வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - 1)


மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள்


      தமிழ் மொழியில் மரபு இலக்கண நூல்கள் யாவும் எழுத்துகளை முதல், சார்பு என வகைப்படுத்தியுள்ளன.  இவற்றில் சார்பெழுத்து உட்பிரிவில், தொகைகளைக் குறிப்பிடுவதில் ஒவ்வோர் இலக்கணிகளும் வேறுபட்டுள்ளனர். மேலும் சார்பெழுத்துப் பற்றிய கொள்கைகளைக் கையாளுவதில் ஒவ்வோர் ஆசிரியரும் முரண்பட்டுள்ளனர்.  தொல்காப்பியத்தைத் தொடர்ந்து வீரசோழியம், நேமிநாதம், இலக்கண விளக்கம், இலக்கணக்கொத்து, தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் முதலான நூல்கள் மரபு இலக்கணத்தை அவ்வப்போது மீட்டுருவாக்கம் செய்து வந்துள்ளன. இவற்றில் சார்பெழுத்துகளின் பன்முகத் தன்மைகளை இக்கட்டுரை முன்னெடுத்துச் செல்கிறது.

சார்பெழுத்துகளின் மீட்டுருவாக்க வகைப்பாடு

      பொதுவாக எழுத்துகளுக்கு ஒலிவடிவம், வரி வடிவம் ஆகிய இரு கூறுகள் முக்கியமானவை.  வரிவடிவம் காலத்திற்குக் காலம் மாறுபட்டு வந்துள்ளது.  பிராமி எழுத்து, வட்டெழுத்து எனப் பரிணமித்த இவ்வெழுத்துகள் தற்போதைய நிலையை எய்தியுள்ளன.  ஆனால், ஒலிவடிவம் மாறுபடாதது.  முதல் எழுத்துகள் யாவும் தனித்த ஒலியைக் கொண்டவை.  சார்பெழுத்துகள் யாவும் முதல் எழுத்தைச் சார்ந்தே ஒலியைப் பெறுகின்றன. ஒலியைக் கணக்கிட இலக்கண ஆசிரியர்கள் மாத்திரை முறையைக் கையாண்டுள்ளனர். மேலும் சார்பெழுத்துகள் இயங்குகின்ற களங்கள் முக்கியமானவை. மொழி முதல், இடை, கடை என்பவற்றுடன் புணர்நிலை இயல்பு முதலானவை அக்களங்கள். எனவே, சார்பெழுத்துகள் மீட்டுருவாக்கம் பெற்றுள்ளமையை  
                 அ. எண்ணிக்கை
                ஆ. வடிவம்
                இ. வகை தொகை முறை
                ஈ. மாத்திரை முறை
ஆகிய கூறுகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளன. இதனால் சார்பெழுத்துகளின் உண்மையான தன்மையை அறிந்துணர முடியும்.

சார்பெழுத்துகளின் எண்ணிக்கை

      தமிழ் மொழியில் தற்போது கிடைக்கின்ற இலக்கண நூல்களில் பழமையானது தொல்காப்பியம். இந்த இலக்கண நூலை வேராகக் கொண்டு பல்வேறு கால கட்டங்களில் தமிழில் பல்வேறு இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன.  மேலும், பிற்காலத்தே தோன்றிய நூல்கள் காலத்திற்குத் தக்கவாறு மாற்றங்களையும் அடைந்துள்ளன. ஒவ்வோர் இலக்கண நூலும் அதற்கு முந்தைய நூலின் கருத்தைப் பொன்போல் போற்றியும் உரையாசிரியர்களின் கருத்தை ஏற்றியும் கூறியுள்ளனர்.
            “எழுத்தெனப் படுப
            அகர முதல னகர இறுவாய்
            முப்பதென்ப
            சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே”
            ‘அவைதாம்
            குற்றிய லிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
            முப்பாற் புள்ளியும் எழுத்தோர் அன்ன”  (தொல். )

     இந்நூற்பாக்களின் மூலம் தொல்காப்பியர் சார்ந்து வரல் மரபையுடைய எழுத்துகள் மூன்று. அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்று கூறியுள்ளார். “சார்ந்துவரல் மரபின்”, “சார்ந்துவரின் அல்லது”  எனத் தொல்காப்பியர் இவ்வெழுத்துகளைக் குறிக்கின்றார் அன்றித் தனியாகச் சார்பெழுத்து என்று பெயரிடவில்லை. மேலும் பிற்காலத்தே கூறப்பட்டுள்ள ஏனைய சார்பெழுத்துகள் பற்றிய குறிப்புகளும் தொல்காப்பியத்தில் ஆங்காங்கே பயின்று வந்துள்ளன.  “புள்ளி இல்லா எல்லா மெய்யும்” எனும் நூற்பா உயிர்மெய் பற்றியும், “குன்றிசை மொழிவயின்” எனும் நூற்பா உயிரளபெடையையும், “அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்” என்பது ஒற்றளபெடையையும், “ஓரளபாகும் இடனுமாருண்டே” என்பது ஐகார ஒளகாரக் குறுக்கங்களையும், “அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே” எனும் நூற்பா மகரக் குறுக்கத்தையும், “உருவினும் இசையினும் அருகித் தோன்றும்” என்பது ஆய்தக் குறுக்கத்தையும் சுட்டுவனவாக அமைந்துள்ளன.
      தொல்காப்பியத்திற்கு அடுத்துத் தோன்றிய நூலான வீரசோழியம் முதல், சார்பு என்ற வகைப்பாட்டைப் பின்பற்றவில்லை.

     “அறிந்த எழுத்து அம்முன் பன்னிரண்டு ஆவிகள் ஆனகம்முன்
      பிறந்த பதினெட்டு மெய்நாடு ஆடிதம் பெயர்த்து இடையா
      முறிந்தன”      ( வீரசோழியம் )

இந்நூற்பாவில் கவனிக்கத்தக்கது ஆய்த எழுத்து உயிருக்கும் மெய்க்கும் நடுவில் இடம் பெறச் செய்திருப்பது. மேலும் அடுத்தடுத்த நூற்பாக்களில் உயிரளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், வர்க்கத்தொற்று பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
     எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த நேமிநாதம் முதல், சார்பு என்ற முறையைப் பின்பற்றாமல் முதல் வைப்பு, இரண்டாம் வைப்பு என்று கூறியுள்ளது.

     “ஆவி அகரமுதல் ஆறுஇரண்டாம் ஆய்தமிடை
     மேவும் ககரமுதல் மெய்களாம் “ ( நேமிநாதம் )

என முதல் வைப்பில் உயிருக்கும், மெய்க்கும் இடையில் ஆய்த எழுத்தும் இடம்பெற்றுள்ளது. அடுத்து, இரண்டாம் வைப்பில் உயிர்மெய், வர்க்கத்தொற்று, அளபெடைகள் இடம்பெறக் காண்கிறோம்.
      எழுத்துகளை முதல் எழுத்து, சார்பெழுத்து எனப் பெயரிட்டு வகைப்படுத்தியவர் நன்னூலாரே.  முதல் எழுத்துகள் முப்பது. சார்பெழுத்துகள் பத்து எனவும் கூறியதுடன் சார்பெழுத்தின் விரியையும் எடுத்துரைத்துள்ளார்.

           “உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
           அகிய இ உ ஐ ஒள மகான்                         
           தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும்”   (நன்னூல்  )

எனும் நூற்பா பத்துச் சார்பெழுத்துகளையும் பட்டியலிடுகின்றது.
     பிற்காலத்தே தோன்றிய இலக்கண நூலான இலக்கண விளக்கம், நன்னூலார் கூறியுள்ள சார்பெழுத்துகளில் ஆய்தக் குறுக்கத்தை மட்டும் ஏற்கவில்லை. ஏனைய ஒன்பது சார்பெழுத்துகளையும் கூறுகிறது. வீரமாமுனிவர் தனது தொன்னூல் விளக்கத்தில் நன்னூலாரின் பத்துச் சார்பெழுத்துகளையும் அப்படியே வழிமொழிகின்றார்.  ஆனால், முத்துவீரியம்

           “சார்புஉயிர் மெய்தனி நிலைஇரு பாலன”  (முத்துவீரியம் )

எனும் நூற்பா மூலம் உயிர்மெய், ஆய்தம் ஆகிய இரண்டு மட்டுமே சார்பெழுத்துகள் என்று கூறுகிறது.
     இப்படித் தொல்காப்பியர் காலம் தொட்டுச் சார்பெழுத்துகளின் எண்ணிக்கையில் அல்லது வகைப்பாட்டைப் பகுப்பதில் முரண்பாடுகள் ஏற்படக் காரணம் யாதென எண்ணிப் பார்க்கலாம்.  செய்யுள் வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பெரும்பான்மை இடம்பெறுதல் கருதிக் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற இம்மூன்றைத் தொல்காப்பியர் சார்ந்து வரல் மரபை உடைய எழுத்துகளாக வகைப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் பிற சார்பெழுத்துகள் பற்றி ஆங்காங்கே கூறியுள்ள போதும் அவற்றைச் சார்பு எனும் எல்லைக்குள் தொல்காப்பியர் கொண்டுவரவில்லை.  மகர, ஆய்தக் குறுக்கங்கள் மிகச் சிறுபான்மை. ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் வழக்கில் காணப்பட்டாலும் செய்யுளில் திரிபடைவதில்லை.  அளபெடைகள் பெரும்பான்மை செய்யுளுக்கே உரியன. எனவே தான் குற்றியலுகரத்தையும், அதன் திரிபாக வரும் குற்றியலிகரத்தையும் தன் அருகிலுள்ள எழுத்தின் ஒலியை மாற்றச் செய்கின்ற ஆய்தத்தையும் சார்பெழுத்துகளாகக் கொண்டார்.
     வீரசோழியமும் நேமிநாதமும் தமிழ் நெடுங்கணக்கு முறையைப் பின்பற்றியுள்ளன. உயிர், ஆய்தம், மெய் என்ற வரிசையில் எழுத்துகளைக் கூறுவதும், அடுத்த வைப்பு முறையில் வருக்கத்தொற்று ( இன எழுத்து) என்பதைச் சேர்த்திருப்பதும் புதுமையாக உள்ளது.  இலக்கண விளக்கம் ஆய்தக் குறுக்கம் பயன்பாட்டில் அருகிய நிலை கருதிச் சொல்லாமல் விட்டுவிட்டது. நன்னூலார் தனித்த ஒலியை உடையன முதல் எழுத்து என்றதுடன், முதல் எழுத்துகளை யாதேனும் ஒருவகையில் சார்ந்து வருவதால் சார்பெழுத்து வகைக்குள் பத்தினையும் அடக்கிவிட்டார் எனலாம்.
     முத்துவீரியம் உயிர்மெய், ஆய்தம் என்ற இரண்டினை மட்டும் சார்பு எனக் கொள்வதற்குக் காரணம் எண்ணிப் பார்க்கும்போது அது தனி எழுத்தொலிக் கோட்பாட்டை வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது.  உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த போதும் உயிர்மெய் உயிரின் அளவையே தனித்துப் பெறுகிறது. ஆய்த எழுத்து தனக்கு அடுத்து வரும் வல்லோசையை உரசொலியாக மாற்றுகிறது. ஆனால், இதர சார்பெழுத்துகளாகச் சுட்டப்படுவன புணர்நிலைக்கு உட்பட்டதாகவும் செய்யுளில் மட்டுமே வருவதாகவும், சொல்லுக்குள் மட்டுமே அகப்பட்டதாகவும் உள்ளன. அதனால் உயிர்மெய்யும் ஆய்தமும் மட்டுமே முத்துவீரியத்தில் சார்புகளாயின.  ஆனால், இன்றைய மொழிநூல் கொள்கையின்படி பார்த்தால் நன்னூலார் கூறுகின்ற பத்தும் சார்பெழுத்துகளாகக் கூறலாம். ஏனெனில் அவை யாவும் முதல் எழுத்தின் ஒலியையே சார்ந்து இயங்குகின்றன.
           “சார்பெழுத்து ஏனவும் தம்முதல் அனைய”  (நன்னூல் )

எனும் பிறப்பியல் நூற்பா இதனை உறுதிபடுத்துகின்றது.   

6 கருத்துகள்:

 1. புலவர்க்கு வணக்கம்.
  நீண்ட செறிவான தங்களின் கட்டுரைக்கு நன்றி.
  மூன்று முக்கியமான கருத்துக்களை மட்டும் இங்குப் பதிவு செய்ய நினைக்கிறேன்.
  உயிருக்கும் மெய்க்கும் இடையில் ஆய்தம் வைக்கப்பட்ட முறைவைப்பு வீர சோழியத்தில் பதியப்பட்டுள்ளமை ( வீர சோழிய காலத்திற்கு முந்தைய வழக்கே இது. ஆவணமாக நமக்குக் கிடைத்திருப்பது வீரசோழியம்) இம்முறையே இன்று வரை தொடர்கிறது.
  குற்றியலுகரம் சாராதும் குற்றியலிகரம் தோன்றுவதுண்டு.( கேண்மியா) அக்காலப் பயன்பாட்டில் இக்குற்றியலிகரம் பெருவரவிற்றாய் இருந்திருக்க வேண்டும்.
  மூன்றாவது இன்றைய தமிழ் எழுத்து மரபில் முத்துவீரியம் பெறும் இடம்.
  ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் குழந்தைகளுக்குத் தவறாகக் கற்பிக்கப்படும் தமிழின் மொத்த எழுத்துக்கள் எத்தனை என்ற கேள்விக்கான 247 என்ற பதிலுக்குத் தமிழ் இலக்கணப் பெரும்பரப்பில் ஆதாரமாக இருக்கும் ஒரே நூல் முத்துவீரியம் தான்.
  ( பல தமிழாசிரயர்களிடம் விளையாட்டாய்க் கேட்டதுண்டு. தமிழின் மொத்த எழுத்துக்கள் 247 என்று சொல்றோமே சார் அதுக்கு எந்த இலக்கணப் புத்தகத்தில் ஆதாரம் இருக்கு என்று. இதுவரை யாரும் சரியான பதில் சொன்னதில்லை)
  நிறைய தெரிந்து கொண்டேன்.
  பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நவில்தொறும் நூல்நயம் போலும் எனும் குறட்பாவின் பொருள் விளக்கம் தங்களின் தொடர்பால் நன்கு விளங்குகிறது ஐயா. உங்களின் கருத்துரைகள் என்னை இன்னும் பட்டை தீட்டட்டும். நன்றி ஐயா.

   நீக்கு
 2. தெளிவான இலக்கண விளக்கம்
  தொடருங்கள்

  படியுங்கள் இணையுங்கள்
  தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
  http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

  பதிலளிநீக்கு
 3. எளிமையான வரிகளில் அருமையான விளக்கம்
  தொடருங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு

>