சில. இலக்கியங்களோ வரி வடிவமோ இல்லாத மொழி எனப் பிற மொழி பேசப்படுவோரால் கருதப்படும் சௌராஷ்ட்ர மொழி  ஏராளமான இலக்கிய வளத்துடன் தனக்கெனத் தனி வரிவடிவமும் கொண்டு விளங்குகிறது என்பதை இக்கட்டுரை முன் வைக்கிறது.

சௌராஷ்டிர மக்கள்

           சுதந்திர இந்தியாவில் தற்போதைய குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியாக மட்டுமே ‘சௌராஷ்டிரா’ எனும் நகரம் உள்ளது. ஆனால், வரலாற்றுப் பின்னணியில் பார்க்கும் பொது சௌராஷ்டிர தேசம் வேதப் பழமையானது என்பதையும் மிகப் பெரிய பகுதியாக விளங்கியதையும் தஸ்மா பாஸ்கர் என்பார் “வேதப் பழமையான சௌராஷ்டிரம்” எனும் நூலில் தெரிவிக்கிறார்.
           யுவான்சுவாங் எனும் பயணி வட இந்தியாவில் மதுரா முதல் ஹிமாலயம் வரையிலும் சௌராஷ்டிர தேசம் பரவியிருந்தது என்பதைச் சுட்டுகிறார்.
           தற்போது தமிழகமெங்கும் பரவலாக வாழ்ந்து வரும் சௌராஷ்டிர மக்கள் பல்வேறு காலகட்டங்களில் குழுக்களாகத் தமது புலம் பெயர்ந்து வந்துள்ளனர். கஜினி முகமது படையெடுப்பின் போதும், சத்ரபதி சிவாஜியின் அரசுப் பணியில் சேர்ந்ததன் காரணமாகவும், விஜய நகரப் பேரரசில் வேலை செய்ய வந்ததன் காரணமாகவும், திருமலை நாயக்கர் காலத்திலும் தென்திசை நோக்கி வந்தமை அறியப்படுகிறது.

சௌராஷ்டிர மொழியின் தொன்மை

           சௌராஷ்டிர மக்களின் வரலாறு வேதப் பழமையானது என்பதால் மொழியும் சமஸ்கிருதத்திலிருந்தே கிளைத்துள்ளது.  சமஸ்கிருதத்தின் பேச்சு மொழி பல்வேறு காலகட்டத்தில் மூன்று நிலைகளில் பேசப்பட்டு வந்துள்ளது.  முதல் நிலையில்  சமஸ்கிருதம் கி.மு.900 வரையிலும், இரண்டாம் நிலையான பிபாஷா சமஸ்கிருதம் கி.மு.700 வரையிலும் பேசப்பட்டு வந்தது.  மூன்றாம் நிலையான பிராகிருத சமஸ்கிருதம் கி.மு.700 முதல் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.  சௌராஷ்டிர மொழி சமஸ்கிருதத்தின் மூன்றாம் பிரிவான பிராகிருதத்தின் பேச்சு வழக்குகளில் வருகிறது. விரஜ பாஷை எனப்படும் சௌராஷ்டிரா  2500 வருடங்களுக்கு முன்பிருந்தே வழக்கில் இருந்து வருகிறது.  யுவான்சுவாங் மதுரா முதல் ஹிமாலயா வரையும் விரஜ பாஷை பேசப்பட்டது என்கிறார்.  சமஸ்கிருதமே மூல மொழி என்பதால் சௌராஷ்டிர மொழிக்குச் சமஸ்கிருத இலக்கணம் பெரிதும் பொருந்தி வரும். ஆயினும் சௌராஷ்டிர மொழிக்குப் பன்னெடுங்காலம் முன்பே வரருசி என்பவரால் இலக்கணம் வகுக்கப்பட்டது.

சௌராஷ்டிர இலக்கண நூல்கள்

           வரருசி என்பார் “பிராகிருதப்  பிரகாசம்” எனும் இலக்கண நூலை எழுதினார்.  இந்நூல் சௌராஷ்டிரம் மட்டுமன்றி மராட்டி, அவந்தி, மாகதி ஆகிய மொழிக்கும் சேர்த்து இலக்கணம் உரைக்கிறது. அடுத்து, “பிராகிருத சர்வஸ்வ” எனும் நூலை மார்கண்டேயரும், “பிராகிருத லவண” எனும் நூலைச் சண்ட என்பவரும் மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் படைத்தனர்.
           “பிராகிருத காமதேனு அல்லது பிராகிருத லங்கேஸ்வரராவண” என்பதை லங்கேஸ்வரரும், “சம்க்ஷித சார” என்பதைக் கிரமகீஸ்வரர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் படைத்தனர்.  “பிராகிருதானுசாசனம்” எனும் நூல் புருசோத்தமரால் படைக்கப்பட்டது. திரிவிக்ரமர் என்பார் “சித்த ஹேம சப்தானுசாசனம்” எனும் நூலைப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் படைத்தார். லக்ஷ்மிதரர் என்பார் “ஷட்பாஷா சந்திரிகா” எனும் நூலைப் படைத்தார். தர்க்க வாகீசப் பட்டாச்சாரியார் ராமசர்மா என்பவர் “பிராகிருத கல்பதரு” நூலைப் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றியுள்ளார்.
           இலக்கண நூல்களுக்குப் பலர் உரையும் கண்டனர். வரருசியின் பிராகிருதப் பிரகாசத்திற்கு மார்கண்டேயர், பரதர், கோஹல ஆகியோர் உரை செய்தனர். ஆறாம் நூற்றாண்டில் காத்யாயனர் என்பாரின் உரை நூல் “பிராகிரு மஞ்சரி” என்றும், ஏழாம் நூற்றாண்டில் பாமஹரரின் உரை “மனோரமா” என்றும், பதினான்காம் நூற்றாண்டில் வசந்த ராஜரின் உரை “பிராகிரு சஞ்சீவணி” என்றும் வழங்குகிறது.

பழமையான இலக்கியங்கள்

           கி.பி. நான்காம் நூற்றாண்டில் யாஸ்கர் என்பார் “நிருக்தா” எனும் நூலையும், விமலசூரி “பவும சரிய” எனும் நூலையும் படைத்தனர். பத்தாம் நூற்றாண்டில் “லீலாவதி” எனும் நூல் கோஹல என்பவரால் இயற்றப்பட்டது. சங்கதாசகணி மற்றும் தர்மசேனகணி ஆகியோரால் “வாசுதேவ ஹிண்டி” எனும் நூல் செய்யப்பட்டது. சௌராஷ்ட்ர மொழியில் தொகை நூல்களாக காதா சப்த சதியும் விஜ்ஜாலக்கம் ஆகியன விளங்குகின்றன. சேது பந்தனம், கௌடவதம் ஆகியன காவியங்களாக உள்ளன. இராமாயண, மகாபாரத இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகள் பரவலாக நடைபெற்றுள்ளன.

தமிழகத்தில் சௌராஷ்ட்ர மக்களின் இலக்கியக்கொடை

           தமிழகத்திற்கு வந்த சௌராஷ்ட்ர மக்கள் தம் தாய் மொழியைப்பேசியதுடன் இலக்கியப் படைப்பும் கொடுத்து உயிரூட்டினர்.  இன்று சௌராஷ்ட்ர மக்கள் தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் எனப் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். பூர்வீகத் தொழிலான நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் இம்மக்கள் தொழில் நலிவால் சில காலங்களாகப் பிற பணிகள் புரிவோராக உள்ளனர்.
           தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில்  1789 இல் பிறந்தவர் ஸ்ரீ வேங்கடரமண பாகவதர். இவர் தியாகராஜ சுவாமிகளின் முதன்மையான சீடராக விளங்கினார். தெலுங்கு, கன்னடம், பைசாகி, ஹிந்தி  பாலி, உத்கலம், தமிழ் எனப் பன்மொழிப் புலமை கொண்ட வேங்கடரமண பாகவதர் கீர்த்தனைகள் பல பாடித் தம் குருவிற்குக் காணிக்கையாக வழங்கினார்.

வரகவி ஸ்ரீ வேங்கடசூரி சுவாமிகள்

           1818 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் அய்யம்பேட்டையில் பிறந்த வேங்கடசூரியார் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் அவைப்புலவராக விளங்கினார்.   இவருக்குத் தக்ஷிண காளிதாஸ்,  கவிகேசரி, வித்யா விசாரதா, பத்யகேசரி, கவி சிரோமணி முதலான பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. பன்மொழிப் புலமை கொண்ட இவர் சௌராஷ்டிரா மொழியில் பல நூல்களைப் படைத்துள்ளார்.
                                மகா காவிய இராமாயண சங்கீதக் கீர்த்தனைகள், பாலராமாயணம், ஸ்ரீ ராமாவளி, ஸ்ரீ கிருஷ்ணாவளி, பக்திரசக் கீர்த்தனைகள், லாவணி கீதங்கள், தாமரைத் துவஜன் கதை, ருக்மணி கல்யாணம், ஜக்குபாய் சரித்திரம் ஆகியன இவர் இயற்றிய நூல்கள்.  சமஸ்கிருதத்தில் “நௌகா காவியம்” எனும் நூலைப் படைத்துள்ளார்.

குருக்கு சுப்பார்ய சுவாமிகள்

            1814 இல் பரமக்குடியில் பிறந்தவர் குருக்கு சுப்பார்ய சுவாமிகள். இவர்  1844 இல் அனுபவ பஞ்சரத்னம், சங்கீர்த்தன சாகித்யம்,  1854 இல் சீதா ராமாஞ்சநேயம்,  1856 இல் பகவத்கீதை விளக்கம் ஆகிய நூல்களைப்  படைத்தார்.

மகாகவி அழகாரய்யர்

           சேலத்தில்  1832 இல் பிறந்தவர் அழகாரய்யர்.  இவர் வரகவி வேங்கட சூரியின் மாணவராக விளங்கியவர்.  கர்நாடக சங்கீதம் அறிந்த இவர் பிடில் வித்வானாகவும் திகழ்ந்தார். பஞ்சல் சரித்திரம், ஆசௌச விதிகள், விஷ்ணு புராணம், சௌராஷ்டிரா வியாகரணம், நரசிம்ம சதகம், சிருங்கார வர்ண கீதங்கள், பஜனோர்ச்சவ கீர்த்தனைகள் முதலான நூல்கள் இவர்தம் இலக்கியக்கொடையாக உள்ளன.

தொ.மு. இராமராய்

           1852 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இராமராய் “புதிய சௌராஷ்டிரா எழுத்தின் பிரம்மா” எனலாம். தம் வாழ்நாள் முழுவதையும் சௌராஷ்டிர மொழி வளர்ச்சிக்காகவும் புதிய லிபி வடிவத்திற்காகவும் பாடுபட்டவர்.  வட நாட்டில் வழங்கி வரும் சௌராஷ்டிர எழுத்து முறை தேவ நாகரி முறையைப் பின்பற்றுகிறது. ஆனால், இராமராய் அவர்கள் உருவாக்கிய புதிய லிபி முறை கன்னடம், தெலுங்கைப்  போல வட்ட வடிவிலானவை.  இவர் தான் உருவாக்கிய லிபி முறையிலேயே இலக்கியங்களைப் படைத்தார். சௌராஷ்டிர மொழிக்கான புதிய லிபி இலக்கணம் இவராலும் சேலம் அழகாரய்யராலும் நூலாக அச்சிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
           சௌராஷ்ட்ர போதினி, சௌராஷ்ட்ர பிரைமர், சௌராஷ்ட்ர முதல் பாடப் புத்தகம், சௌராஷ்ட்ர இரண்டாம் பாடப் புத்தகம், நந்தி நிகண்டு, சதுர் பாஷா வல்லரி( தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், சௌராஷ்டிரா) ஆகியன படைத்த நூல்கள். இவர் இயற்றிய சௌராஷ்ட்ர நீதிசம்பு எனும் நூல் அறநெறிகளைத் தொகுத்துக் கூறும் நீதி நூலாகத் திகழ்கிறது.

நடன கோபால நாயகி சுவாமிகள்

           மதுரையின் ஜோதி, சௌராஷ்டிரா ஆழ்வார் எனப் போற்றப்படும் நடன கோபால நாயகி சுவாமிகள்  1843 இல் மதுரையில் பிறந்தவர். அட்டாங்க சித்திகளைக் கற்றறிந்த இவர் தமிழிலும், சௌராஷ்ட்ர மொழியிலும் பல கீர்த்தனைகள் பாடிப் பெருமை சேர்த்தார். இவர்தம் கீர்த்தனைகள் பக்திப் பரவசமூட்டுபவை. மேலும், வாழ்வியல் தத்துவங்களை உணர்த்துவனவாகவும் விளங்குகின்றன.

கவிஞர் சங்குராம்

           சௌராஷ்ட்ர இலக்கியக் கொடையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சங்குராம்.  1907 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் தேர்ந்தவர்.  மதுரையில் இயங்கிவரும் சித்தாச்சிரமத்தில் நீதி கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழிலும் சௌராஷ்ட்ர ஒலி வடிவத்தைத் தமிழில் கொண்டும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.  ஸ்ரீ நிவாசப் பெருமாள் கோவில் தல வரலாறு, ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ சதகம், ஞானாமிர்த கீதம், சித்தாச்ரமப் பிரபாவம் ஆகியன இவர்தம் படைப்புகள். 
           சௌராஷ்ட்ர இலக்கியப் பரப்பில் பெரிதும் பேசப்படும் இவரது நூல் “ஸ்ரீ த்வின்” எனப்படும் திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆகும்.   1980  ஆம் ஆண்டில் திருக்குறள் பாயிரத்தை மட்டும் மொழிபெயர்த்தார். பின், சித்தாச்சிரம நரஹரி என்பாரின் வேண்டுகோளுக்கிணங்க திருக்குறள் முழுவதையும் சௌராஷ்ட்ரத்தில் மொழிபெயர்த்தார்.  திருக்குறள் போலவே ஈரடி வெண்பா யாப்பில் கொஞ்சம் கூட சொற்சுவை, பொருட்சுவை குன்றாது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது இந்நூலின் மற்றொரு சிறப்பு.

           “கனினுக் கனிஹோன் கனிகர் கனினுக்
            கனிஹோன் கனிஹோஸு பொவ்ஸு”

என்பது “துப்பார்க்குத் துப்பாய” எனும் குறளின் மொழிபெயர்ப்பு.

எம்.வி. வெங்கட்ராம்

           தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்  1920 ஆம் ஆண்டு பிறந்த வெங்கட்ராம் சிறு வயது முதலே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கினார். சௌராஷ்ட்ரரான இவர் தமிழில் பல இலக்கியங்களைப் படைத்தவர். பதினாறு வயதில் இவர் எழுதிய “சிட்டுக் குருவி” கதை மணிக்கொடியில் வெளியானது. விக்ரஹநாசன் எனும் புனை பெயரில் கவிதைகள் எழுதினார். ‘தேனீ’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக விளங்கினார். இவரது “காதுகள்” நாவல் 1993 இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. “வேள்வித் தீ” எனும் நாவல் சௌராஷ்ட்ர மக்களின் வாழ்வியலை விளக்குகிறது.
                                எம்.வி. வெங்கட் ராம்  நித்தியகன்னி, இருட்டு, உயிரின் யாத்திரை, அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள், வேள்வித்தீ, காதுகள் ஆகிய தமிழ்ப் புதினங்களையும், மாளிகை வாசம், உறங்காத கண்கள், மோகினி, குயிலி, இனி புதியதாய், நானும் உன்னோடு, அகலிகை முதலிய அழகிகள், முத்துக்கள் பத்து, பனிமுடி மீது கண்ணகி ஆகிய சிறுகதைகளையும் படைத்தவர்.  என் இலக்கிய நண்பர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லார் ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.  சௌராஷ்டிர சமூகத்திலிருந்து தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். இவரது சிறுகதைத் தொகுப்பு தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளது.

தொ. ரா. பத்மநாபய்யர்

           தொ.ரா.ப. எனப்படும் இவர் பகவத் கீதையைப் பல வடிவில் மொழிபெயர்த்தார். பகவத் கீதையின் அனைத்து அத்தியாயங்களும் தேவநாகரி, தமிழ் எழுத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  வெண்பா யாப்பில் கீதையை மொழிபெயர்த்தார். கீதையைப் படிப்பதால், கேட்பதால் உண்டாகும் பயனை விவரித்துக் கிளிக் கண்ணி, காவடிச் சிந்து, கும்மி வடிவத்தில் “கீதா கீதுன்” எனும் நூலைப் படைத்துள்ளார்.

சௌராஷ்டிர நூல் வெளியீடுகள்

            1942 இல் கு.வெ. பத்மநாபய்யரின் “ வேங்கட சூரி சுவாமி சரித்திரம்” எனும் நூல் வெளிவந்தது.  1958 இல் ராம. வெங்கட்ராம் ஐயங்காரின்  “சௌராஷ்டிரா சங்கிரக ராமாயணு” எனும் நூல் தமிழ் எழுத்தில் வெளிவந்துள்ளது. தொ.ரா. பத்மநாபய்யரின் “சௌராஷ்ட்ர பகவத் கீதை” 1999 இல் மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. சித்திரமும் கதையும் கொண்டவாறும், தமிழ், சௌராஷ்ட்ர லிபி வடிவம் கொண்டும் அமையப்பெற்ற “சௌராஷ்ட்ர பிரதித்வனி” எனும் நூல் வெளிவந்தது.
           சௌராஷ்ட்ரர் தென்னாட்டு விஜய வரலாறு மற்றும் கோத்திரப் பிரவர காண்டம் எனும் நூல் தமிழில்  1990 ஆம் ஆண்டில் சௌராஷ்ட்ர ஆன்மீக சபையில் வெளியிடப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து தி.வி.குபேந்திரன் அவர்களின் “சௌராஷ்ட்ர கோத்ர காண்டோ” எனும் நூலும், டி.ஆர். பாஸ்கர் அவர்களின் “வேதப் பழமையான சௌராஷ்டிரம்” எனும் நூல்களும் வெளிவந்துள்ளன.
                                சேதுராமன் என்பாரின் “தமிழ் நாட்டில் சௌராஷ்டிரர் வரலாறு” எனும் நூல் சௌராஷ்டிரா மக்கள் புலம்பெயர்ந்து வந்ததன் காரணம், தற்போது மக்களின் நிலைப்பாடுகள் கூறப்பட்டுள்ளன.  சி.கே. நரசிம்மாச்சாரி என்பார் “சௌராஷ்ட்ரத் திருமணம்” எனும் குறு நூலில் சௌராஷ்ட்ரரின் திருமணச் சடங்கின் பல்வேறு படிநிலைகள் நயம்படக் கூறப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமி வழங்கும் “பாஷா சம்மான்” விருது பெற்ற தாடா சுப்பிரமணியன் என்பார் “ஒள்டியானு வத்தான்” எனும் பொன்மொழித் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.  உபமன்யு என்பவர் சௌராஷ்ட்ர லிபி பயிற்சிப் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இறுவாய்


           அரசியல் காரணங்களுக்காகவும், அரசுப் பணி காரணத்திற்காகவும் பல காலகட்டத்தில் புலம் பெயர்ந்து வந்த சௌராஷ்ட்ரர்கள் தம் தாய்மொழியையும் தமிழையும் போற்றி வாழ்ந்து வருகின்றனர்.  சௌராஷ்ட்ரர் தமிழிலும், தென்னிந்திய மொழிகளிலும், தம் மொழியிலும் பல்வேறு இலக்கியப் படைப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் நல்கியுள்ளனர்.  சௌராஷ்ட்ரத் திருக்குறள் மொழிபெயர்ப்பு தமிழுலகில் பெரிதும் போற்றப்படுகிறது. ஒரு மொழி தொடர்ந்து பேசப்பட்டு வந்தால்தான் நிலைத்து நிற்கும் எனில் அதற்குச் சௌராஷ்ட்ர மொழியே சான்று என்பதில் ஐயம் இல்லை.
>