திங்கள், 19 மே, 2014

குற்றியலுகரம் - எழுத்தியல் தன்மை

     தமிழில் உள்ள பத்துச் சார்பெழுத்துகளில் ( நன்னூலார் கூற்றுப்படி ) குறுகி ஒலிக்கக் கூடிய எழுத்துகள் ஆறு.  அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்ககுறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன.  இவற்றில் குற்றியலுகரத்தின் எழுத்தியல், சொல்லியல், யாப்பியல் தன்மைகளைப் பற்றித் தொடர்ந்து நம் வலைப் பக்கத்தில் காண்போம்.
குற்றியலுகரம்:
     குற்றியலிகரம் தானே முதலில் வருகிறது அதைப் பற்றிச் சொல்லாமல் குற்றியலுகரத்தைப் பேசுகிறானே என்று கருதாதீர்கள்.  குற்றியலிகரம் கூட குற்றியலுகரத்தின் திரிபாகவே வருகிறது. எனவே, முதற்கண் குற்றியலுகரத்தைப் பற்றி ஆராய முற்பட்டோம்.
     குறுகி ஒலிக்கும் இயல்புடைய உகரம் குற்றியலுகரம். அதனால் குற்றியலுகரம் எனப்பட்டது.  ஒரு மாத்திரை அளவுடைய உகரம் தன் மாத்திரை அளவில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கிறது.
குற்றியலுகரத்திற்கான களம்:
       குற்றியலுகரத்திற்கான முக்கியமான களம், உகரம் வல்லின மெய்களின் மீது ஊர்ந்து வருவதாகும்.  அதாவது,  க் + உ = கு , ச் + உ =சு, ட் +உ = டு, த் +உ = து , ப் +உ = பு , ற் +உ =று என வருவதாகும்.
      i. பாகு, காசு, ஆடு, காது, பாபு, சாறு
      ii. கொக்கு, அச்சு, பாட்டு, கொத்து, ஆப்பு, காற்று
      iii. சங்கு, மஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று
      iv வெய்து, சார்பு, உல்கு
      v. படகு, அரசு, கரடு, கருது, அளறு
      vi. எக்கு, கக்சு, சுக்று
       மேற்கண்ட சான்றுகளின் கடைசி எழுத்துகள் கு, சு, டு, து, பு, று – ஆக இருக்கிறதல்லவா? இதைப் பார்த்தவுடனே அச்சொல் குற்றியலுகரம் என்பதை அறியலாம்.  இருப்பினும்  தனிக் குறிலை அடுத்து வரும் கு, சு, டு, து, பு, று குற்றியலுகரமன்று. அதாவது,  பகு, பசு, சுடு, அது, தபு, வறு இவை குற்றியலுகரச் சொற்களல்ல. முற்றியலுகரங்கள். மாத்திரை அளவு குறையாமல் ஒலிப்பது முற்றியலுகரம்.
குற்றியலுகரத்தின் எழுத்தியல் தன்மை : 
     குற்றியலுகரம் சார்பெழுத்து. எழுத்தியல் தன்மையில் பார்க்கும் போது இதற்கு அரை மாத்திரை.  இவ்வெழுத்து இயங்குதற்கான களம் வல்லின எழுத்துகளை ஊர்ந்து வருதல் என்பனவற்றை முன்னரே கண்டோம்.  குற்றியலுகரத்திற்கெனத் தனி வரி வடிவம் இருந்துள்ளது என்பதனை இலக்கண நூல்களின் வழியாக நாம் தெளிகிறோம்.  இந்த வலைப் பூவில் ஏற்கனவே குற்றியலுகரம் புள்ளி பெறுமா?  என்பது குறித்து ஆய்ந்தோம்.  அதில் தொல்காப்பிய நூற்பாக்களால் அறியலாகும் வரி வடிவக் கொட்பாடோல் அதாவது மகரக் குறுக்கம் இரு புள்ளிகள் பெற்ற காரணம் குறித்து அலசினோம். 
          ”மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்”,
           “குற்றியலுகரமும் அற்றுஎன மொழிப”
என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் குற்றியலுகரம் புள்ளி  பெறும் என்ப்பதை உணர்த்துகின்றன. 
         “குற்றியலிகரமும் குற்றியலுகரமும் புள்ளி பெறும். என்னை?
       “குற்றிய லிகரமும் குற்றிய லுகரமும்
        மற்றவை தாமே புள்ளி பெறுமே”
என்பது சங்க யாப்பு ஆகலின்” என்று யாப்பருங்கல விருத்தி உரையில் காணப்படுகிறது.  எனவே, பழங்காலத்தே குற்றியலுகர எழுத்து புள்ளி பெற்றது என்பது துணிவு.
      ஆக,  குற்றியலுகரம் எழுத்தியல் தன்மையில் உள்ள  கூறுகளான அதன் ஒலி அளவு, நிலைக்களம், வரிவடிவம் முதலானவற்றைக் கண்டோம். இனி குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மைகளை அடுத்தப் பதிவில் அறிவோம்.



6 கருத்துகள்:

  1. அருமையான விளக்கம்...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கோபி!. வணக்கம். உங்கள் எழுத்தில் எனது குரு தி.வே.கோ. அவர்களையும், இன்றைய நம் முன்னோடி முனைவர் நா.அ.மு. அவர்களையும் பார்க்கிறேன் இலக்கண விளக்கமும் நன்று. ஆனால் எனக்கோர் ஐயம் வெகுநாளாய்... உயிர்மெய் ஆய்தம் என்று முதலிலேயே சார்பெழுத்துகளைப் பட்டியல் இட்ட இலக்கண வல்லார், பின்னர் ஆய்தக் குறுக்கம் என மீண்டும் பட்டியலிடுவது சரிதானா? (ஒரு வினாவிற்கு இரண்டுவிடைகூட இருக்கலாம். ஓர் உறையில் இரண்டு வாள்கள்.. பொன்மொழி சரிதானா தெரியவில்லை கோபி. நீங்கள் தான் விளக்க வேண்டும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வணக்கம். தமிழில் சார்பெழுத்துகளின் வகை தொகைகளைக் கூறுவதில் இலக்கணிகள் வேறுபடுகின்றனர். தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்துகள் கு.உ., கு.இ., ஆய்தம் என்ற மூன்று. ஆனால் காலப்போக்கில் மீட்டுருவாக்கம் பெற்ற இலக்கண நூல்கள் பத்து என்றும் அதன் தொகை ஓர் எண்ணிக்கை என்றும் கூறுகின்றன. காரணம் உரை ஆசிரியர்களின் கருத்துகள் சில இலக்கணமாகவே வரையறுக்கப் பட்டுள்ளன. சில விடுதல்களும் உள்ளன.சான்றாக நச்சினார்க்கினியர் கூறியுள்ள இயற்கை அளபெடை, செயற்கை அளபெடை ஆகியன இலக்கணமாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் ஒன்று ஐயா. தொல்காப்பிய நூல்மரபின் ஒழிபு தான் மொழி மரபு என்று கூறும் முதல் சூத்திர விருத்தி தொல்காப்பியர் பத்துச் சார்பெழுத்துகளையும் முன்மொழிந்துள்ளார் என்று கூறுகிறது.இவ்வளவு ஏன் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் நெடில் தொடர்க் குற்றியலுகரம் பற்றி நாம் விவாதித்த கருத்தும் கூட யாப்பருங்கலத்தில் தனியே தரப்பட்டுள்ளது. அதனைக் குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மை எனும் தனிப் பதிவில் தருகிறேன் ஐயா. நன்றி.

      நீக்கு
  3. சிறந்த இலக்கண விளக்கம்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

>