திங்கள், 14 ஏப்ரல், 2014

ஏழு - ஏழ்


              தமிழ் மொழியில் உள்ள எண்ணுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாகவே உள்ளன. ஆனால் எண் ஏழு என்பது மட்டும் அதில் விலகி உள்ளதைத் தொல்காப்பியத்தின் மூலம் நாம் உணரலாம். ஆம் நண்பர்களே!  எண் ஏழு குற்றியலுகரச் சொல்லா என்பதில் சற்று ஐயம்.  ஏழ் என்பதே சரியான வடிவம்.  தொல்காப்பியத்தில் எண்ணுப் பெயர்ப் புணர்ச்சிகள் யாவும் குற்றியலுகரப் புணரியலில் கூறப் பட, ஏழு என்பதற்குரிய புணர்ச்சி மட்டும் மெய்யீற்றுப் புணரியலில் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். ஆகவே, ஏழு என்பது ஏழ் என்று வழங்கியதை நாம் உணர்வோமாக.

            ஏழு எனும் சொல்லில் தான் எவ்வளவு செய்திகள்... சமீபத்தில் தொகை அகராதி எனும் நூலை வாசித்தேன். அதில் எண் ஏழு பற்றி நிறைய தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. அவற்றை நம் வலைப்பூவில் பகிர்ந்து கொள்கிறேன்.
 எழுகடல் :  உப்புக் கடல், தேன் கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தயிர்க் கடல், நெய்க் கடல், பாற்கடல், சுத்தநீர்க் கடல்
ஏழு பருவ மகளிர்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
எழுபிறப்பு: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்
எழுவகைத் தாது: தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சி, சுவேத நீர்
எழுவகை மாதர்: அபிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேஸ்வரி, மாகாளி
எழுவகை மேகங்கள்: சம்வர்த்தம், ஆவர்த்தம், புத்களா வர்த்தம், சந்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம்
எழுவகைக் கீழ்  உலகங்கள்: அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதலம்
எழுவகை மேல் உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், ஜனலோகம், தவலோகம், சத்தியலோகம்
அகத்திணைகள்:  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
புறத்திணைகள்: வெட்சி, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண்
இசை:  குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
உலோகங்கள்: செம்பொன், வெண்பொன், இரும்பு, ஈயம், வெண்கலம்,செம்பு, தரா
அளவைகள்: நிறுத்தல், பெய்தல், சார்த்தல், நீட்டல், முகத்தல், தெறித்தல், எண்ணுதல்
நதிகள்: கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, காவிரி, குமரி, கோதாவரி
சுரங்கள்: ச, ரி, க, ம, ப, த, நி
தாளங்கள்: துருவம், மத்தியம், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம், ஏக தாளம்
சப்தபுரிகள்: அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை
முதல் ஏழு வள்ளல்கள்: குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி
இடை ஏழு வள்ளல்கள்: அக்குரன், சந்திமான், சிசுபாலன், தந்த வக்கிரன், கன்னன், சந்தன்
கடை ஏழு வள்ளல்கள்: எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்  
நிறங்கள்:  ஊதா, நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு 
இன்னும் இன்னும் எவ்வளவோ!!! 

வியாழன், 10 ஏப்ரல், 2014

விருந்தோ... அமரர் மருந்தோ...

         விருந்தோ... அமரர் மருந்தோ...

ஆன்றோர் உண்ணும் அமுதம் தானோ!
என்னவள் இல்லம் இமயம் தானோ!
அத்தையும் மாமனும் அருகில் தோன்றி
மெத்த அருளும் இறைவரும் தாமோ!

மூன்று ஆண்டாய்  முடித்த காதலைத்
தோன்றச் செய்து துணிந்த மனத்துடன்
ஈன்ற மகளை எனக்கென அருளிய
நான்காண் தெய்வம் நான்புகழ் தெய்வம்!

விருந்தென என்னை வீட்டிற்கு அழைத்து
அரும்பிய புன்னகை அள்ளித் தெளித்து
அருந்தமிழ் போலே ஆன்ற உணவை
விருந்தெனப் படைத்தனர் வியக்குது நெஞ்சம்!

காலை நேரம் காரட் அல்வா
பாலை அடக்கிய பாலின் அல்வா
மண்மணம் வீசும் மல்லிச் சட்டினி
தென்னங் காயின் தீஞ்சுவைச் சட்டினி


நாசி துளைக்கும் நறுமணச் சுவையுடன்
பாசிப் பருப்பில் பதார்த்த சாம்பார்
பூரி கொண்டு புசிக்கும் போது
பாரி கூடப் பசித்துப் போவான்!

சுக்கு போட்டுச் சுட்ட பாலின்
பக்குவம் தன்னைப் பகரும் போது
கரத்த தொண்டை கனிவாய்த் தோன்றி
உரத்த குரலில் ஊர்க்கே சொல்லும்!

ஆவின் தயிரில் உள்ளிப் பச்சடி
நாவின் அடியில் எச்சிலை எழுப்பும்
முந்திரி போட்டு முடித்த சாதம்
இந்திர லோகம் எங்கும் வீசும்!


அத்தை செய்த அமுதுக்கு நிகரா
சொத்தை ஆன மாலை உணவு!
என்னவள் அருகில் இனிதாய் இருக்க
இன்சுவை தானே இந்த உணவும்!


புளியின் சாதம் புன்னகை தோற்றும்
களிக்கச் செய்து கனிவுறும் மனத்தை
மல்லிகைப் பூப்போல் இட்டலி கூட
மெல்ல இறங்கும் தக்காளி குழம்பால்!

என்ன சொல்லி என்ன மிஞ்சும்
என்னவள் வீட்டில் அன்பா பஞ்சம்!
என்னவள் வீட்டைப் பிரியும் போது
என்றன் கண்ணில் கண்ணீர் மிஞ்சும்!





செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இலக்கணமும் பண்பாடும்

                                                                                                                                                        


         உலகத்தில் உள்ள பல மொழிகளின் இலக்கணத் தன்மையில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது நம் தமிழ் மொழி.  தமிழர் வாழ்வியலை அகம், புறம் எனப் பிரித்துப் பொருள் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது தமிழ் மொழி ஒன்றே.  பொருள் இலக்கணத்தில் மட்டுமின்றிச் சொல் இலக்கணம் சொல்லும் போதும் பண்பாட்டைப் புலப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர்.

வணிக வழக்கும் நேர்மறை சிந்தனையும்:

    வணிகர்கள் தம்மிடம் பொருள் வாங்க வருபவர் பொருள் ஒன்றைக் கேட்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பொருள் இருப்பில் இல்லாத நிலையில் உடனே வணிகர் ‘இல்லை’ என்று கூறக் கூடாது. இருக்கின்ற பொருளைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.
         “ எப்பொருள் ஆயினும் அல்லது இல்லெனின்
          அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல் “ (தொல்.சொல். 35 )
      அப்படியே இல்லை என்று சொல்லும் நிலை வந்தாலும் பொருளைக் குறிப்பிட்டு ‘இதுவல்லது இல்லை’ என்றே கூற வேண்டும்.
                        “அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்”  (தொல்.சொல்.36  )
அதாவது ஒருவர் கடைக்குச் சென்று துவரம் பருப்பு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  கடையில் அப்பருப்பு இருப்பு இல்லாத நிலையில் கடைக்காரர் “கடலைப் பருப்பு உள்ளது” என்று கூறலாம். அல்லது “கடலைப் பருப்பு அல்லது இல்லை “ என்றும் கூறலாம்.  இப்படி நேர்மறையாகப் பதில் கூறும் நுட்பத்தைத் தொல்காப்பியச் சொல்லதிகாரக் கிளவியாக்கத்தில் நாம் உணரலாம்.

அறிவுரையும் தகுதியும்:

    “ ஊருக்கு உபதேசம் தனக்கு இல்லை “ என்ற பழமொழி உண்டு. காரணம் பலர் இப்படித் தனக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி என்று வாழ்கின்றனர்.  ஆனால் அறிவுரை கூறுபவர் முதலில் அதனைப் பின்பற்றி ஒழுகுபவராக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் தொல்காப்பியச் சொல்லதிகார வினையியல் நூற்பா ஒன்றின் மூலம் அறியலாம்.
     “இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி
     இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
     தன்பா லானும் பிறன்பா லானும்”  ( தொல்.சொல்.243  )
      ஒருவரிடம் ‘இதனைச் செய் இப்படிச் செய்’ என்று  கூறுகின்றோம் என்றால் அதைச் செய்யும் ஆற்றலும்  பின்பற்றும் தன்மையும் நம்மிடம் வேண்டும்.  உளப்பாட்டுத் தன்மை வினை முன்னிலையையும் உணர்த்தும் என்பதை உணர்த்த வந்து தொல்காப்பியர் அறிவுரை கூறுவதற்கும் ஒரு தகுதி உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். 
     எவற்றையும் நாம் இயல்பாகக் கூறிவிடுவோம். ஆனால் செயல் வடிவம் தருவதே பிரதானமானது.
            “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
            சொல்லிய வண்ணம் செயல்”
 என்றார் வள்ளுவரும்.        

  இவ்வாறு  இலக்கண விதிகளின்படி வாழ்வியலையும் அமைத்துக் கொள்வோம்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

குற்றியலுகரம் புள்ளி பெறுமா?

                           குற்றியலுகரம் புள்ளி பெறுமா?
       நம் தமிழ் மொழியில் மெய்யெழுத்துகள் புள்ளி பெறுகின்றன. உயிர் எழுத்துகளில் எகரம் ஒகரம் ஆகிய இரண்டும் புள்ளி பெற்று வழங்கின.
              “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”
              “எகர ஒகரத்து இயற்கையும் அற்றே”
என இவற்றைத் தெளிவு செய்கின்றது தொல்காப்பியம். இப்போது ஒரு ஐயம் எழுகின்றது. என்னவென்றால் 
               “குற்றியலுகரமும் அற்றென மொழிப” 
எனும் நூற்பாவை உணரும் போது குற்றியலுகரமும் முன்பு புள்ளி பெற்றதா? என்பது.
     பொதுவாகத் தமிழில் ஓர் எழுத்து தன் மாத்திரையிலிருந்து பாதி அளவில் குறைந்து ஒலிக்கும் போது புள்ளி பெறுகின்றது.  க – ஒரு மாத்திரை க் – அரை மாத்திரை.  இந்தக் கோட்பாட்டை நாம் தொல்காப்பியத்தின் மூலமாகவே பெறுகின்றோம்.  தொல்காப்பிய நூன்மரபில்                                                                                                         "உட்பெறு புள்ளி உருவா கும்மே”
எனும் நூற்பா மகரக் குறுக்கத்தின் வரிவடிவத்தை உணர்த்துகின்றது.   மகர மெய் புள்ளி பெற்றே இருக்கும். இது தனது அரை மாத்திரையில் இருந்து குறுகிக் கால் மாத்திரையாக ஒலிக்கின்ற போது புள்ளி இட்டு எழுதுக என்பதே இந்த நூற்பாவின் பொருள். இந்த நூற்பா மாட்டேறு நூற்பா.
  “ அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
       இசை இடன் அருகும் தெரியும் காலை”
என்பதே இதற்கு முந்தைய நூற்பா. எனவே, மகரக் குறுக்கம் மேலும் ஒரு புள்ளி பெற்று எழுத வேண்டும் என்ற கருத்தைப் பெறுகின்றோம். 
அதே போல
               “ குற்றியலுகரமும் அற்றென  மொழிப”
எனும் நூற்பாவும் மாட்டேறு நூற்பா. இதற்கு முந்தைய நூற்பாக்கள்                    “மெய்யின் இயற்கை புள்ளியயொடு நிலையல்”
          “எகர ஒகரத்து இயற்கையும் அற்றே”
என்பன. எனவே, குற்றியலுகரமும் புள்ளி பெறுமா எனும் கருத்து தோன்றுகிறது. காரணம் உகரம் தன் மாத்திரையில் இருந்து குறுகி ஒலிக்கிறது. ஆகையால் மகரக் குறுக்கம் போலக் குற்றியலுகரமும் முற்காலத்தில் புள்ளி பெற்றதா எனும் கருத்து உதயமாகிறது. 

     இங்கு இன்னொரு கருத்தும் நோக்கத்தக்கது. மெய் எழுத்து உயிர் எழுத்து ஏற இடம் தருவதைப் போலக் குற்றியலுகரமும் தான் ஊர்ந்து வந்த மெய்யை விட்டு உயிர் ஏற இடம் தருகின்றது. 
கொக்கு +  அழகு = கொக் + அழகு = கொக்கழகு. 

     இப்படி எழுத்தின் தன்மை அடிப்படையில் பார்த்தால் குற்றியலுகரம் புள்ளி பெறும் என்பதையும், புணரியல் அடிப்படையில் பார்த்தால் குற்றியலுகரம் மெய் போல உயிர் ஏற இடம் தரும் என்ற கருத்தையும் பெறுகின்றோம்.  ஆனால், குற்றியலுகரம் புள்ளி இட்டு எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும் தமிழ் மொழியின் வரி வடிவ ஆய்விற்கு இந்த நூற்பாக்கள் இன்றியமையாது விளங்குகின்றன.

வெள்ளி, 3 ஜனவரி, 2014

புதுமை அடைய வேண்டும் பதிப்புத் துறை



              கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி” என்று தமிழ் மொழியின் சீரிளமைத் திறம் வியந்து போற்றுகின்ற தமிழர்கள் நாம். இன்றளவிலும் பழமையின் பண்பு மாறாததாய் விளங்கும் செம்மொழிகள் வரிசையில் தமிழ் விளங்குகிறது. அத்தகைய தமிழின் பழமையான இலக்கண இலக்கிய வளங்களைத் தேடும் முயற்சியில் சான்றோர் பலர் அலைந்தனர். ஓலைச்சுவடியில் இருந்த தமிழ் உ.வே.சா. முதலான சான்றோரால் அச்சாக்கம் பெற்றது.
               உதித்து மறைந்து மீண்டும் எழுவது சூரியனுக்கும் வளர்ந்து தேய்ந்து பின் வளர்வது நிலவிற்கும் இயல்பாக அமைந்தது போல் தமிழின் நிலையும் வரலாற்றில் காணப்படுகிறது.  யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலான நூல்களின் உரைகளில் அந்த நூலுக்கு முன் ஏராளமான இலக்கண நூல்கள் இருந்தமை அறிய முடிகிறது. பாளித்தியம், பிங்கலம், குணகாங்கியம், நிருத்தம் என்பன அவற்றுள் சில. அந்நூல்கள் கிடைத்தனவா என்றால் ???  காரணம், இறையனார் களவியல் உரையில் கூறப்பட்டது போலக் கடற்கோளால் அவை அழிவுற்றிருக்கலாம்.
                பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் உரையாசிரியர் காலம் தொடங்குகிறது. உரையாசிரியர்கள் சில இடங்களில் குறிப்பிட்டுச் செல்கின்ற நூல்களும் காலவெள்ளத்தில் அழிந்து போயின.  மயிலை சீனிவேங்கடசாமி என்பாரின் “ மறைந்து போன தமிழ் நூல்கள் ” எனும் நூலில் இப்படிக் காலத்தால் அழிந்து முழுமையாகக் கிட்டாமல் ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளின்படி திரட்டப்பட்ட  பல நூல்களின் தொகுப்பைக்  காணலாம்.
                கடல்கோளின் தாக்கம், சுவடிகளின் பராமரிப்பின்மை, மூடநம்பிக்கையால் ஆற்றில் விடப்பட்டமை, கறையான்களின் காவு இக்காரணங்களால் பல நூல்கள் மறைந்தன.
                அச்சு எந்திரத்தின் வருகையால் தமிழ் மீண்டும் எழுச்சிக் கண்டது. உ.வே.சா., சி.வை. தாமோதரனார், கணேசையர் முதலானோர் ஓலைச்சுவடிகளை அரிதின் முயன்று அச்சடித்துத் தமிழை அரியாசனத்தமர்த்தினர்.  பழைய நூல்கள் பல எளிய விலைகளில் வெளிவந்தன. ஆனால், இன்று அந்நூல்கள் காணக் கிடைத்தில.  பல மறு பதிப்பின்றிக் கிடக்கின்றன. பல தமிழ் மூதறிஞர்களிடம் அந்நூல்கள் வெளி வராது இருக்கின்றன.  பழமையான நூலகங்களில் கூட அவை இன்று காட்சிப் பொருளாகவே உள்ள நிலையைப் பார்க்கும் போது அந்தோ!!!
                                   சில மாதங்களுக்கு முன் மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்குச் சென்றிருந்தேன்.அங்குள்ள செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்ற போது அந்த நூலகத்தில் தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தி, தொன்னூல் விளக்கம் முதலான நூல்களை வாங்கிச் சென்று படித்துள்ளேன்.  ஆனால், தற்சமயம் அவையாவும் அரியவகை நூல்கள் பட்டியலில் உள்ளன. எனவே, அவற்றை ஒளிப்படி எடுக்கக்கூட அனுமதி இல்லை. 
              சங்கம்வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் கம்பராமாயணமும் திருக்குறளும் கிடைக்காது வருந்தி, பின்பு பொன்.பாண்டித்துரையார் தனது இல்லத்தையே தமிழ்ச் சங்கமாக மாற்றினார்.  இன்று அதே தமிழ்ச் சங்கத்தில் அரிய நூல்கள் பல சிதிலமடைந்து கிடக்கின்றன.  காரணம் பல நூல்கள் மறு பதிப்புப் பெறாமையே ஆகும்.
             உரையாசிரியர்களின் உரையால் அழிந்து போன பல நூல்களை அறிந்து கொண்டோம்.  தற்போது நூலின் பின்புறம் காணப்படும் துணை நூல்களின் பட்டியல் மூலமாக மட்டுமே அச்சேறிய பழமையான  நூல்களின் பெயர்கள் அறிய முடிகிறது.  பழந்தமிழ் இலக்கண ஆய்விற்கு உரிய நூல்கள் கிடைக்காமையால் தான் என்னவோ, இலக்கணத்தில் ஆய்வு வளர்ச்சி குன்றியுள்ளது.
புத்தாக்க முயற்சி:
              சிதிலம் அடைந்த சுவடிகளை மீளவும் சுவடியாக்கம் செய்ததும்,  சுவடிகளை நூலாகப் பதிப்பித்ததும் தமிழின் வளர்ச்சியில் முக்கிய திருப்பம்.   நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்ப்பதுடன், இங்குள்ள பழமையான நூல்கள் மின்னூல் வடிவம் பெறவேண்டும்.
             யாழ்ப்பாணத்தின் “நூலகம்” எனும் இணையம் ஏராளமான தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் எண்ணிமப்படுத்தி வரும் முயற்சி பாராட்டுதற்குரியது.  அதே போல மதுரைத்திட்டம் எனும் இணையமும் நூல்களை மின்னூல் வடிவில் கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் அரிய வகை நூல்களை மின்னூல் வடிவில் கொண்டு வரத்  தமிழறிஞர்களிடம் நூல்களைக் கேட்டு அழைப்பு விடுத்துள்ளது.
             தமிழில் உள்ள ஐந்திணையுடன்,  இணையம் எனும் ஆறாம் திணை இணைந்துள்ளது.  கணினியில் நுழைந்தது காலாவதி ஆவதில்லை. எனவே, சுவடி – நூல்களில் இருந்த நம் தமிழ் மின்னூல்களாக உலா வர வேண்டும்.  அரியவகை நூல்கள் விரைவில் மின்னூல் வடிவம் பெற வேண்டும். தமிழ் இலக்கணத்தில் ஆய்வுப் பரப்பு வானமென விரிவடைய வேண்டும். வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்ற தமிழ் வானில் உலாவி வலை வாசலில் நம்மை வரவேற்க வேண்டும்.
            அரிய நூல்களுக்கு அழிவில்லா நிலையை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும். மீண்டும் கடற்கோள், கறையான், அந்துப் பூச்சி இவற்றின் பிடியில் தமிழ் விழ நாம் சற்றும் அனுமதிக்கக் கூடாது விரைவோம். பதிப்பியல் துறை மின்னூல் துறை என்று புதியதோர் பரிமாணம் பெற முயல்வோம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

              

புதன், 1 ஜனவரி, 2014

பூத்தது 2014-ஆம் ஆண்டு

"பழையன கழிதலும் புதியன  புகுதலும்
வழுவல கால வகையி னானே”   ( நன்னூல்)


         பழமையின் வழியில் புதுமையை வரவேற்போம். 
   வலைவாசலுக்கு வரும் உள்ளங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு                             நல்வாழ்த்துகள்.  
>