ஞாயிறு, 18 மே, 2014

திருக்குறளும் சௌராஷ்டிர மொழியும்

                               தமிழ் மறை என்று அழைக்கப்படும் திருக்குறள் உலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  ஏராளமானோர் உரை எழுதியுள்ளனர்.  வேறெந்த நூலுக்கும் இல்லாத சிறப்பு,  உரை கூட யாப்பு முறையில்  காணப்படுவதே. இக்காலத்தில் கவிஞர் பலரும் புதுக்கவிதையில் திருக்குறளுக்கு உரை வகுத்துள்ளனர்.
     மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மாற்றம் செய்யும் செயல். இச்செயலைச் செய்யும் முன் அந்தந்த மொழிகளுக்கான கலாச்சாரக் கூறுகளும் பின்புலமாவதைக் காண்கிறோம். சான்றாக வடமொழியில் இருந்து இராமாயணம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட போது தமிழ்ப் பண்பாடு இந்த நிலத்திற்குரிய திணை ஒழுக்கம் மாறாவண்ணம் கம்பர் மொழிபெயர்த்தார். வடமொழி யாப்பு முறை வேறு. நம் தமிழ் யாப்பு முறை வேறு.  கம்பர் விருத்த யாப்பில் இராமாயணத்தை மொழிபெயர்த்தார்.
     தமிழ் நூலான திருக்குறளுக்கு யாப்பு வடிவில் சோமேசர் முதுமொழி வெண்பா எனும் நூல் செய்யுள் வடிவ உரை நூலாக உள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழிபெயர்ப்புகள் உரை நடை வடிவில் காணப்படுகின்றன. ஆனால், வெண்பா யாப்பு முறையில் அமைந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று உள்ளது.
     “திருக்குறளில் தளைப் பிழையா?” எனும் தலைப்பில்  கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த போது நான் பல உரையாசிரியர்களின் உரைகளைக் காண நேர்ந்தது. தருமை ஆதீன வெளியீட்டில் “அக்தின்றேல்” எனும் சீர் பல இடங்களில் “அது இன்றேல்” என்று பாடபேதம் குறிக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு கூற்றும், யாப்பருங்கல நூலின் உரை மேற்கோள் நூற்பாக்களாலும் திருக்குறளில் தளைப் பிழை இல்லை பாடபேதம் உண்டு என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நான் திருக்குறளுக்கு உரிய பழைய உரை நூல்கள் ஆய்வு நூல்களைச் சேகரிக்கத் தலைப்பட்டேன். 
    மதுரை காமராசர் பல்கலைக் கழகம் திருக்குறள்  உரைவளம் எட்டுத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது.  இன்று சில தொகுதிகள் மறுபதிப்பின்றி உள்ளன. துறவறவியல் தவிர எஞ்சியுள்ள ஏழு தொகுதிகளை வாங்கினேன். பின்பு திருக்குறளுக்குச்  சௌராஷ்டிரா மொழிபெயர்ப்பு உள்ளதை அறிந்தேன். அந்த நூலும்  மறுபதிப்பு இல்லாமல் இருக்கிறது. நூலை பதிப்பித்து வெளியிட்ட மதுரைத் தெப்பக்குளம் சித்தாச்ரமம் சென்று அணுகினேன். ஒரு சில பிரதிகளே அவர்களிடம் இருந்தன. அரிதின் முயன்று அந்த நூலைப் பெற்றேன்.

                                      சிறுபான்மை மொழியாக விளங்கும் சௌராஷ்டிரா மொழியில் கவிஞர் சங்குராம் என்பவர் மிக அழகாகத் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பில் கண்ட சிறப்பு,  தமிழ் மொழியின் வெண்பா யாப்பு முறை அப்படியே கையாளப்பட்டுள்ளது.  திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கும் உவமைகள் கொஞ்சம் கூட சுவை குன்றாமல் செப்பலோசை குன்றாமல் சௌராஷ்டிரா மொழியில் படைத்துள்ள விதம் வியக்கத்தக்கதாக உள்ளது.  “ஸ்ரீ த்வின்” எனத் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார் கவிஞர் சங்குராம்.
      சில வருடங்களுக்கு முன்பு தான் சாகித்ய அகாதெமி சௌராஷ்டிரா மொழியை இணைத்துக் கொண்டு அம்மொழியில் வரும் படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் ஊக்கமூட்டிவருகிறது. ஆனால் சௌராஷ்டிரா மொழியில் இராமாயணம், கீர்த்தனைகள், நாடகங்கள் எனப் பல உள்ளதை அறிகிறோம்.  திருக்குறள் சௌராஷ்டிர மொழிபெயர்ப்பு நூல் பற்றி இன்னும் ஒரு கட்டுரையில் விளக்கமாகக் காண்போம். அரிய நூலைக் கண்ட அனுபவத்தை இங்குப் பகிர்ந்து கொண்டேன்.
     பிராகிருத மொழியில் நடுநாயகமாக விளங்கிய சௌரசேனை எனும் மாபாசையின் திரிபாகச் சௌராஷ்ட்ர மொழி சிறுபான்மை மக்களால் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புலம் பெயர்ந்து நில மொழியான தமிழைப் பேசிவரும் போதும் சௌராஷ்டிரா மக்கள் தம் தாய்மொழியை விட்டுக்கொடுக்காது பேசி வருவதால் இன்னும் அம்மொழி பேச்சு மொழியாக உயிருடன் இங்கு வாழ்கிறது. 
    

5 கருத்துகள்:

>