செவ்வாய், 20 மே, 2014

குற்றியலுகரம் - சொல்லியல் தன்மை

            குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மை

     குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மைகளை இந்தப் பதிவில் காண்போம்
     தொல்காப்பியரின் கருத்துப்படி குற்றியலுகர எழுத்துகள் மொழிக்கண்    ( சொல்லின் இடை) வரும்போது அதன் வகைமை ஆறு.

          “ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
           ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
           ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்”    -  தொல்.

இங்கு ஈரெழுத்தொருமொழி என்பது நெடில்தொடர்க் குற்றியலுகரமாகும்.
     ஆடு – ஈரெழுத்தொருமொழி
    படகு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
    சார்பு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
    எக்கு – ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
    கொக்கு – வன்தொடர்க் குற்றியலுகரம்
    சங்கு – மென்தொடர்க் குற்றியலுகரம்
       பிற்காலத்தே வந்த நன்னூலார்,

           “நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலிஇடைத்
           தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம்
          அக்கும் பிறமேல் தொடரவும் பெறுமே” – நன்னூல்

எனச் சூத்திரம் வகுத்தார். தொல்காப்பியர் கூறிய ஈரெழுத்தொருமொழி நன்னூலாரால் நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனக் குறிக்கப்பட்டது.
          தொல்காப்பியர் ஆறு வகைக குற்றியளுகரத்துடன் ‘நுந்தை’ எனும் சொல்லில் உள்ள ( ந்+உ) குறுகி ஒலிக்கிறது என்றும் இது மொழி முதல் குற்றியலுகரம் என்றும் சொல்வார்.

            “குற்றிய லுகரம்  முறைப்பெயர் மருங்கின்
             ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்”   - (தொல்)

இத்துடன் தொல்காப்பியர் கூறும் குற்றியலுகரம் மொத்தம் ஏழு ஆகிறது.

உகரம் குறுகி ஒலிப்பதை அறிதல்:

       உகரத்திற்கு மாத்திரை ஒன்று. அது குறுகும் போது மாத்திரை அளவு அரை. இதை எவ்வாறு அறிவது?

          “உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே “ (தொல். பிறப்பியல்)

உகரமானது இதழ் குவிவதால் தோன்றும். ஆனால், குற்றியலுகரம் ஒலிக்கப்படும் போது இதழ் முழுமையாகக் குவிவதில்லை. குற்றியலுகரத்தை முழுமையாக அதாவது முற்றியலுகரமாக ஒலிக்கும் போது ஓசையில் மாற்றம் ஏற்படுகிறது. 
     நம்மவர், “கொக்கு வந்துச்சு சுட்டுப் போடு” என்று கூறுவதையும், வெளிநாட்டினர் இத்தொடரைச் சொல்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் வேறுபாட்டைச் சரியாக அறியலாம் என்பார் கவிஞர் முத்து நிலவன் அவர்கள்.
     குற்றியலுகரம் குறுகி ஒலித்த போதும் அதில் சில சிறப்பு விதிகளையும் தொல்காப்பியர் வகுத்துள்ளார்.  இதை நுண்மையாக அறியலாம்.  அதாவது புணர்ச்சியில் வன்தொடர்க் குற்றியலுகரம் நிலை மொழியாக இருக்க, வருமொழியில் வல்லினத்தை முதலாகக் கொண்ட சொல் வருமானால் அது குறுகி ஒலிக்காது.

            “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
             தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே”   - (தொல்)

  கொக்கு + கால் = கொக்குக் கால்  -- குறுகவில்லை .   ஆனால் வருமொழியில் உயிரோ, மேல்லினமோ, இடையினமோ வரும் போது  குறுகுகிறது.
      கொக்கு + அழகு = கொக்கழகு
      கொக்கு + வால் = கொக்குவால்
      பாக்கு + மட்டை = பாக்குமட்டை

ஈரெழுத்தொருமொழி – ஆய்வு :

       தொல்காப்பியர் நெடில்தொடர்க் குற்றியலுகரத்தை ஈரெழுத்தொருமொழி என்று கூறினார்.  காரணம் நெடில்தொடர்க் குற்றியலுகரம் இரண்டு எழுத்தால் மட்டுமே வரும்.
     எ.கா.  ஆடு, மாடு, பாடு, காது, ஏசு, பாகு, சேறு
       குற்றியலுகர வகையை அதை அயல் எழுத்தை நோக்கியே அறிவோம்.  அப்படிப் பார்த்தால் படகு, தரகு என்பன உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள். ( பட் +அ + கு )
        ஆடு  -  நெடில்தொடர்க் குற்றியலுகரம்
      அசோகு -  உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
நெடில் தொடர்க் குற்றியலுகரத்திலும் உயிர் தானே உள்ளது. ஏன் அதை மட்டும் தனித்துப் பார்த்தார்கள். இதற்குத் தொல்காப்பியர் கையாண்ட மொழிநிலைக் கொள்கையே காரணமாகும்.  தொல்காப்பியர்,

        “ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி
       இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
       மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே” – (தொல்)

என்றார்.  ஆனால் பவணந்தியார்,

         “தனிமொழி தொடர்மொழி பொதுமொழி” ( நன்னூல்)

என வகுத்தார்.  இருப்பினும் அவர் நூற்பாவில் நெடில்தொடர்க் குற்றியலுகரத்தை ‘நெடிலோடு”  என்று பிரித்தார்.

     தமிழில் ஒன்று, பல என்ற கோட்பாடே உள்ளது.  ஒன்று, இரண்டு, பல என்பது வடநூல் கொள்கை.  எனவே, தொல்காப்பியர் மொழி நிலையில் வடநூல் கொள்கையைப் பின்பற்றிவிட்டாரா என்ற ஐயம் எழுகின்றது.  இது ஒருபுறம் இருக்க, யாப்பருங்கல விருத்தி குற்றியலுகரம் வகைமையால் ஏழு என்று கூறுகிறது. அதை அடுத்தப் பதிவில் காண்போம்.

8 கருத்துகள்:

 1. நல்லது கோபி. உங்களின் விளக்கம் சிறப்பாக இருப்பதால் என் ஐயம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். “வரையாடு“ நன்னூலார் கூற்றுப்படி நெடில்தொடர்க் குற்றுகரம் என்பதா? தொல்காப்பியர் கூற்றுப்படி “ஈரெழுத்து ஒருமொழி“ மட்டுமே குற்றுகரம் என்பதா? ஆடு என்பதை இருவர்க்கும் ஒப்பக் குற்றுகரம் எனல் சரிதான். எனில் “வரையாடு” நெடில் தொடர்ந்த ஈரெழுத்தின் நீண்ட சொல்லை எ்ப்படி வகுப்பது? கடந்த 2012ஆம் ஆண்டு புதிய தலைமுறை இதழில் வந்த மாதிரி வினாத்தாள் தந்த குழப்பத்தைப் பற்றிப் பேசினோமே? அதுபற்றி ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன். சொல்ல வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா வணக்கம். தொல்காப்பியரின் ஈரேழுத்தொருமொழியும் நன்நூலாரின் நெடில்தொடர்க் குற்றியலுகரமும் ஒன்றே. ஆடு என்பது இரண்டு எழுத்தால் ஆன ஒரு சொல். தொல் காப்பியரின் கூற்றுப் படி இது இரண்டு எழுத்தால் ஆன ஈரெழுத்தொருமொழி.நன்நூலாரின் மொழிநிலைக் கொள்கையில் இது தனிமொழியே. ஆனால் வரையாடு என்பது தொடர் மொழி. வரை + ஆடு எனும் இரண்டு சொற்கள் புணர்ந்து ஒருசொல் நீர்மைத்தாக உள்ள தொடர்மொழி. நெடிதொடர் குற்றியலுகரம் என்பது தனிமொழியாகத்தான் இருக்கும் என்பதைத் தொல்காப்பியரும் நன்நூலாரும் ஒப்புக்கொள்கின்றனர். எப்படியெனில் தொல்காப்பியர் இதை ஈரெழுத்தொருமொழி என்றும் நன்னூலார் தனது நூற்பாவில் நெடிலோடு என்று பிரித்தும் கூறியுள்ளனர். மேலும் மற்ற ஐந்து குற்றியலுகரமும் தொடர் மொழியாகத் தான் வரும் என்பதையும் நூற்பாக்களே விளக்குகின்றன. "தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம்", "உயிர்த்தொடர்.." ஆகவே, வரையாடு என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரமே என்பது உறுதி. வரையாடு, செம்மறியாடு, ஆடு என்பன இனத்தால் ஒன்றே.... ஆனால் இலக்கணத்தால் (குற்றியலுகர வகைமையால் ) வேறு ஐயா. நன்றியுடன் உங்களால் நான் இன்னும் பட்டை தீட்டப்பட வேண்டியவன் கொ.சுப.கோபிநாத்

   நீக்கு
 2. விளக்கங்களுக்கு நன்றி... தங்களைப் பற்றி முத்துநிலவன் ஐயா அவர்களிடம் அறிந்தேன்...

  பதிலளிநீக்கு
 3. சிறந்த பயன்தரும் பதிவு
  தொடர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் கருத்துகளையும் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன், நன்றி ஐயா

   நீக்கு
 4. பள்ளியில் படித்ததை நினைவூட்டுவதாக இருக்கிறது உங்கள் பதிவு..மீண்டும் மீண்டும் படித்து நன்கு பதிக்கவேண்டும் மனதில். நன்றி

  பதிலளிநீக்கு
 5. குற்றியலுகரத்தின் தொகை 36 என்பது பற்றி விளக்கம் தரவும்

  பதிலளிநீக்கு

>