சனி, 9 மார்ச், 2024

நாலு நாலு....

 4 4 4 4 4 4 4 .....அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....?????


01. ‘நாலு’ பேரு ‘நாலு’ விதமா பேசுவாங்க.


02. ‘நாலு’ பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 


03. ‘நாலு’ காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....????


04. ‘நாலு’ ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.


05. அவரு ‘நாலு’ம் தெரிஞ்சவரு.,  ‘நாலு’ம் புரிஞ்சவரு. 


06. ‘நாலு’ வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.


ஏன் இந்த ‘நாலு’ மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்....


சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்., பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு., நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என  ‘நான்கு’ வரும்.

நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது

அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்....


“பாலும்., தெளிதேனும்., பாகும்., பருப்பும் இவை ‘நாலு’ம் கலந்து உனக்கு நான் தருவேன்”

ஔவையாரின் ‘நால்’வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.


நாலும்., இரண்டும் சொல்லுக்குறுதி... இதில் ‘நாலு’ என்பது.. நாலடியார்....


“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது

‘வேதம் நான்கினும்’ மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே”


‘நான்மறை’.... என்பது வேதங்கள் ‘நான்கு’.


சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் ‘நான்கு’ பேர்.

அப்பர்., சம்பந்தர்., சுந்தரர்., மாணிக்க வாசகர். இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.


மஹாவிஷ்ணுவின் பத்து (ஒன்பதில்) அவதாரங்களில் ‘நான்கு’ அவதாரங்களுக்கு மட்டுமே மனிதனாக (கர்பவாசத்தில்) எடுத்ததாகும்.


வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர்., அவற்றை  ‘நாலு’ ரிஷிக்களிடம்  பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்கள்

ருக் ═ பைலர்., யஜூர் ═ ஜைமினி., சாம ═ வைசம்பாயன., அதர்வண ═ சுமந்து.


தசரதனுக்கு ‘நான்கு’ பிள்ளைகள்.


‘நான்கு’ புருஷார்த்தங்கள்....

அவை தர்ம., அர்த்த., காம., மோட்சம்.


மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை

கடக்க வேண்டிய நிலைகளும் ‘நான்கு’

அவை ~ பிரம்மசர்யம்., கிருஹஸ்தாச்ரமம்.,  வானப்ரஸ்தம்., சந்யாசம்.


பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் ‘நான்கு’ பேர். சநகர்., சநாதனர்., சநந்தனர்., சனத் குமாரர்.


பிரம்மாவுக்கு ‘நான்கு’ தலைகள். சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு உண்டு.


ஆதிசங்கரர் பாரத நாட்டின் ‘நான்கு’ திசைகளிலும்/மூலைகளிலும் ‘நான்கு’ மடங்கள் நிறுவி., ‘நான்கு’ சீடர்களை நியமித்தார்.


அக்னிக்கு கம்பீரா., யமலா., மஹதி., பஞ்சமி என ‘நான்கு’ வடிவங்கள்.


திசைகள் ‘நான்கு.’


ஹரித்வார்., அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்)., நாசிக்., உஜ்ஜையினி என ‘நான்கு’ இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.


ரத., கஜ., துரக., பதாதி (தேர்., யானை., குதிரை., காலாட் படைகள்.... என ‘நால்’ வகைப் படைகள்.


அஹம் பிரம்மாஸ்மி., தத்வம் அஸி., பிரக்ஞானம் பிரம்ம., அயமாத்ம ப்ரம்ம.... உபநிஷத்தில் கூறப்படும் ‘நாலு’ மஹா வாக்யங்கள்.


வெல்ல முடியாத ‘நாலு’

“நித்ரா., ஸ்வப்ன., ஸ்த்ரீ., காமஅக்னி இந்தன கரா பாண”


கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது.,

பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது.,

தீயை விறகு நிறைவு செய்யாது.,

குடிகாரனை குடி நிறைவு செய்யாது.


“ந ஸ்வப்னேன ஜயேத் நித்ராம் ந காமேன ஜயேத்ஸ்திரியஹ

ந இந்தனேன ஜயேதக்னீம் ந பானேன கராம் ஜயேத்.” விதுர நீதி


இதையே ஹிதோபதேசம்

“அக்னியை விறகு அணைக்காது.,

சமுத்திரத்தை ஆறுகள் நிறைக்காது.,

யமனை எல்லா உயிர்களும் சேர்ந்தாலும் வெல்ல முடியாது.,

அழகிகளை ஆண்கள் த்ருப்தி செய்ய முடியாது” என சொல்கிறது


யுகங்களும்.... கிரதம்., திரேதம்., துவாபரம்., கலி என ‘நான்கு’


அச்சம்., மடம்., நாணம்., பயிர்ப்பு... பெண்டிரின் ‘நால்’ வகை குணங்கள்


சிவராத்ரியில் ‘நாலு’ கால பூஜை நடக்கும்.


‘நான்கு’ வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.


‘நான்கு’ என்ற எண் சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்., 


‘நாலு’ பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்....


“செத்தாலும்., 

நல்லதுக்கும்.,

கெட்டதுக்கும்., ‘நான்கு’ பேர் வேண்டும்” 

என்ற கருத்தாக்கத்தையும் கொண்டுள்ளது.


ஒரு ‘நாலு’ பேருக்குக்கு தெரியட்டும் என்று., ‘நாலு’ பத்தி எழுதினதை., ஒரு ‘நாலு’ பேராவது படிச்சா சரி....



செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு உருவாக்கம்

             பள்ளிக்கல்வித் துறை திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் தமிழ் வாசித்தல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை முன்னேற்றும் வகையில் தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு ஒன்றை உருவாக்கிட, குழு அமைக்கப்பட்டது. அதில் நான் உள்பட பத்துத் தமிழாசிரியர்கள் இடம்பெற்றுள்ளோம். 35 நாள்கள் உழைப்பின் விளைவில் உருவானது இந்தத் தமிழ்ப் பயிற்சிக் கையேடு. இது வெறும் அச்சு நூலாக இல்லாமல், இடைஇடையே கொடுக்கப்பட்டுள்ள உரலியின் மூலம் எழுத்துகளின் ஒலிப்பு முறையைக் கற்றுத்தரும் காணொளிகள் இணையம் வழியாக உங்கள் வாசலுக்கு வந்து வண்டமிழை வளப்படுத்தும்.  கையேட்டின் இறுதியில் தமிழ் இணைய வளங்களுக்கான உரலிகள் தரப்பட்டுள்ளன.  அயலகத் தமிழர், அயல் நாட்டில் உள்ளோர் தமிழைக் கற்பதற்கு இந்நூல் ஓர் இன்னூல். 



கீழே தரப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி “தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேட்டினை” தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் தமிழ் நெஞ்சங்களே!

தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு

ஞாயிறு, 4 ஜூன், 2017

பாடநூல், கையேடுகளின் முன்னோடி




பாடநூல், கையேடுகளின் முன்னோடி


                                  ஈழத்து இலக்கணக்கொடையில்  ஆறுமுகநாவலரின் பங்களிப்பு முதன்மையானது.  இலக்கண உரையாசிரியர், உரைநடை வடிவ இலக்கணம், வினாவிடை வடிவ இலக்கண நூலின் ஆசிரியர், பல அரிய  நூல்களின் பதிப்பாசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் ஆறுமுகநாவலர். “இலக்கணச்சுருக்கம்” என்னும் இவரது படைப்பு எழுத்து, சொல் இரண்டிற்கும் இலக்கணம் கூறுகிறது.  இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.  முதலிரு பிரிவுகளில் மரபிலக்கண நூல்களில் கூறப்படுகின்ற செய்திகள் உள்ளன.  மூன்றாவது பிரிவு தொடர்மொழியதிகாரம் தற்காலத் தொடரியல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது.

                                 பவணந்தியடிகளின் நன்னூலுக்கு மரபு அடிப்படையிலான காண்டிகையுரை படைத்த ஆறுமுகநாவலர் இலக்கணச்சுருக்கம், இலக்கண வினாவிடை ஆகிய நூல்களைச்  சுருங்கிய வடிவத்தில் கொணர்ந்தமைக்குக் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றமே காரணம்.  ஆங்கிலேயர் ஆட்சிமுறையால் கல்விப் பரவலாக்கம் உண்டானது.  தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. மேலும், ஆங்கிலேயர் தமிழ் மொழியறிவை எளிதில் பெறும் வகையில் எளிய நடை இலக்கண நூலை எழுதுவோரை ஊக்குவித்தனர்.  இக்கருத்து மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் “கிறித்துவமும் தமிழும்” என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.  இதனால், ஆறுமுகநாவலர் உரைநடை வசன முறையில் “ இலக்கணச்சுருக்கம்” என்ற நூலைப் படைத்தார்.  இந்நூலில் 406 வசனங்கள் இலக்கண விதிகளை எளிமையான நடையில் உணர்த்துகின்றன. மேலும் மாணவர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொள்ளப் “பரீட்சை வினாக்கள்” என்னும் பகுதி இடம்பெறுகிறது. இவ்வமைப்பு தற்போதைய பாடநூல் அமைப்பைக் கொண்டுள்ளது.

                                       நாவலரின் “இலக்கண வினாவிடை” என்னும் நூல் எழுத்து, சொல் இரண்டிற்குமான இலக்கண நூல். இது கேள்வி பதில் என்னும் போக்கில் அமைகிறது.  இலக்கணப் படைப்புலகில் கையேடு வடிவத்தில் எழுந்த முதல் நூல் இதுவே எனலாம். இந்நூல் 175 வினா விடைகளைக் கொண்டது.


                இலக்கணச் சுருக்கம் பாட நூல் (TEXT BOOK) வடிவத்திலும் இலக்கண வினாவிடை கையேடு (GUIDE) வடிவத்திலும் அமையுமாறு செய்து பாடநூல், கையேடு வடிவங்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் ஆறுமுகநாவலர்.  


திங்கள், 12 செப்டம்பர், 2016

சங்க இலக்கியங்கள் சான்று

சங்க இலக்கியங்கள் சான்று

மன்னுயிர் நேசிக்கும் மாட்சிமை தன்னுடைய
இன்பம் வறியவர்க்கு ஈவதெனக் - குன்றாத
மங்காத வாழ்வு மறத்தமிழன் வாழ்ந்தமைக்குச்
சங்க இலக்கியங்கள் சான்று

சனி, 22 நவம்பர், 2014

கனகி புராணம் எனும் கனகி சயமரம் ( கனகி சுயம்வரம் )



     யாழ்ப்பாண மின் நூலகத்தில் கனகி புராணம் எனும் நூலைக் கண்டேன். என்னடா ஒருவேளை நம் சிலப்பதிகாரப் புரட்சி நாயகி கண்ணகியைப் பற்றிய நூலாக இருக்குமோ என உடனே தரவிறக்கம் செய்தேன்.  பின்பு அந்த நூலைப் படிக்க நேர்ந்தேன். முழுக்க முழுக்க சிருங்காரச் சுவை கொண்டதாக அந்த நூல் விளங்கியது. அதனைப் பற்றியே இந்தப் பகிர்வு.

     கனகி என்பவள் இலங்கையில் உள்ள கவின்மிகு வண்ணார்பண்ணை எனும் சிற்றூரில் பிறந்தவள்.  இவள் ஒரு கணிகை மாது. இந்தப் பொது மகளோடு பல தரப்பினரும் தொடர்புடன் இருந்தனர். நூல் செய்த புலவர் நட்டுவச் சுப்பையனார் உளப்பட.  இந்தப் பரத்தைப் பெண்ணுடன் தொடர்பு கொண்டவர்க்கு மேக வேட்டை எனும் நோய் தாக்குகிறது. நோயின் கொடுமை தாங்க முடியாமல் தாம் பட்ட பெரும்பாட்டை மற்றையோர் தவிர்த்தல் வேண்டி உலகுக்கு நல்லரிவுருத்தும் வேட்கை உந்த இந்த நூலை இயற்றினார் புலவர் நட்டுவச் சுப்பையனார்.  நூலில் இன்னிசை, சொற்சுவை, நகைச்சுவை, அழுகைச் சுவை உவப்பான உவமைகள் போன்ற இலக்கியப் பண்புகள் உள்ளன. நானூறு விருத்தப் பாக்களால் ஆன நூல் எனும் குறிப்பு இருந்தாலும் சொற்ப பாடல்களே இன்று கிடைக்கின்றன.  இந்த நூலை 1937 ஆம் ஆண்டு திரு. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமக்குத் தெரிந்த கவிகளைக் கொண்டு பதிப்பித்தார்.

     இதற்கு அடுத்து இந்த நூல் பற்றி இலங்கை வானொலியில் பரவலாகப் பேசப்பட்டுள்ளன. மேலும் புதிய பதிப்பு தேவை என்ற அவசியம் ஏற்பட சில காரணங்கள் கூறப்பட்டன.  முதல் பதிப்பிலுள்ள சுயம்வரம் படலத்தில் இல்லாத ஒன்பது செய்யுள்கள் புதிதாகக் கிடைத்திருப்பது; மற்றது முதல் பதிப்பிலுள்ள நாட்டுப் பாடலைச் செய்யுட்கள் பதினாறும் சுப்பையனார் இயற்றியது அன்று என்பது தெளிவாகத் தெரிந்தமை. காரணம் இலங்கை வானொலியில் 1946 ஆம் ஆண்டில் ஒருசமயம் இந்த நூலில் உள்ள “ புல்லை மேய்ந்து தங்கு நின்று” எனும் பாடல் பற்றி பேசப்பட்டது. அந்த நிகழ்வைக் கேட்ட சித்சபேசன் எனும் ஒருவர் வானொலிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் “ தாங்கள் கனகி புராணம் பற்றி பேசிய போது சொன்ன புல்லை மேய்ந்து எனும் பாடல் என்னுடையதே. பழைய ஏட்டுச் சுவடியில் நான் சில கவிகளை எழுதி இணைத்தேன்.  முதல் பதிப்பில் அது வந்துவிட்டது. நான் எழுதிய கவிகள் இப்படியாவது இடம் பெறட்டுமே என எண்ணி இந்தத் தவற்றைச் செய்தேன். என்னை மன்னியுங்கள். உங்களையும் நம் தேசத்தையும் ஏமாற்றிய குற்றத்திற்கு ஆளாகிவிட்டேன்.” என உருக்கமாக எழுதியிருந்தார். அதனால் இந்தக் கனகி புராணம் திருந்திய பதிப்பாக வெளி வந்தது. 1961ஆம் ஆண்டில் இதன் திருந்திய பதிப்பை வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் என்பார் வெளியிட்டார்.  இந்தப் பதிப்பில் பிள்ளையார் காப்பு, நாட்டுப் படலம், சுயம்வரப் படலம், வெட்டைகாண் படலம் என்ற பிரிவுகளில் மொத்தம் இருபத்தைந்து விருத்தங்கள் உள்ளன.
           நாட்டுப் படலத்தில் இரண்டு விருத்தங்கள் உள்ளன. முதல் பாடல் கனகியின் தோற்றச் சிறப்பைக் கூறுகிறது. இரண்டாம் பாடல் இந்த வண்ணார் பண்ணைச் சிவன் கோவில் நடன மாது கனகியிடம் இலங்கையில்  அரசாண்ட மாராச கேசரி முதல் மடாதிபதிகள் வரை அனைவரும் பொது உறவு வைத்திருந்தமை வெளிப்படுகிறது. 
           சுயம்வரப் படலத்தில் பத்தொன்பது விருத்தங்கள் உள்ளன.  பாடல்கள் யாவும் தோழி கூற்றாக உள்ளன. கனகியிடம் உறவு கொள்ள வந்திருக்கும் ஒவ்வொரு நபர்களையும் தோழி அறிமுகம் செய்யும் தொனியில் பாடல்கள் நகைச்சுவை, சிருங்காரச் சுவை தோன்ற அமைந்துள்ளன. நாட்டுக் கோட்டைச் செட்டி நல்லாண்டப்பன், மல்லாக வீரர் நவாலியூரன், சின்னையன், களஞ்சியக் குருக்கள், சிவப்பிரகாசன்,  நீயூற்றன், ஊராத்துறை அருணாச்சல உடையார், வட்டுக்கோட்டை சுப்பு, கோப்பாய் முத்துக்குமார், கறுவற்றம்பி, நன்னி, செல்வநாயகம், ஆனைக்கோட்டை ஆறுமுகம், பெரியதம்பி வைத்தியன், மாலை கட்டும் தொழில் செய்யும் பண்டாரம், நொண்டிக்கையன், பெரிய பணக்காரன் திருமலைச் சின்னையன் ஆகியோர் கனகிக்காக வரிசையில் நிற்கின்ற நிலையைப் பாடல் எடுத்தியம்பும் விதம் அழகாக உள்ளது.

           வெட்டை காண் படலத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. இறுதி பாடல் வெண்பா யாப்பில் உள்ளது.
   “மேகங்கள் யாவுமுயர் விண்நீங்கி  வேசையர்தம்
   தேகங்களில்  வாசம் செய்கையான்  -  மாகமிசை
   ஆசைக்கும்  கார்காணோம்  அவ்வேசையார்  கொடுப்பார்
   காசைக் கொடுப்பார்க்குக்  காண்”

இந்த வெண்பாவை  திரு. கா. சு. பிள்ளை அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டிலே வேதநாயகம் பிள்ளை பாடல்களில் ஒன்றாய் வந்துள்ளது எனும் ஒரு குறிப்பும் காணப்படுகிறது. எனவே இந்த நூலில் இடைச் செருகல்கள் நிறைய உள்ளன என்பது ஒருவாறு புலனாகிறது

       இதோ சில பாடல்கள்:

“ தாமரை முகையும் கோங்கின தரும்பும் தந்தியின் கொம்புடன் சிமிழும்
 காமரு சூதின் கருவியும் குடமும் காமனார் மகுடமும் கடிந்தே
 சேமமாய் வென்று கூவிளம் பழத்தைச் சேர்ந்திடும் தனமுடைக் கனகே
 நாமம் இங்கிவர்க்குக் களஞ்சியக் குருக்கள் நங்கை நீ காணுதி என்றாள்”
                                (சுயம்வரப் படலம் )

வெட்டை என்னும் வியாதி தலைப்பட்டுத்
தட்டுக் கெட்டுத் தனித்தனி ஆடவர்
பொட்டுக் கட்டிய பூவையினால் என்று
முட்டுப் பட்டனர் மூத்திரம் பெய்யவே” ( வெட்டைகாண் படலம்)


திங்கள், 6 அக்டோபர், 2014

மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் - பகுதி - ௩




சார்பெழுத்துகளின் வகைதொகை முறையும் களங்களும்

     சார்பெழுத்துகளின் எண்ணிக்கை மூன்று, பத்து, ஒன்பது, இரண்டு எனக் கூறுவது ஒருபுறம் நிற்க, அவற்றைத் தொகுத்து மொழியிடை, புணர்மொழி இடையிலான களங்களின் அடிப்படையில் கூறும் போக்கை நன்னூல் தொடங்கி அறிகிறோம்.

          “உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம்
           எட்டு, உயிரளபு எழுமூன்று, ஒற்றளபெடை
           ஆறேழ் அகும் இம்முப் பானேழ்
           உகரம் ஆறாறு, ஐகான் மூன்றே,
           ஒளகான் ஒன்றே, மகான் மூன்றே
           ஆய்தம் இரண்டோடு சார்பெழுத்து உறுவிரி
           ஒன்றுஒழி முந்நூற்று எழுபான் என்ப”   (நன்னூல் )

எனும் நூற்பா 369 சார்பெழுத்து விரியைக் கூறுகிறது.

     உயிர்மெய் – 216  (  12 உயிர்  x  18 மெய்  = 216 )
      ஆய்தம்   - 8    ( வல்லின வகையால் ஆறு+புணர்ச்சி+தோன்றல் ஆய்தம்)
     உயிரளபெடை-21 (7உயிர் நெடில்   x  3இடங்கள் )
     ஒற்றளபெடை- 42 (ஙஞணநமனவயலள ஆய்தம் 11 x
        குறில்இணை,குறில் கீழ், இடை, கடை 4  இடங்கள்.
 இவற்றில்  ஆய்தம் குறில் இணை, குறில் கீழ் வராது)
குற்றியலுகரம் - 36   (தனி நெடில் 7, ஆய்தம் 1, ஒள நீங்கிய உயிர் 11,           வலி 6, மெலி  6, வகரம் நீங்கிய இடையினம் 5)
குற்றியலிகரம் - 37  ( மேலதுடன்  கேண்மியா எனும் சொல் )
ஐகாரக்குறுக்கம் – 3 ( மொழி முதல், இடை, கடை )
ஒளகாரக்குறுக்கம் – 1 (மொழி முதலில் மட்டும்)
மகரக்குறுக்கம் – 3 ( மருண்ம், போன்ம், ம் முன் வ )
ஆய்தக்குறுக்கம் - 2 ( ல ள ஈற்று இயைபு ஆய்தம் )
     இலக்கண விளக்கம் சார்பெழுத்தின் விரி 240 என்று கூறுகிறது.

           “உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு, உயிரளபு ஏழ்
           ஒற்றளபு பதினொன்று  ஒன்றொன்று ஏனைய
           ஆயிரு நூற்றுஎண் ஐந்தும் அதன் விரியே” (இலக்கண விளக்கம் )
என்பது நூற்பா.

     நன்னூலார் எழுத்தின் எண்ணிக்கையையும் அவை சொல்லினுள் இடம்பெறும் நிலைக்களனையும் எண்ணிக் கூற, இலக்கண விளக்கம் வெறும் எழுத்து எண்ணிக்கையை மட்டுமே விரித்துக் கூறுகிறது.  ஆனால், சுவாமிநாதமோ,

           “உயிர்மெய் நூற்றுஎண் ணிரட்டு உயிரளபுஏழ் ஒற்றின்
           உகுமளவு பதினொன்று ஒரு   இருநூற்று நாற்பான் என்று
           சார்பெழுத்து இருநூற்று எழுபத்தொன்று எண் ஆகும்”

        அதாவது முதல் எழுத்துகள் முப்பத்து ஒன்று.  சார்பெழுத்துகள் இருநூற்று நாற்பது. ஆக இருநூற்று எழுபத்தொன்று.  இந்த நூற்பாவில் கவனிக்க வேண்டியது முதல் எழுத்தையும் கூட்டிச் சொல்லியது தான்.  தற்போது பள்ளிகளில் தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை இருநூற்று நாற்பத்தேழு என்று கூறுவதில் உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகியன இடம்பெறுகின்றன. இந்த எண்ணிக்கை மற்றும் பகுப்புமுறை முத்துவீரியத்தைப் பின்பற்றுவதாக உள்ளது.

அளபெடையின் விரிவு

      மேலும் அளபெடையின் வகைப்பாட்டில் வேற்றுமை காணப்படுகிறது. தொல்காப்பியர் பொதுவாகக் குறிப்பிடும் உயிர் அளபெடையை நன்னூலின் உரையாசிரியர்கள் செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்றாகப் பிரிக்கின்றனர்.  நச்சினர்க்கினியரோ  இயற்கை அளபெடை ( குரீஇ ), செயற்கை அளபெடை ( ஓஒதல் ) என இரு வகையாகக் கூறுவார்.  முத்து வீரியம்,

           “இயற்கை, செயற்கை, இன்னிசை, சொல்லிசை,
           நெடில்,குறில், ஒற்றளபு, எழுத்துப் பேறுஅளபு
           எண்வகைப் படும் என்மனார் புலவர்”(முத்துவீரியம் )

என அளபெடையை எட்டு வகைகளாகப் பாகுபாடு செய்திருப்பது தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் காணப்படாததொன்றாகும்.

குற்றுகர இகரங்களின் விரிவு

           “ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
           ஆய்தத் தொடர்மொழி வன்தொடர்  மென்தொடர்
           ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்” ( தொல். )
           “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்
           ஒற்றிய நகர மிசை நகரமொடு முதலும்”  (தொல்.  )

எனக் குற்றியலுகரத்தின் விரி ஏழு எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
அதாவது,
           தனிமொழிக் குற்றியலுகரம்              -   1
           தொடர்மொழிக் குற்றியலுகரம்         –   5
           மொழிமுதல் குற்றியலுகரம்(நுந்தை)- 1
                வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியன தொல்காப்பியர் கூறும் மொழி முதல் குற்றியலுகரத்தைத் தவிர மேற்சுட்டிய ஆறு விரிகளை எடுத்துரைக்கின்றன. யாப்பருங்கலத்தில்,

           “நெடிலே குறில்இணை குறில்நெடில் என்றிவை
           ஒற்றோடு வருதலோடு குற்றொற்று இறுதிஎன்று
           ஏழ் குற்றுகரக்  கிடக்கென மொழிப” ( யாப்பருங்கலம் )
என வருவதைக்கொண்டு பார்க்கும் பொது குற்றியலுகரத்தின் விரிவு ஏழு ஆகிறது.

     அடுத்து, குற்றியலுகரத்தின் முன் யகரம் முதலான சொற்கள் வரும் போது உகரம் கெட்டு இகரம் தோன்றி நலியும். இது குற்றியலிகரம். இந்தக் குற்றியலிகரம், குற்றியலுகரத்தின் அடியாக வருவதால் அதன் விரியை அப்படியே பெறுகிறது.  மேலும், ‘கேண்மியா’ எனும் சொல்லில் வரும்
 இகர ஒலி குறுகுவதை எல்லா இலக்கண நூல்களும் கூறுகின்றன.

நால்வகைக் குறுக்கங்களின் விரிநிலை

     ஐகாரக் குறுக்கம் மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று களங்களில் இடம்பெறுகிறது. ஒளகாரம் மொழி முதலில் மட்டுமே நிற்கிறது. நன்னூலார்,
           “தற்சுட்டு அளபொழி ஐம் மூவழியும்
           நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்” ( நன்னூல் )
என்பார்.  நேமிநாதம்,
           “மும்மை இடத்து ஐ ஒளவும் குன்றும்” (நேமிநாதம் )
என்கிறது. சுவாமிநாதம்,
           “ஐ ஒள முதல் ஈறு ஒன்றரை இடை ஒன்றாம்”(சுவாமிநாதம்)
என்கிறது. முத்துவீரியம்,  ஐகாரம் மூன்று இடங்களிலும், ஒளகாரம் மொழி முதலிலும் மட்டும் வரும் என்று கூறுகிறது. யாப்பருங்கலம் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் மூன்று இடங்களிலும் வருவதைக் காட்டுகிறது. எனவே, யாப்பருங்கலம், நேமிநாதம், சுவாமிநாதம் ஆகியன மூன்று  இடங்களிலும் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் இடம்பெறும் எனும் கொள்கையில் மாறுபடவில்லை.
     மகரக்குறுக்கம் போலும், மருளும் எனும் சொற்கள் செய்யுளில் போன்ம், மருண்ம் என இடம்பெறும் இரண்டு இடங்களிலும், தொடரில் மகர ஈற்றுச் சொல்லைத் தொடர்ந்து வகரம் முதலான சொல் வரும் இடம் என இம்மூன்று இடங்களிலும் குறுகி ஒலிக்கும் இடங்களாக இருப்பதை எல்லா இலக்கண நூல்களிலும் காணலாம்.
     ஆய்தக்குறுக்கம் ல,ள  ஈற்றுச் சொற்களின் திரிபு ஆகிய இரண்டு இடங்களில் குறுகி ஒலிக்கின்றது.
     இவ்வாறு சார்பெழுத்துகளின் தொகை விரி நிலை காலத்திற்குக் காலம் வேறுபட்டு நிற்கிறது.

சார்பெழுத்துகளின் மாத்திரை அளவு

      எழுத்துகள் ஒலிக்கும் கால அளவைக் கணக்கிட மாத்திரை எனும் முறையை நம் முன்னோர் கையாண்டுள்ளனர். சார்பெழுத்துகள் யாவும் தமது முதல் எழுத்தை அடியொற்றி ஒலிக்கப்பட்டாலும் அதன் ஒலி அளவில் வேறுபடுகின்றன.  அதில், உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகியவற்றின் மாத்திரை அளவைக் குறிப்பிடுவதில் எல்லா இலக்கண நூல்களும் ஒன்றுபடுகின்றன.  ஆனால், ஐகார, ஒளகாரக் குறுக்கங்களின் மாத்திரை அளவுகள் இடத்தைப் பொறுத்து மாறுபடும் கருத்தைச் சொல்வதில் வேறுபடுகின்றன.
      தொல்காப்பியர் ஐகார, ஒளகாரக்குறுக்கங்களுக்கு ஒரு மாத்திரை என்பார்.  ஆனால், இடம் சுட்டவில்லை.
          “ஓரளபு ஆகும் இடனுமார் உண்டே
           தேரும் காலை மொழிவயி னான” (தொல்.)
என்பது நூற்பா.  நன்னூலார் மொழி முதலில் மட்டும் ஐகாரம் ஒன்றரை மாத்திரை. மொழி இடையிலும் கடையிலும் ஒருமாத்திரை என்பார்.   நேமிநாதம் இடம் சுட்டாமல் ஐ, ஒள மொழிக்கண் ஒன்றரை மாத்திரை என்கிறது. இலக்கண விளக்கமும் தொன்னூல் விளக்கமும் முத்துவீரியமும் இடம் சுட்டாமல் ஒரு மாத்திரை என்கின்றன.
     யாப்பருங்கலம் மொழி முதலிடை கடைகளில் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரை பெறும் என்று கூறுகிறது.


           “ஒருசூத் திரத்திற்கு ஒவ்வோர்  ஆசிரியர்
           ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே” (இலக்கணக் கொத்து)
என இலக்கணக் கொத்து கூறுவது போலச் சார்ந்து வரல் மரபினை உடைய சார்பெழுத்துகள் பற்றிய கோட்பாட்டில் தொல்காப்பியம் தொடங்கி ஒவ்வோர் இலக்கண நூல்களும் வேறுபட்டுள்ளன என்பதை அறிகிறோம். இவ்வாறாக, சார்பெழுத்துகளை ஒலிவடிவில் பார்க்கும் போது ஆய்தம் நலிகிறது; அளபெடைகள் நீள்கின்றன; இ, உ, ஐ, ஒள, ம் முதலியன குறுகுகின்றன.

     வரிவடிவக் கோட்பாட்டில் அணுகும் போது தனித்த வரி வடிவம் உள்ள சார்பெழுத்துகளாக உயிர்மெய், ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மகரக் குறுக்கம் ஆகியனவும் வரி வடிவம் இல்லாது குறியீட்டளவில் விளங்குவன உயிரளபெடை, ஒற்றளபெடைகளும், வரி வடிவம் இல்லாது மொழிக்கண் இடம் பெறுவனவாக ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் திகழ்கின்றன.

     செய்யுளில் மட்டும் நீட வந்த உயிரளபெடை நச்சினார்க்கினியரால் இயற்கை அளபெடை, செயற்கை அளபெடை என இரண்டாக விரிவுபடுத்தப்பட்டு முத்துவீரிய காலத்தில் எட்டாக வளர்ந்துள்ளது.

     ஐகாரக் குறுக்கத்தின் மாத்திரை அளவு ஒன்றரை, ஒன்று என வேறு வேறாகக் கூறப்பட்ட போதும் யாப்பில் இடம்பெறும் போது மொழி முதலில் நெடிலாகவும், இடை கடைகளில் குறிலாகவும் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவதை யாப்பிலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன.

     ஒளகாரக் குறுக்கம் மொழியின் மூன்று இடங்களிலும் இடம்பெறும் எனச் சில நூல்கள் கூறினாலும் மொழி இடை, கடைகளில் வருவதற்கான சான்றுகள் இல்லை.

     மகரக்குறுக்கம் புள்ளிபெறும் எனும் வழக்கு  தொல்காப்பியத்திற்கு அடுத்து மறைந்து போய்விட்டது.


     புணர்நிலையில் இடம்பெறும் ஆய்தக் குறுக்கச் சான்றுகள் வழக்கொழிந்த போதும் தொல்காப்பியர் கூறுகின்ற உருவினும் இசையினும் மட்டும் அருகித் தோன்றும் ஆய்தங்கள் வழக்கில் உள்ளன.




----------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை




சௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை

தோற்றுவாய்

           இந்தியாவில் ஆயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பல பேச்சு வழக்கு மொழியாக மட்டுமே உள்ளன. எழுத்து வடிவமும் பேச்சு வடிவமும் கொண்டவை சில. இவற்றுடன் இலக்கிய இலக்கண வளமுடைய மொழிகள் சிற்சில. இலக்கியங்களோ வரி வடிவமோ இல்லாத மொழி எனப் பிற மொழி பேசப்படுவோரால் கருதப்படும் சௌராஷ்ட்ர மொழி  ஏராளமான இலக்கிய வளத்துடன் தனக்கெனத் தனி வரிவடிவமும் கொண்டு விளங்குகிறது என்பதை இக்கட்டுரை முன் வைக்கிறது.

சௌராஷ்டிர மக்கள்

           சுதந்திர இந்தியாவில் தற்போதைய குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியாக மட்டுமே ‘சௌராஷ்டிரா’ எனும் நகரம் உள்ளது. ஆனால், வரலாற்றுப் பின்னணியில் பார்க்கும் பொது சௌராஷ்டிர தேசம் வேதப் பழமையானது என்பதையும் மிகப் பெரிய பகுதியாக விளங்கியதையும் தஸ்மா பாஸ்கர் என்பார் “வேதப் பழமையான சௌராஷ்டிரம்” எனும் நூலில் தெரிவிக்கிறார்.
           யுவான்சுவாங் எனும் பயணி வட இந்தியாவில் மதுரா முதல் ஹிமாலயம் வரையிலும் சௌராஷ்டிர தேசம் பரவியிருந்தது என்பதைச் சுட்டுகிறார்.
           தற்போது தமிழகமெங்கும் பரவலாக வாழ்ந்து வரும் சௌராஷ்டிர மக்கள் பல்வேறு காலகட்டங்களில் குழுக்களாகத் தமது புலம் பெயர்ந்து வந்துள்ளனர். கஜினி முகமது படையெடுப்பின் போதும், சத்ரபதி சிவாஜியின் அரசுப் பணியில் சேர்ந்ததன் காரணமாகவும், விஜய நகரப் பேரரசில் வேலை செய்ய வந்ததன் காரணமாகவும், திருமலை நாயக்கர் காலத்திலும் தென்திசை நோக்கி வந்தமை அறியப்படுகிறது.

சௌராஷ்டிர மொழியின் தொன்மை

           சௌராஷ்டிர மக்களின் வரலாறு வேதப் பழமையானது என்பதால் மொழியும் சமஸ்கிருதத்திலிருந்தே கிளைத்துள்ளது.  சமஸ்கிருதத்தின் பேச்சு மொழி பல்வேறு காலகட்டத்தில் மூன்று நிலைகளில் பேசப்பட்டு வந்துள்ளது.  முதல் நிலையில்  சமஸ்கிருதம் கி.மு.900 வரையிலும், இரண்டாம் நிலையான பிபாஷா சமஸ்கிருதம் கி.மு.700 வரையிலும் பேசப்பட்டு வந்தது.  மூன்றாம் நிலையான பிராகிருத சமஸ்கிருதம் கி.மு.700 முதல் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.  சௌராஷ்டிர மொழி சமஸ்கிருதத்தின் மூன்றாம் பிரிவான பிராகிருதத்தின் பேச்சு வழக்குகளில் வருகிறது. விரஜ பாஷை எனப்படும் சௌராஷ்டிரா  2500 வருடங்களுக்கு முன்பிருந்தே வழக்கில் இருந்து வருகிறது.  யுவான்சுவாங் மதுரா முதல் ஹிமாலயா வரையும் விரஜ பாஷை பேசப்பட்டது என்கிறார்.  சமஸ்கிருதமே மூல மொழி என்பதால் சௌராஷ்டிர மொழிக்குச் சமஸ்கிருத இலக்கணம் பெரிதும் பொருந்தி வரும். ஆயினும் சௌராஷ்டிர மொழிக்குப் பன்னெடுங்காலம் முன்பே வரருசி என்பவரால் இலக்கணம் வகுக்கப்பட்டது.

சௌராஷ்டிர இலக்கண நூல்கள்

           வரருசி என்பார் “பிராகிருதப்  பிரகாசம்” எனும் இலக்கண நூலை எழுதினார்.  இந்நூல் சௌராஷ்டிரம் மட்டுமன்றி மராட்டி, அவந்தி, மாகதி ஆகிய மொழிக்கும் சேர்த்து இலக்கணம் உரைக்கிறது. அடுத்து, “பிராகிருத சர்வஸ்வ” எனும் நூலை மார்கண்டேயரும், “பிராகிருத லவண” எனும் நூலைச் சண்ட என்பவரும் மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் படைத்தனர்.
           “பிராகிருத காமதேனு அல்லது பிராகிருத லங்கேஸ்வரராவண” என்பதை லங்கேஸ்வரரும், “சம்க்ஷித சார” என்பதைக் கிரமகீஸ்வரர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் படைத்தனர்.  “பிராகிருதானுசாசனம்” எனும் நூல் புருசோத்தமரால் படைக்கப்பட்டது. திரிவிக்ரமர் என்பார் “சித்த ஹேம சப்தானுசாசனம்” எனும் நூலைப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் படைத்தார். லக்ஷ்மிதரர் என்பார் “ஷட்பாஷா சந்திரிகா” எனும் நூலைப் படைத்தார். தர்க்க வாகீசப் பட்டாச்சாரியார் ராமசர்மா என்பவர் “பிராகிருத கல்பதரு” நூலைப் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றியுள்ளார்.
           இலக்கண நூல்களுக்குப் பலர் உரையும் கண்டனர். வரருசியின் பிராகிருதப் பிரகாசத்திற்கு மார்கண்டேயர், பரதர், கோஹல ஆகியோர் உரை செய்தனர். ஆறாம் நூற்றாண்டில் காத்யாயனர் என்பாரின் உரை நூல் “பிராகிரு மஞ்சரி” என்றும், ஏழாம் நூற்றாண்டில் பாமஹரரின் உரை “மனோரமா” என்றும், பதினான்காம் நூற்றாண்டில் வசந்த ராஜரின் உரை “பிராகிரு சஞ்சீவணி” என்றும் வழங்குகிறது.

பழமையான இலக்கியங்கள்

           கி.பி. நான்காம் நூற்றாண்டில் யாஸ்கர் என்பார் “நிருக்தா” எனும் நூலையும், விமலசூரி “பவும சரிய” எனும் நூலையும் படைத்தனர். பத்தாம் நூற்றாண்டில் “லீலாவதி” எனும் நூல் கோஹல என்பவரால் இயற்றப்பட்டது. சங்கதாசகணி மற்றும் தர்மசேனகணி ஆகியோரால் “வாசுதேவ ஹிண்டி” எனும் நூல் செய்யப்பட்டது. சௌராஷ்ட்ர மொழியில் தொகை நூல்களாக காதா சப்த சதியும் விஜ்ஜாலக்கம் ஆகியன விளங்குகின்றன. சேது பந்தனம், கௌடவதம் ஆகியன காவியங்களாக உள்ளன. இராமாயண, மகாபாரத இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகள் பரவலாக நடைபெற்றுள்ளன.

தமிழகத்தில் சௌராஷ்ட்ர மக்களின் இலக்கியக்கொடை

           தமிழகத்திற்கு வந்த சௌராஷ்ட்ர மக்கள் தம் தாய் மொழியைப்பேசியதுடன் இலக்கியப் படைப்பும் கொடுத்து உயிரூட்டினர்.  இன்று சௌராஷ்ட்ர மக்கள் தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் எனப் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். பூர்வீகத் தொழிலான நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் இம்மக்கள் தொழில் நலிவால் சில காலங்களாகப் பிற பணிகள் புரிவோராக உள்ளனர்.
           தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில்  1789 இல் பிறந்தவர் ஸ்ரீ வேங்கடரமண பாகவதர். இவர் தியாகராஜ சுவாமிகளின் முதன்மையான சீடராக விளங்கினார். தெலுங்கு, கன்னடம், பைசாகி, ஹிந்தி  பாலி, உத்கலம், தமிழ் எனப் பன்மொழிப் புலமை கொண்ட வேங்கடரமண பாகவதர் கீர்த்தனைகள் பல பாடித் தம் குருவிற்குக் காணிக்கையாக வழங்கினார்.

வரகவி ஸ்ரீ வேங்கடசூரி சுவாமிகள்

           1818 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் அய்யம்பேட்டையில் பிறந்த வேங்கடசூரியார் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் அவைப்புலவராக விளங்கினார்.   இவருக்குத் தக்ஷிண காளிதாஸ்,  கவிகேசரி, வித்யா விசாரதா, பத்யகேசரி, கவி சிரோமணி முதலான பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. பன்மொழிப் புலமை கொண்ட இவர் சௌராஷ்டிரா மொழியில் பல நூல்களைப் படைத்துள்ளார்.
                                மகா காவிய இராமாயண சங்கீதக் கீர்த்தனைகள், பாலராமாயணம், ஸ்ரீ ராமாவளி, ஸ்ரீ கிருஷ்ணாவளி, பக்திரசக் கீர்த்தனைகள், லாவணி கீதங்கள், தாமரைத் துவஜன் கதை, ருக்மணி கல்யாணம், ஜக்குபாய் சரித்திரம் ஆகியன இவர் இயற்றிய நூல்கள்.  சமஸ்கிருதத்தில் “நௌகா காவியம்” எனும் நூலைப் படைத்துள்ளார்.

குருக்கு சுப்பார்ய சுவாமிகள்

            1814 இல் பரமக்குடியில் பிறந்தவர் குருக்கு சுப்பார்ய சுவாமிகள். இவர்  1844 இல் அனுபவ பஞ்சரத்னம், சங்கீர்த்தன சாகித்யம்,  1854 இல் சீதா ராமாஞ்சநேயம்,  1856 இல் பகவத்கீதை விளக்கம் ஆகிய நூல்களைப்  படைத்தார்.

மகாகவி அழகாரய்யர்

           சேலத்தில்  1832 இல் பிறந்தவர் அழகாரய்யர்.  இவர் வரகவி வேங்கட சூரியின் மாணவராக விளங்கியவர்.  கர்நாடக சங்கீதம் அறிந்த இவர் பிடில் வித்வானாகவும் திகழ்ந்தார். பஞ்சல் சரித்திரம், ஆசௌச விதிகள், விஷ்ணு புராணம், சௌராஷ்டிரா வியாகரணம், நரசிம்ம சதகம், சிருங்கார வர்ண கீதங்கள், பஜனோர்ச்சவ கீர்த்தனைகள் முதலான நூல்கள் இவர்தம் இலக்கியக்கொடையாக உள்ளன.

தொ.மு. இராமராய்

           1852 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இராமராய் “புதிய சௌராஷ்டிரா எழுத்தின் பிரம்மா” எனலாம். தம் வாழ்நாள் முழுவதையும் சௌராஷ்டிர மொழி வளர்ச்சிக்காகவும் புதிய லிபி வடிவத்திற்காகவும் பாடுபட்டவர்.  வட நாட்டில் வழங்கி வரும் சௌராஷ்டிர எழுத்து முறை தேவ நாகரி முறையைப் பின்பற்றுகிறது. ஆனால், இராமராய் அவர்கள் உருவாக்கிய புதிய லிபி முறை கன்னடம், தெலுங்கைப்  போல வட்ட வடிவிலானவை.  இவர் தான் உருவாக்கிய லிபி முறையிலேயே இலக்கியங்களைப் படைத்தார். சௌராஷ்டிர மொழிக்கான புதிய லிபி இலக்கணம் இவராலும் சேலம் அழகாரய்யராலும் நூலாக அச்சிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
           சௌராஷ்ட்ர போதினி, சௌராஷ்ட்ர பிரைமர், சௌராஷ்ட்ர முதல் பாடப் புத்தகம், சௌராஷ்ட்ர இரண்டாம் பாடப் புத்தகம், நந்தி நிகண்டு, சதுர் பாஷா வல்லரி( தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், சௌராஷ்டிரா) ஆகியன படைத்த நூல்கள். இவர் இயற்றிய சௌராஷ்ட்ர நீதிசம்பு எனும் நூல் அறநெறிகளைத் தொகுத்துக் கூறும் நீதி நூலாகத் திகழ்கிறது.

நடன கோபால நாயகி சுவாமிகள்

           மதுரையின் ஜோதி, சௌராஷ்டிரா ஆழ்வார் எனப் போற்றப்படும் நடன கோபால நாயகி சுவாமிகள்  1843 இல் மதுரையில் பிறந்தவர். அட்டாங்க சித்திகளைக் கற்றறிந்த இவர் தமிழிலும், சௌராஷ்ட்ர மொழியிலும் பல கீர்த்தனைகள் பாடிப் பெருமை சேர்த்தார். இவர்தம் கீர்த்தனைகள் பக்திப் பரவசமூட்டுபவை. மேலும், வாழ்வியல் தத்துவங்களை உணர்த்துவனவாகவும் விளங்குகின்றன.

கவிஞர் சங்குராம்

           சௌராஷ்ட்ர இலக்கியக் கொடையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சங்குராம்.  1907 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் தேர்ந்தவர்.  மதுரையில் இயங்கிவரும் சித்தாச்சிரமத்தில் நீதி கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழிலும் சௌராஷ்ட்ர ஒலி வடிவத்தைத் தமிழில் கொண்டும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.  ஸ்ரீ நிவாசப் பெருமாள் கோவில் தல வரலாறு, ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ சதகம், ஞானாமிர்த கீதம், சித்தாச்ரமப் பிரபாவம் ஆகியன இவர்தம் படைப்புகள். 
           சௌராஷ்ட்ர இலக்கியப் பரப்பில் பெரிதும் பேசப்படும் இவரது நூல் “ஸ்ரீ த்வின்” எனப்படும் திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆகும்.   1980  ஆம் ஆண்டில் திருக்குறள் பாயிரத்தை மட்டும் மொழிபெயர்த்தார். பின், சித்தாச்சிரம நரஹரி என்பாரின் வேண்டுகோளுக்கிணங்க திருக்குறள் முழுவதையும் சௌராஷ்ட்ரத்தில் மொழிபெயர்த்தார்.  திருக்குறள் போலவே ஈரடி வெண்பா யாப்பில் கொஞ்சம் கூட சொற்சுவை, பொருட்சுவை குன்றாது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது இந்நூலின் மற்றொரு சிறப்பு.

           “கனினுக் கனிஹோன் கனிகர் கனினுக்
            கனிஹோன் கனிஹோஸு பொவ்ஸு”

என்பது “துப்பார்க்குத் துப்பாய” எனும் குறளின் மொழிபெயர்ப்பு.

எம்.வி. வெங்கட்ராம்

           தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்  1920 ஆம் ஆண்டு பிறந்த வெங்கட்ராம் சிறு வயது முதலே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கினார். சௌராஷ்ட்ரரான இவர் தமிழில் பல இலக்கியங்களைப் படைத்தவர். பதினாறு வயதில் இவர் எழுதிய “சிட்டுக் குருவி” கதை மணிக்கொடியில் வெளியானது. விக்ரஹநாசன் எனும் புனை பெயரில் கவிதைகள் எழுதினார். ‘தேனீ’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக விளங்கினார். இவரது “காதுகள்” நாவல் 1993 இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. “வேள்வித் தீ” எனும் நாவல் சௌராஷ்ட்ர மக்களின் வாழ்வியலை விளக்குகிறது.
                                எம்.வி. வெங்கட் ராம்  நித்தியகன்னி, இருட்டு, உயிரின் யாத்திரை, அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள், வேள்வித்தீ, காதுகள் ஆகிய தமிழ்ப் புதினங்களையும், மாளிகை வாசம், உறங்காத கண்கள், மோகினி, குயிலி, இனி புதியதாய், நானும் உன்னோடு, அகலிகை முதலிய அழகிகள், முத்துக்கள் பத்து, பனிமுடி மீது கண்ணகி ஆகிய சிறுகதைகளையும் படைத்தவர்.  என் இலக்கிய நண்பர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லார் ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.  சௌராஷ்டிர சமூகத்திலிருந்து தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். இவரது சிறுகதைத் தொகுப்பு தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளது.

தொ. ரா. பத்மநாபய்யர்

           தொ.ரா.ப. எனப்படும் இவர் பகவத் கீதையைப் பல வடிவில் மொழிபெயர்த்தார். பகவத் கீதையின் அனைத்து அத்தியாயங்களும் தேவநாகரி, தமிழ் எழுத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  வெண்பா யாப்பில் கீதையை மொழிபெயர்த்தார். கீதையைப் படிப்பதால், கேட்பதால் உண்டாகும் பயனை விவரித்துக் கிளிக் கண்ணி, காவடிச் சிந்து, கும்மி வடிவத்தில் “கீதா கீதுன்” எனும் நூலைப் படைத்துள்ளார்.

சௌராஷ்டிர நூல் வெளியீடுகள்

            1942 இல் கு.வெ. பத்மநாபய்யரின் “ வேங்கட சூரி சுவாமி சரித்திரம்” எனும் நூல் வெளிவந்தது.  1958 இல் ராம. வெங்கட்ராம் ஐயங்காரின்  “சௌராஷ்டிரா சங்கிரக ராமாயணு” எனும் நூல் தமிழ் எழுத்தில் வெளிவந்துள்ளது. தொ.ரா. பத்மநாபய்யரின் “சௌராஷ்ட்ர பகவத் கீதை” 1999 இல் மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. சித்திரமும் கதையும் கொண்டவாறும், தமிழ், சௌராஷ்ட்ர லிபி வடிவம் கொண்டும் அமையப்பெற்ற “சௌராஷ்ட்ர பிரதித்வனி” எனும் நூல் வெளிவந்தது.
           சௌராஷ்ட்ரர் தென்னாட்டு விஜய வரலாறு மற்றும் கோத்திரப் பிரவர காண்டம் எனும் நூல் தமிழில்  1990 ஆம் ஆண்டில் சௌராஷ்ட்ர ஆன்மீக சபையில் வெளியிடப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து தி.வி.குபேந்திரன் அவர்களின் “சௌராஷ்ட்ர கோத்ர காண்டோ” எனும் நூலும், டி.ஆர். பாஸ்கர் அவர்களின் “வேதப் பழமையான சௌராஷ்டிரம்” எனும் நூல்களும் வெளிவந்துள்ளன.
                                சேதுராமன் என்பாரின் “தமிழ் நாட்டில் சௌராஷ்டிரர் வரலாறு” எனும் நூல் சௌராஷ்டிரா மக்கள் புலம்பெயர்ந்து வந்ததன் காரணம், தற்போது மக்களின் நிலைப்பாடுகள் கூறப்பட்டுள்ளன.  சி.கே. நரசிம்மாச்சாரி என்பார் “சௌராஷ்ட்ரத் திருமணம்” எனும் குறு நூலில் சௌராஷ்ட்ரரின் திருமணச் சடங்கின் பல்வேறு படிநிலைகள் நயம்படக் கூறப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமி வழங்கும் “பாஷா சம்மான்” விருது பெற்ற தாடா சுப்பிரமணியன் என்பார் “ஒள்டியானு வத்தான்” எனும் பொன்மொழித் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.  உபமன்யு என்பவர் சௌராஷ்ட்ர லிபி பயிற்சிப் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இறுவாய்


           அரசியல் காரணங்களுக்காகவும், அரசுப் பணி காரணத்திற்காகவும் பல காலகட்டத்தில் புலம் பெயர்ந்து வந்த சௌராஷ்ட்ரர்கள் தம் தாய்மொழியையும் தமிழையும் போற்றி வாழ்ந்து வருகின்றனர்.  சௌராஷ்ட்ரர் தமிழிலும், தென்னிந்திய மொழிகளிலும், தம் மொழியிலும் பல்வேறு இலக்கியப் படைப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் நல்கியுள்ளனர்.  சௌராஷ்ட்ரத் திருக்குறள் மொழிபெயர்ப்பு தமிழுலகில் பெரிதும் போற்றப்படுகிறது. ஒரு மொழி தொடர்ந்து பேசப்பட்டு வந்தால்தான் நிலைத்து நிற்கும் எனில் அதற்குச் சௌராஷ்ட்ர மொழியே சான்று என்பதில் ஐயம் இல்லை.
>