புதன், 18 ஜூன், 2014

கனவு இலக்கண நூல் அறிவோம்!

     

        கனவு இலக்கண நூல் அறிவோம்!

       விஞ்ஞானிகளின் கனவுகள் உலகத்தை உயர்வடையச் செய்கின்றன. பல விஞ்ஞானிகள் தங்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை அவர்களின் கனவுகள் தீர்த்துவைத்துள்ளன.  ஒரு பொருளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அப்பொருள் பற்றிய கனவு தோன்றுவது இயல்பு. பேரறிஞர்கள் கண்ட மனக் கனவுகள் சமுதாயத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கின்றன.
     கனவுகளின் அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு என்பாரின் கருத்து. உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் கனவு காண்கின்றனர் தனிப்பட்ட மனிதர்களும் காண்கின்ற கனவுகள் அவர்கள் வாழ்க்கையை ஒட்டி அமைகின்றன. கனவு காணாத மனிதர்களே இல்லை.
     கனவைப் பற்றிய ஆராய்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் மிகுதியாக வளர்ந்தது.  ஆனால் கனவு பற்றிய செய்திகள் இலக்கியங்களில் கண்டிருப்போம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பாண்டிமாதேவி கனவுகள், சீவக சிந்தாமணியில் விசையையின் கனவு என்பன நாம் அறிந்தவை.
     கனவுகள் எதிர்பாராது தோன்றுவன. அதனால் தான் எதிர்பாராத இன்பம் பெறும் போதும், நினையாத துன்பம் நேரும் போதும் ‘கனவுபோல நடந்து விட்டது, கனவில் கூட நான் துரோகம் நினைக்க மாட்டேன்” என்பன போன்ற சொல்லாடல்கள் உள்ளன. நனவில் நிகழாதவையும் கனவில் நிகழலாம். நனவு நிலை அறிவு நிலைக்குக் கட்டுப்பட்டது.  கனவு அறிவு நிலை மயங்கி, அதனையும் மீறி நிகழ்வது. இந்தியா எவாறு இருக்க வேண்டும் என்பதை அரசியல் தலைவர்கள் அறிந்ஞர்கள் போன்றோர் கனவு காண்கின்றனர். பயபு அது நனவாகவும் அமைகிறது. பழங்காலப் புலவர்களும் ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தம் கவிதையின் வழி தம் கனவினைத் தெரிவிக்கின்றனர். தொல்காப்பியத்திலும் கனவு காண்பது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.
     சில நேரங்களில் சில நிகழ்வுகள் நடக்கும் போது அதை முன்பே கண்டது போன்றும், சில நேரங்களில் சில மனிதர்களைச் சந்திக்கும் போதும் அவர்களுடன் முன்பே பழகியது போன்றும் தோன்றுகின்றன. நிச்சயம் இது கனவின் வெளிப்பாடே.
     இப்படி கனவுகள் பற்றி விவரித்துக் கொண்டே போகலாம்.  கனவுக்குக் கூட நம் மொழியில் இலக்கண நூல் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா?  ஆம் நண்பர்களே.  “பொன்னவன் கனா நூல்” எனும் கனவு இலக்கண நூல் ஒன்றை சமீப காலத்தில் வாசித்தேன். இந்த நூல் திராவிட மொழிகளில் முதலில் தோன்றிய கனவு நூல்.
      கனவு நூல் பற்றிய குறிப்புகள்  சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் காணக் கிடக்கின்றன.  ஆனால், 1920 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் இந்தக் கனா நூலை வெளியிட்டுள்ளனர். பொன்னவன் எனும் புலவர் இந்த நூலை யாத்துள்ளார்.  முப்பது பாடல்களைக் கொண்ட இந்த நூல் அந்தாதி யாப்பில் உள்ளது. மேலும் பெண்ணை முன்னிலையாய் ( மகடூஉ) வைத்துப் பாடப்பட்டுள்ளது.
      கனவு காணும் நேரத்தைப்பொறுத்து அதன் நனவு தோன்றுமாம்.
       “படைத்த முற்சாம் ஓராண்டிற் பலிக்கும் பகர்இரண்டே
       கிடைத்தபிற் சாம மிகுதிங்கள் எட்டில் கிடைக்கும் என்னும்
       இடைப்பட்ட சாமம் மூன்றில் திங்கள் ஒரு மூன்று என்பவால்
       கடைப்பட்ட சாமமும் நாள் பத்துளே பலங்கைப் பெறுமே”
என்பது நூலின் தொடக்கத்தில் உள்ள ஒரு பாட்டு.
         இரவு 10- 11மணி   முதல் சாமம், 11-12 இரண்டாம் சாமம், 12-1 மூன்றாம் சாமம், 1-2 நான்காம் சாமம்.
       “ பற்றிடும் கீர்த்தி அணிகள் பெற்றால்,  இன்பம் பால்பருகில்
         அற்றிடும் துன்பம்,  தயிர் பேரில் பொன் பெறும்,  அப்பம் தின்றால்
         உற்றிடும் துன்பம், வரகும் செஞ்சாலியும் உப்பும் எள்ளும்
         பெற்றிடும் இன்பம், இறைச்சி உண்டாலும் பெருநலமே”
எனும் பாடல் நற்பலன்களைச் சொல்கின்றது.
      “ அல்லல் உண்டாகும் இரந்திடில், கட்டிலில் அப்பம் தின்றால்
        செல்வம் உண்டாகும், செழுமனிப் பூணைச் சில பறித்துப்
        புல்லர் கொண்டு ஓடினும் செல்வம் போம், சுரை, பூசணிக்காய்
        கொல்லைஅம் சாரல் வரையினில் காய் பேரில் குற்றம் உண்டே”
எனும் பாடலில் தீய பலன்களும் சொல்லப்படுகின்றன

        தமிழ் ஒரு பெருங்கடல். யாவும் அடங்குகின்றன. உலகில் கனவு பற்றிய ஆராய்ச்சி தொடங்கும் முன்பே இங்கு அதற்கு ஓர் இலக்கண நூல் இருந்துள்ளமை அறியும் போது என்னே வியப்பு. இப்படி எல்லாத் துறைக்குமான பழந்தமிழ் நூல்கள் வெளிப்பட வேண்டும்.  அரிய வகை நூல்கள் வெளிக்கொணர வேண்டும் என்ற கூற்றே தீர்க்க தரிசி பாரதியின் கனவு.  கனவு மெய்ப்படும்.  காத்திருப்போம்.  

17 கருத்துகள்:

 1. அருமை கோபி, தாம் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையம் என்று கிடைத்த அரிய நூலை அறிமுகப்படுத்திய உங்கள் அன்பு பெரிது. கனவுகள் பற்றிக் கட்டுரைகள் பல உண்ட. செய்யுள் நூல் இதுதான் என்பது அறிந்து மிகவும் மகிழ்கிறேன். இந்தப் பாக்கள் அனைத்தும் -அபிராமி அந்தாதி போல- கட்டளைக் கலித்துறையாகத் தோன்றுகிறது. அசைபிரித்துப் பாருங்கள். தொடருங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா. கனவுக்குப் பலன் என்பது ஒரு வகை நம்பிக்கை என்றாலும் அதற்கும் இலக்கண நூல் இருப்பதைப் பார்க்கும் போதுதான் வியப்பு. சேனாவரையரின் உரையில் யானை நூல் பற்றிய குறிப்பும் உள்ளது. இவற்றைப் பார்க்கும் போது அந்த நூல்களை எல்லாம் நாம் இழந்து விட்டோமே எனும் ஏக்கம் தான் வருகிறது. மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் மறைந்து போன தமிழ் நூல்கள் மாபெரும் தமிழ்ப் பழம்பேழை. அரிய நூல்களைக் காப்பாற்ற நாம் முனைவோம் ஐயா.

   நீக்கு
  2. பெருமதிப்பிற்குரிய அய்யா,
   வணக்கம். தங்களைக்குறித்து முத்துநிலவன் அய்யா நிறையக் கூறியுள்ளார்கள். உங்களைப்போன்ற தமிழாசிரியர்கள்தான் இன்று தேவை. உங்களைக்குறித்து எனது பதிவொன்றின் பின்னூட்டத்தில் முத்துநிலவன் அய்யா குறிப்பிட்டுள்ளதும் அதற்கு என் பதிலும் காண
   முப்பாற்புள்ளி எனும் என் பதிவு காண்க.http://oomaikkanavugal.blogspot.in/2014/06/normal-0-false-false-false-en-us-x-none.html. உங்களைப் போன்றோர் தான் என்னைச் செப்பஞ் செய்ய முடியும். நச்சினார்க்கினியரின் சிந்தாமணி உரையுள், பாகன் யானையைத் தொழிற்படுத்துதற்குரிய பேச்சுகளான “ அப்புது அப்புது, ஆதுஆது, ஐஐ..“(கனகமாலையாரிலம்பகம் 278) என்பதைக்குறிப்பார்
   முல்லைப்பாட்டிலும் மலைபடுகடாத்திலும் இப்பேச்சுமொழிகள் வருவதாக வருமிடங்களை ஐயர் இதன் அடிக்குறிப்பில் தருகிறார்.
   பெருங்கதையுள் பல இடங்களில் இத்தகு யானையை பழக்கவும் அடக்கவும் செய்யும் குறிப்புகளைக் கொங்குவேளிர் தம் பெருங்கதையுள் நிறையக் காட்டுவார்.
   இவ்வாறு பழைய உரையுள்ளும் , நூலுள்ளும் பயில வரும் இது போன்ற கருத்துக்களைத் தொகுத்தால் சேனாவரையர் காட்டும் யானை நூல் எவ்வாறிருந்திருக்கும் என்னும் ஒரு நல்ல அனுமானக் கட்டுரையை உருவாக்கி விடலாம். க. ப அறவாணன் போன்றோர் யாப்பருங்கல விருத்தியை முதன்மை ஆதாரமாகக் கொண்டு இலக்கண நூலகள் சிலவற்றை மீட்டுருவாக்கம் செய்து வெளியிட்டதைவிடக் கடினமானதும், ஆகச் சுவையானதுமான முயற்சியாய் இது அமையும்.
   அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!
   நன்றி!

   நீக்கு
 2. அன்பு அய்யா!
  நான் இணையத்திணைந்ததன் பின் நீங்கள் இடும் முதற்பதிவே, பழைய நூலொன்றின் புதிய அறிமுகமாய் , சுருக்கமான ஆராய்ச்சியாய், தமிழின் கண்ட ஓர் இலக்கண வகைமை உணர்த்துவதாய் அமைந்திடக் கண்டு மனம் பூரித்தேன். ஏதாவது பயனுள்ள செய்திகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் என்னைப் போன்றவர்களுக்குத தங்களின் இப்பகிர்வு நிச்சயம் மகிழ்வுதரும்.
  இந்நூல் குறித்து இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் நீங்கள் சான்று காட்டிய பாடல்களை நோக்கும் போது, அதன் கட்டளைக் கலித்துறை வடிவம், மகடூஉ முன்னிலை, காரிகை அமைப்பு, (ஜாமத்ததின் )சாமம் போன்ற தற்சமப் பயன்பாடு ( தொல்காப்பியத் தமிழில் யாமம் தான் சாமம் இல்லை.) இந்நூல் பிற்காலச் சோழப்பேரரசின் காலத்திற்கு அணுக்கம் கொண்டதாகத் தோன்றுகிறது. இது முடிபல்ல. என் தோன்றல்.
  தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் மட்டும் கனவு குறித்து நான்கு இடங்களில் வருகிறது. நானறிந்தவரை அதில் வேறெங்கும் கனவு இல்லை.
  காதல் கைம்மிகக் கனவி னரற்றலும் ( தொல். களவு. 25)
  கனவு முரித்த லவ்விடத்தான ( தொல். பொருளியல். 3)
  நாணுதல் துஞ்ச லரற்று கனவு வெனாஅ (தொல். மெய். 12)
  கண்டுயில் மறுத்தல் கனவொடு மயங்கல் ( தொல். மெய் 22)
  என்பவை அவை. கையில் புத்தகம் இருந்ததால் பார்த்துவிட்டேன். தங்களின் மேலாய்வுக்கு இது உதவக்கூடும்.
  கனவு குறித்த பதிவுகளும், விளக்கங்களும் எல்லா செவ்வியல் மொழிகளிலுமே காணப்படும் ஒன்றுதான். தொல்குடியினரின் அச்சத்தோடே பெரும்பாலும் அவை தொடர்புடையனவாய் அமைந்திருந்தன. ஆங்கிலத்தில் இது பற்றிய இயல் ‘ONEIROMANCY‘ எனபட்டது. இது கிரேக்க மூலத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த சொல்லாகும்.
  ஆகவே //““உலகில் கனவு பற்றிய ஆராய்ச்சி தொடங்கும் முன்பே இங்கு அதற்கு ஓர் இலக்கண நூல் இருந்துள்ளதாய்““//, நாம் பெருமை பட வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. வடமொழிக்குத் தமிழ் நல்ல பல வளமான இலக்கிய வகைமைகளைக் கொடுத்திருக்கிறது. வடமொழியிலிருந்தும் சிலவற்றைப் பெற்றிருக்கிறது. அப்படிப்பட்டவற்றுள் பெரும்பாலான நூல்கள் நம் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ‘அவர்களை‘ மட்டுமே அண்டிப்பிழைக்கத் துணைசெய்வனவாகவே போனதுதான் பரிதாபம்!
  ஆனாலும் கூட ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகையாக்கித் தமிழ்ப்படுத்தியதாக நான்நினைக்கும் அந்நூலை உடனடியாகப் படிக்கத் தோன்றுகிறது.
  பகிர்வினுக்கு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜோசப் ஐயாவுக்கு வணக்கம். தங்களின் செறிவான இலக்கணப் புலம் அறிந்து பூரிக்கின்றேன். தொல்காப்பியர் கனவு பற்றிப் பேசும் இடங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளீர்கள். நன்றி. தொடருங்கள் ஐயா

   நீக்கு
 3. எல்லோரும் செல்லும் பாதையில் செல்லாமல் தாங்கள் தனிவழியே இலக்கியப் பயணம் செய்வது போற்றுதற்குரியது.கனவுக்கு இலக்கண நூல் தமிழுக்கு புது வரவு.தாங்கள் இளைய உ.வெ .சா. இன்னும் மறைந்திருக்கும் புதையல்களைஎல்லாம் வெளிக்கொணருங்கள்.நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா. தொடருங்கள் உங்கள் இலக்கியச் சாரலில் நனையக் காத்திருக்கிறேன்.

   நீக்கு
 4. சிறந்த இலக்கண நூல் அறிமுகத்திற்கு எனது பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/06/teachers-in-web-world.html?showComment=1403974193240#c6401072316413391899

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். பதிவினைக் கண்டேன். வித்தியாசமான கோணத்தில் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  பதிலளிநீக்கு
 7. கனவைப்பற்றிய அருமையான பதிவு. கனவிலும் நினைக்கவில்லை. இது போல் அழகிய மென் தமிழில் படிப்பேன் என்று. என் வலைதளத்துக்கும் வாருங்களேன்http://swthiumkavithaium.blogspot.com/ நன்றி சுவாதி

  பதிலளிநீக்கு
 8. கனவுக் காட்சிகள் என்ற தலைப்பில் கல்கி குழுமத்தின் தீபம் என்ற இதழில் எழுதி வருகிறேன். அவசியம் பாருங்கள் சகோதரரே. எனது மின் அஞ்சல் swathi.selva@yahoo.in என் வலைதளமும் பாருங்கள். நன்றிhttp://swthiumkavithaium.blogspot.com/

  பதிலளிநீக்கு

>