தமிழறிந்த எவரும்
ஔவையாரைப்பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். எழுத்தறிவு இல்லாதவர்கள் கூட ஒளவையை
அறிந்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் தோன்றிய பெண்பால் புலவர்களுள் யாவரும்
அறிந்த தலைசிறந்த அறிஞராகத் தொன்றுதொட்டுப் பேரோடும் புகழோடும் விளங்கி வருபவர் ஔவையார்.
நம் நாட்டில் ஔவையார்
என்று குறிப்பிடுகின்ற பெருமைக்குரியவர் ஒருவர் அல்லர்; பலர் என்று கூறுகின்றனர்.
பண்டைத் தமிழறிஞர்களுக்கு முறையான வரலாறு குறிக்கப்படாத குறை பெருங்குறையாக
இருந்து வருகிறது. எனவே, பல்வேறு
காலத்தில் தோன்றிய மொழிப்புலமை மிக்க பெண்ணறிஞர் பலர் ஔவையார் என்ற
பொதுச்சிறப்புப் பெயரால் போற்றப்பட்டு வந்திருக்கின்றனர்.
பேராசிரியர் மது.ச.
விமலானந்தன் அவர்கள் சங்ககால ஔவை, சங்கம் மருவிய கால ஔவை, சோழர் கால ஔவை,
பிற்கால ஔவை என நால்வகை ஔவையார் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். அதியனின் நண்பர், பாரி மகளிர்க்கு மணமுடித்தவர், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
பாடியவர், ஞானக் குறள், விநாயகர் அகவல்
பாடியவர் எனப் பகுத்துக் காட்டுகிறார்.
பேராசிரியர் பூவை அமுதன் அவர்கள்
“ஔவை” எனும் தன்னுடைய நூலில் சங்க கால ஔவை, இடைக்கால ஔவை என இரு வகை அவ்வையார்களைச்
சுட்டுகிறார்.
முனைவர். ஜே.ஆர். இலக்குமி அவர்கள் “ வரலாற்றில் ஔவை” எனும்
தமது நூலில் ஆறு அல்லது ஏழு ஔவையார் வாழ்ந்ததாகப் பதிவு செய்துள்ளார்.
கவிஞர்
இன்குலாப் அவர்கள் “ஔவை” எனும் தனது நூலில் சங்க கால ஔவை நம்மிடையே
தொலைந்துபோய்விட்டார் என்றும் பிற்கால ஔவையின் உருவமே நம்மில் நிழலாடுவதையும்
சுட்டுகிறார். ஔவையார் என்றாலே
மூதாட்டியின் உருவமே நமது மனக்கண்ணில் பிம்பமாகத் தெரிகிறது. காரணம் ஔவைப் பாட்டி
எனும் வழக்கு. மேலும், இதற்கு அரணாகத்
திரைப்படத்தில் ஔவை, புராணக் காட்சிகளுடன் பாட்டி வடிவில் படைக்கப்பட்டுவிட்டார். ஆனால், ஔவையார் சங்க காலத்தில் ஆடல், பாடல், இசை
வல்ல பாண் குடியில் தோன்றியவர். பாண் குடியில் பிறந்த பெண் பாடினி எனப்பட்டாள்.
தொல்காப்பியப் பொருளதிகாரக் கற்பியலில்
ஊடலை உணர்த்தும் வாயில்கள் பற்றிய நூற்பாவில் “ பாட்டி “ சொல் “ பாடினி “ எனும்
பொருளில் தொல்காப்பியரால் கையாளப்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். மேலும், பெருமைக்குரிய பெண்களைக் குறிக்க “
பிராட்டி “ என்று அழைக்கும் வழக்கமும்
உள்ளது. பிராட்டி என்பதே பாட்டி
எனவும் மருவி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகத்தியர் பெயரில் ஒருவரல்லர்; பலர். கபிலர், பரணர், நக்கீரர், கல்லாடர் ஆகிய சங்கப்
புலவர்களின் பெயர்களும் பக்தி இயக்கக் கால இலக்கியத் தொகுப்புகளில் காணலாகின்றன. மக்களிடையே சிறப்புப் பெற்றுத் திகழ்பவரின்
பெயர்கள் குழந்தைகளுக்குச் சூட்டி அழகுபார்ப்பது போல, (சான்றாக அஜித், விஜய்,
விக்ரம்....இன்னமும் எத்தனையோ) ஔவையின்
பெயரும் வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது ஒளவையாரின் பெயரில் இலக்கியங்கள் படைத்தால்
வரலாற்றில் நிலைக்கும் எனவும் நம்பிவிட்டனரோ?
எப்படியாயினும் சங்ககால ஔவை மூதாட்டி அல்லள்; அதியனின் தூதுவராக விளங்கி நாட்டுச்
சமரசத்திற்குப் போராடிய வீரப் பெண்மணி ஆவாள்.
சங்கக் கால அவ்வை, கிழவி அல்லள். இளம்பெண்தான்!
பதிலளிநீக்கு“முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல்“ எனத் தனது காமமிகுதியை -- கடலன்ன காமம் மிகுந்தும் அதை வெளிப்படுத்தும் வழக்கமில்லாத சங்கக் காலததில்- உணர்த்திய அவ்வை உறுதியாக இளம்பெண்தான் என்பது மட்டுமல்ல கோபி, அவள் அதியனின் நல்ல தோழியும் ஆவள் எனவே தான் அவனது மகன் பொகுட்டெழினி பற்றி அப்படிப் பாசத்தைப் பிழிகிறாள்... பிறர் சொன்னதையெல்லாம் எடுத்துக்காட்டிய நீஙகள், ஔவையார் எனும் தலைப்பில் சாகித்திய அகாதெமிக்காக ஒரு நூலையே எழுதிய முனைவர் தமிழண்ணல் பற்றி ஏதும் எழுதவில்லையே ஏன்? அதையும் பாருங்கள்.
அய்யா,
பதிலளிநீக்குஔவ்வை என்பது ஒரு புலவர் பட்டம் என்றே தொன்றுகிறது எனக்கு
நல்ல கட்டுரை இன்னும் ஆழமாக எதிபார்த்தேன். தினமணி என்று நினைவு ஔவை அதியனுடன் கள் உண்டதாக ஒரு கட்டுரை.. ஔவை ஒரு சிறு பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்று வாதிட்டது அக்கட்டுரை... ஒரு தகவலுக்கு சொன்னேன். நன்றி
ஆமாம் கஸ்தூரி, அதியமான் இறந்ததை அறிந்து வந்த அவ்வை, அவனை நினைவு கூர்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் புகழ்பெற்றது -
பதிலளிநீக்கு“சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே,
பெரிய கட் பெறினே யாம்பாடத் தாம்மகிழ்ந்துண்ணும் மன்னே,”... அதுபோகட்டும் கோபி, இந்த இலக்கணநூல் சரிதானா என்று பார்த்துச் சொல்லுங்களேன்... எனது மனம் இதை ஒப்பவில்லை... உங்கள் இலக்கணக் கல்லில் உறைத்துச் சொல்லுங்கள்.. http://paapunaya.blogspot.in/2013/12/03.html காத்திருக்கிறேன்...
என்ன ஆச்சு கோபி?
பதிலளிநீக்குஒரு படைப்புக்கும் இன்னொரு படைப்புக்கும் இடையே
இவ்வளவு இடைவெளி விட்டால், ஔவைக்குமரி குடுகுடு கிழவியாகாமல் என்ன செய்வாள்? அடுத்தடுத்து அப்பப்ப எழுதுங்கய்யா...
சகோதரருக்கு வணக்கம்
பதிலளிநீக்குஅவ்வை பாட்டியைப் பற்றி அலட்சியுள்ள விதம் மிக அழகு சகோதரரே. சங்க கால அவ்வை இளமையானவர் எனும் தகவலை நமது புதுக்கோட்டை நண்பர்களின் மூலம் ஒரு பயிற்சியில் தெரிந்து கொண்டேன். அவ்வை வீரப்பெண் அழகாக சொல்லியுள்ளீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள் சகோ..
ஔவை ஒருவரல்ல என்பதும்
பதிலளிநீக்குஔவை - பாட்டியல்ல என்பதும்
ஆச்சரியமான செய்திகள்...