திங்கள், 11 ஆகஸ்ட், 2014

மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - ௨ )





சார்பெழுத்துகளின் வடிவம்

     “மொழியின் உயிர் வாய்க்கும் செவிக்கும் இடையே உள்ளது. எழுதுகோலுக்கும் கண்ணுக்கும் இடையே இல்லை” என்பார் அறிஞர் மு.வ. இதன் மூலம் எழுத்தின் ஒலி வடிவமே நிலையானது. வரிவடிவம் மாறும் தன்மையுடையது என்பதை அறிகிறோம்.  பழங்காலத் தமிழிக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் வடிவம் தற்போது நிறைய மாற்றங்களை அடைந்துள்ளது.  சார்பெழுத்துகளின் பகுப்பில் இவ்வரிவடிவமும் முக்கியத்துவம் பெறுவதால் அதனைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.

உயிர்மெய்

      தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்தின் வரிவடிவம் பற்றி நூன்மரபில் உள்ள நூற்பாக்கள் தெளிவுபடுத்துகின்றன.  உயிர்மெய் எழுத்துகள் வரிவடிவம் பற்றிய நூற்பா “புள்ளி இல்லா எல்லா மெய்யும்” என்பது.  உயிர்மெய் எழுத்தானது புள்ளி இழத்தல், உருவு திரிதல் என்ற இரு மாற்றங்களைப் பெறுகின்றன.  உரையாசிரியர்கள் இந்த உருவு திரிதலைக் கால் பெறுதல் (கா), கீழ்விலங்கு பெறுதல் (கு), மேல் விலங்கு பெறுதல் (கி), கொம்பு பெறுதல் (கெ), கொம்பும் காலும் பெறுதல் (கொ) என விவரிக்கின்றனர். உயிர்மெய் வரிவடிவம் பொறுத்த அளவில் பெரியார் வா.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தக் கருத்துகள் தவிர்ந்து மரபு இலக்கண நூல்கள் கூறுவதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆய்தம்

     ஆய்த எழுத்தின் வரிவடிவம் ஆய்வுக்குரியதாக உள்ளது. ஆய்தத்திற்குத் தனியே வரி வடிவம் இல்லை என்றும் அது உரசொலியை ஏற்படுத்துகின்ற ஒரு குறியீடு என்றே வாதிடுகின்றனர்.  இந்தி மொழியிலும் : எனும் குறியீடு ‘அஹ்’ எனும் ஒலியை ஏற்படுத்த வருவதைச் சுட்டுவர்.  தொல்காப்பியர் “ஆய்தம் என்ற முப்பாற் புள்ளி” என்று குறிப்பிடுவதால் ஆய்த எழுத்து புள்ளிகள் இட்டு எழுதப்பட்டதெனக் கூறுவார். ஆனால், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் முதலான நூல்களில் இதன் வடிவம் கூறப்படவில்லை.
     கி.பி.800 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசக்குடிச் செப்பேட்டில் ஆய்த எழுத்து தலைகீழ்ப் பிறைக் குறியின் மேலும் கீழும் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது என்றும்,  திருச்செந்துர்க் கல்வெட்டில் வகுத்தல் குறி போல எழுதப்பட்டுள்ளது என்றும் முனைவர் காசிராஜன் கூறுகிறார்.  மேலும் நச்சினார்க்கினியர் காலத்தில் ஆய்த எழுத்து முக்காற்புள்ளி ( : ) யாக எழுதப்பட்டுள்ளது, வீரமாமுனிவர் முப்புள்ளியிட்டு எழுதினார் என்றும் கூறுகிறார்.
     “ஆய்த எழுத்து அடுப்புக் கட்டி போன்ற வடிவத்தினது. அடுப்பில் நெருப்பை அணைக்கும்போது உண்டாகும் ஓசையை ஒருபுடை ஒத்திருப்பதால் ஒருகால் அதன் வரி வடிவு அடுப்புக் கூட்டுப் போல் முப்புள்ளி வடிவில் அமைக்கப்பட்டிருக்கலாம்” என கிரேசிளின் பாலினோ என்பார் கூறுகிறார்.
           “எகர ஒகர உயிர் மிசை ஒற்றின்
           புள்ளி வைத்தமை பொறாஅது ஒருவினர்
           வாழி என்றே வழுத்துதும் யாமே” ( அறுவகை இலக்கணம் )
என வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்த்திருத்ததைப் போற்றும் அறுவகை இலக்கண நூலாசிரியரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,
           “----------------------------------------- உரித்த தேங்காய்க்
           கண்போல் முச்சுழி கவினுறக் காட்டல்
           ஆய்தம்”               ( அறுவகை இலக்கணம் )
என ஆய்த எழுத்தின் வடிவத்தை விளக்குகிறார்.  எப்படிப் பார்க்கினும் ஆய்த எழுத்தை எழுத, எழுதுகோலால் மூன்று முறை ஒற்றும் முயற்சி இருந்துள்ளமை அறியலாகிறது.

அளபெடைகளின் வடிவம்

     செய்யுளில் ஓசையை நிறைவு செய்ய வருவன அளபெடை.  உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் நீண்டு அளபெடுக்கும். அவ்வாறு அளபெடுக்கும் போது அதன் இனக் குறில் அடையாளமாகப் பக்கத்தில் எழுதப்படும்.
           “குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
           நெட்டெழுத்து இம்பர் ஒத்தகுற் றெழுத்தே”  (தொல். )
என்கிறது தொல்காப்பியம்.  மேலும்,
           “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
           கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்”  ( தொல்.  )
என்றும் கூறுவதால் உயிரளபெடை நெடில் + குறில் இணைத்து எழுதப்பட்டது. இனம் இல்லாத எழுத்துகளான ஐகாரம் இகரத்தையும், ஒளகாரம் உகரத்தையும் அடையாளக் குறியாகப் பெற்றன.
     இதே போல ஒற்று அளபெடுக்கும் சூழல் நேரும்போது அதே ஒற்று மறுமுறை எழுதப்பட்டது.  அளபெடை எழுத்துகளின் வரிவடிவத்தில் இலக்கண நூல்கள் யாவும் ஒரே கருத்துகளையே கூறுகின்றன.



குற்றியலுகரமும் குற்றியலிகரமும்

      வடிவம் பற்றிய சிந்தனையில் குற்றியலுகரமும் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில் தொல்காப்பியர் குற்றியலுகரம் புள்ளிபெறும் என்கிறார்.
           “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”
           “குற்றிய லுகரமும் அற்று என மொழிப”  ( தொல். )
என்ற நூற்பாக்களால் குற்றுகரம் புள்ளியிட்டு எழுதப்பட்ட நிலையை அறிகிறோம்.  மேலும், உகர எழுத்துக்கு ஒரு மாத்திரை. குறுகும் உகரத்திற்கு அரை மாத்திரை.
     பொதுவாக எழுத்துகள் தன் மாத்திரையில் இருந்து பாதி அளவு குறையும் போது புள்ளியிடப்பட்டது. இந்தக் கோட்பாட்டைத் தொல்காப்பியத்தின் மூலமே அறியலாம்.  மகர ஒற்று ஏற்கெனவே ஒற்றுடன் உள்ளது. இது மேலும் குறுகும்போது மகரத்தின் உள்ளேயும் ஒரு புள்ளியிட்டு எழுதும் வழக்கை,
           “உட்பெறு புள்ளி உருவா கும்மே” ( தொல். )
எனும் நூற்பாவால் தெளியலாம்.  எனவே, உகரம் பாதி அளவில் குறைந்ததால் புள்ளியிட்டு எழுதப்பட்டது.  சிலர், குற்றியலுகரம் புணர்ச்சியின் போது உகரம் கெட்டு மெய் ஈறாக நின்று சேர்வதால் புள்ளியிட்டு எழுதப்பட்டது என்றும் கூறுவர். யாப்பிலக்கணத்தில் குற்றியலுகரச் சொற்கள் முன் வருமொழியில் உயிர் வரும் போது உகரம் கெடும் என்பதை அறிவிக்கும் குறியீடாகவும்  புள்ளியிட்டு எழுதப்பட்டிருக்கலாம்.
           “குற்றிய லிகரமும் குற்றிய லுகரமும்
           மற்றவை தாமே புள்ளி பெறுமே”
எனச் சங்கயாப்பு எனும் நூல் கூறுவதாக யாப்பருங்கலம் நவில்கிறது. நச்சினார்கினியரும் முத்துவீரிய ஆசிரியரும் குற்றியலுகர குற்றியலிகரங்கள் புள்ளி பெற்று வழங்கின எனச் சுட்டுகின்றனர்.
     “குற்றியலுகரம் என்பது உகரத்தின் திரிபு அல்லது மாற்றுஒலி அல்ல. அது வல்லெழுத்தை உச்சரிக்கின்றபோது ஏற்படுகின்ற விடுப்பொலி அல்லது வழுக்கொலி. குற்றியலிகரமும் இதைப் போன்றதே” என்கிறார் முனைவர் காசிராஜன்.  எனவே, உரசொலி உண்டாக்கும் ஆய்தம் ஒற்றுகளிட்டு அடையாளப்படுத்தப்பட்டது போலக் குற்றுகர இகரங்கள் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளன.
     நால்வகைக் குறுக்கங்களில் மகரக் குறுக்கத்திற்கு மட்டும் குறியீட்டு வடிவம் இருந்தமையைத் தொல்காப்பியர் மூலமாக அறிகிறோம்.
           “அரைஅளபு குறுகல் மகரம் உடைத்தே
           இசையிடன் அருகும் தெரியும் காலை”
           “உட்பெறு புள்ளி உருவா கும்மே”   ( தொல். )

என்ற நூற்பாக்கள் மகர ஒற்று மேலும் ஓர் ஒற்றை உள்ளே இட்டு எழுதப்பட்டுள்ளது.

3 கருத்துகள்:

>