புதன், 30 ஏப்ரல், 2014

பதார்த்தகுண சிந்தாமணி - உணவின் ஒளிவிளக்கு

      மனிதன் ஆரம்ப காலத்தில் விலங்குகளை வேட்டையாடித் தன் பசியைப் போக்கிக் கொண்டான். பின்பு நெருப்பைக் கண்டறிந்த பின் உணவை எப்படியெல்லாம் பக்குவப்படுத்தி உண்பது என்ற கலையை அறிந்தான்.  எதை எப்படிப் பக்குவப்படுத்துவது, உண்பது என்பவைகளை அறிந்து கொண்டான். இயல்புக்கு மாறாக உண்பது உடலில் நோயை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்தான். உணவே மருந்தாகும் முறையை அவன் அறிந்துகொள்ளப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆயிருக்கக் கூடும். ஆம். ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கு முன் பல படிப்பினைகள் நிகழ்ந்திருக்கக் கூடும்.
      பசித்துப் புசி, அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, நொறுங்கத் தின்றால் நூறு வயது போன்ற பழமொழிகள் உணவு மற்றும் உணவை உண்பதன் கட்டுப் பாட்டை நமக்கு உணர்த்துகின்றன. மாறிவரும் சமூகத்தில் உணவுமுறை மிக மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் துரித உணவகங்கள், பொறித்த பண்டங்கள்.... முன்பெல்லாம் மாலை நேரம் ஆகிவிட்டால் எங்கோ சில இடங்களில் தள்ளு வண்டிகளில் வடை சுடுவர். பிட்டு, அப்பம் முதலான உணவு வகைகள் அதில் இடம் பெறும். இவ்வளவு ஏன் நம் சிலப்பதிகாரத்தின் கடலாடு காதையில் கடலோரத்தில் பலவகை உணவுப் பொருட்கள் விற்கும் அங்காடிகள் இருந்ததைப் பற்றிப் படிக்கும் போது எனக்கு மெரினா கடற்கரை, மதுரைத்  தெப்பக்குளத்தைச் சுற்றியும் அமைந்துள்ள சிறு சிறு அங்காடிகள் நினைவிலாடுகின்றன. 

     ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் மாலைப் பொழுதுகளில்-தள்ளு வண்டிகளில் பானி பூரி, சில்லி சிக்கன் என்பன வந்துவிட்டன. அதிலும் கோழி இறைச்சியை செந்நிற மிளகாய்ப் பொடியில் வண்ணமூட்டித் தோரணமாகத் தொங்கவிட்டுள்ள காட்சியும், எண்ணெயில் அதைப் பொறித்து எடுக்கும் நெடியும்....அப்பப்பா அனைவரும் இவற்றை உணர்வர். இவற்றை உண்பதால் உடலில் நோய் ஒட்டிக்கொள்ளும்(கொல்லும்) என்பதைத் தெரிந்தே உண்கின்றனர்.  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?
 நாம் உண்ணும் உணவு ஒவ்வொன்றும் மருந்து என்பதை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.  “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு” எனும் திருக்குறட்கருத்து நம் உடலுக்கு மருந்து என்ற ஒன்று தேவை இல்லை என்பதைக் கூறுகிறது. எனவே உண்ணும் உணவையும் உணவு முறையையும் சீர்ப்படுத்திக் கொண்டால் நலமுடன் வாழலாம்.

     நான் சமச்சீர்க் கல்வியில் ஆறாம் வகுப்புப் பாடநூல் குழுவில் இருந்த போது பதார்த்தகுண சிந்தாமணி எனும் நூலைக் கண்டுகொள்ள நேர்ந்தது.  அந்த நூல் அரிய நூலாக இருந்தது. கன்னிமரா நூலகத்தில் இருந்து பழமையே உருவான நிலையில் அந்த நூலை நான் கண்டேன்.  அந்த நூலை புத்தகக் கண்காட்சி ஒன்றில் மறுபதிப்பாக வந்தமையைப் பார்த்த போது உடனே வாங்கிக் கொண்டேன். அதை வாசித்த அனுபவத்தை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன்.
    பெயர் அறியப்படாத சித்தர் ஒருவரால் எழுதப்பட்ட நூல் பதார்த்தகுண சிந்தாமணி. கடவுள் வாழ்த்துடன் தொடங்கும் இந்த நூல் பதார்த்த வகை, வைத்தியாங்கம், தினக்கிரமாலங்காரம் என்ற பகுப்புகளை உடையது. வெண்பா மற்றும் விருத்தப் பாக்களால் இயற்றப் பட்டது.ஆயிரத்து ஐந்நூற்றுப் பதினொரு பாடல்கள் உள்ளன.

 பதார்த்த வகை: 

     பதார்த்தம் என்பது உணவு. இந்த உணவை உண்டாக்குகின்ற பஞ்ச பூதங்கள், நிலங்கள் அவற்றின் தன்மை முதலில் விளக்கப் படுகின்றது. ஓரறிவு முதல் ஐந்தறிவு ஈறாக உள்ள உயிர்களையும் அவற்றை உண்பதால் உடலில் உண்டாகும் நோய்கள், விலகுகின்ற நோய்கள் முதலியன நன்கு கூறப் படுகின்றன.
நீர் வகை என்று எடுத்துக் கொண்டால் மழை, ஆலங்கட்டி, பனி, ஆற்று நீர், பல்வகை நதிகள், குளம், ஊற்று, கிணறு, ஓடை, பல்வகை அருவிகள், வெந்நீர், பலவகைப் பாத்திரங்களில் சூடேற்றப்பட்ட நீர் அவற்றின் குணம், அவற்றால் ஏற்படுகின்ற விளைவுகள் அருமையாகக் கூறப்பட்டுள்ளன.
பல வகை விலங்குகளின் பால், மரங்கள் செடிகளில் இருந்து எடுக்கப்படும் பால், தயிர், மோர், வெண்ணெய், சிறுநீர், பல்வகைப் பழங்கள், பாகு, சர்க்கரை, கற்கண்டு, தேன், மது, மரங்கள் அவற்றின் குணம், செடிகொடிகள், கிழங்குகள், வேர்கள், புல், மரப்பட்டை, கீரை, இலை, மரப்பிசின்,பூக்கள், பிஞ்சுகள், வித்துகள், அரிசி தினை வகை எனப் பட்டியல் நீள்கிறது.
இறைச்சி வகை என்பதைச் சொல்லும் போது, ஆடு, குறும்பாடு, பன்றி, உடும்பு, புலி, கரடி, முதலை, பூனை, கீரி, நாய், எலி, மாடு முதலானவை இடம்பெறுகின்றன.  பலவகையான மீன்களும் அவற்றின் இறைச்சி மருந்தாகும் தன்மை நன்கு விளக்கப் பட்டுள்ளன.  
வைத்தியாங்கம் பகுதி:
     இந்தப் பகுதியில் நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப மருந்து உட்கொள்ளும் முறை கூறப்பட்டுள்ளன. மருந்துகளைத் தயாரிக்கும் முறை நன்கு விளக்கப் படுகின்றது.
தினக்கிரமாலங்காரம்:
   இந்தப் பகுப்பில் வீடுகளின் வகை, ஒவ்வொரு வகை வீட்டின் குணம், எப்படித் தூங்குவது, எழுவது, பல் துலக்குவது, கழிவகற்றுவது, உடற்பயிற்சி, புணரும் இயல்பு முதலிய செய்திகள் உள்ளன. விசிறிகளின் வகைகளும் ஒவ்வொரு வகை விசிறியால் ஏற்படுகின்ற விளைவுகளைக் கூறி இருக்கும் நிலையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
      விரைவாக முன்னேறிவரும் உலகில் பல துறைகள் உருவாகிக் கொண்டே செல்கின்றன.  மனையியல் கல்வி எனும் துறை நம் நாட்டிற்குப் புதிதன்று என்பதை இந்த நூல் படித்ததன் பின் உணர்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இந்த நூல் இருக்க வேண்டும்.  வாழும் முறையைக் கற்றுக் கொடுத்தவை  குருகுலங்கள்.  ஆறுமுக நாவலரின் பால பாடம் எனும் நூலிலும் குருகுலக் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை அறியலாம். ஆனால் இன்று தகவல்களைத் திணிக்கும் முறையாக கல்வி உருவெடுத்துள்ளது என்பதையும் இந்த நூல் வாசிப்பின் பின்பு உணர்கின்றேன்.
    எவற்றை உண்டு, எப்படி வாழ வேண்டும் எனும் கலையை விளக்கும் பதார்த்தகுண சிந்தாமணி வீட்டின் ஒளி விளக்கு. 

இந்த நூலில் உள்ள சில பாடல்கள் கீழே....
வெந்நீரின் குணம்
     நெஞ்செரிப்பு நெற்றிவலி நீங்காப் புளிஏப்பம்
     வஞ்சமுற வந்த வயிற்றின்நோய்   -  விஞ்சியே
     வீழாமக் கட்டோடு  வெப்புஇருமல்  சுட்டநீர்
     ஆழாக்குட்  கொள்ள  அறும்.
வெள்ளாட்டு இறைச்சியின் குணம்
     உள்ளாறும் நோயெல்லாம்  ஓடும் உடல்பறக்கும்
     தள்ளாடு வாதபித்தம் சாந்தமாம்  -  வெள்ளாட்டின்
     நற்கறியை உன்பார்க்கு நாடுகய  ரோகமும்போம்
     மற்குரிய  வன்பலனாம் வாழ்த்து.
கோழிக்கறியின் குணம்
     கோழி கறிநெருப்பாம்  கொள்ளில்  மருந்துரம்வங்
     கூழைக்  கருப்புமந்தம் கூறரகம்  -  மாழ்கிப்போம்
      நீளுற்ற  போகம்  நிணக்கிரந்தி  பித்தமுண்டாம்
      தூளித்த  மெய்இளைக்கும்  சொல்
காடைக் கறியின் குணம்
     கட்டில் கிடப்பார்க்குக் காட்டில்  படும் காடை
     மட்டவிழும்   கோதாய் மருந்தன்றோ  -  இஷ்டம்உற
     சோறு புகும்  சோபைஅறும்  துன்நோய் எல்லாம் ஏகும்
     வேறுமருந்து  ஏற்றுவதேன்  விள்

அயிரை மீனின் குணம்
     உயிரை வளர்க்கும்  உடற்பிணியை  நீக்கும்
     மயிரை  வளர்க்கும்  அருசி மாற்றும் – வயிரச்
     செயிரையுறாச்  சற்குணநல்  தெள்ளமிர்தே  நாளும்
     அயிரை எனும் மீன் அது.
நோய் அணுகா விதி
     திண்ணம் இரண்டுள்ளே சிக்க அடக்காமல்
     பெண்ணின்பால் ஒன்றைப் பெருக்காமல் – உண்ணுங்கால்
     நீர் கருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி  உண்பவர்தம்
     பேருரைக்கிற்  போமே பிணி. 
     

5 கருத்துகள்:

 1. அருமை கோபி. நல்லவேளை எனக்குத் தனியஞ்சல் செய்திருந்தீர்கள்.
  உங்களின் இந்த அரிய பதிவைப் பார்க்காமல் போயிருந்தால் மிகவும் வருந்தியிருப்பேன். அரிய நூல் பற்றிய மிக அழகான பதிவு. சாப்பாட்டில் இவ்வளவு இருக்கா? தமிழர் உணவே மருந்து என்பது தெரியும்தான் அதிலும் அசைவ உணவைப்பற்றிய அரிய தகவல்கள். தொடர்நது எழுதுங்கள் கோபி. வாரம் அலலது பதினைந்து நாளைக்கு ஒரு பதிவு கூடப் போதும். திரட்டிகளில் இணையுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 2. மீண்டும் எழுதத் தொடங்கியதால் எனது வலைப்பக்க இணைப்புவலைப் பட்டியலில் மீண்டும் சேர்த்துவிட்டேன். முக்கியப் பணிகளுக்கு இடையூறின்றி அவ்வப்போது எழுதுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 3. இலக்கணத் தேறல் இளைய தலைமுறைக்குத் தேவை என்பதால் அதிகம் நான் தங்கள் பதிவைப் பெரிதும் வரவேற்கிறேன். மாதம் ஒன்றாவது பதிவு செய்யுங்கள். தொடருங்கள்...

  தங்கள் நூலறிமுகத்தை வரவேற்கிறேன்.

  புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா? (http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html) என்ற பதிவிற்குத் தங்கள் பதில் கருத்து என்னவாயிருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. ஐயா! அபூர்வமான நூல் பற்றிய அருமையான பதிவு! நம் தமிழில் இல்லாதது ஒன்றும் இல்லை. இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனையோ அரிய நூல்கள் நம் மொழியில் உள்ளன. அவற்றை வெளிக்கொணரும் தங்களின் தொண்டு தொடரட்டும்..!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா. நான் "தமிழர் அன்று சொன்னவை... அர்த்தமுள்ளவை" என்ற நூலைப் படித்தேன். அது ஒரு தமிழ் மருத்துவக் கழக வெளியீடு, என் தங்கை சித்த மருத்துவர் என்பதால் என் கண்ணில் பட்டது, எடுத்து வந்துவிட்டேன்.அதில் பதார்த்த குண பாடம் என்று அடிக்கடி குறிப்பிடப்பட்டது..அதை தேடி படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கையில் அதைப் பற்றிய உங்கள் பதிவு மகிழ்வூட்டுகிறது..
  உங்கள் அருமையான பதிவுகளை இனித் தொடர்வேன். நன்றி

  பதிலளிநீக்கு

>