திங்கள், 11 நவம்பர், 2013

தூவும் மழையும் அளபெடையும்

           “அடடா அடடா அடை மழைடா” என்று இனி வரும் காலங்களில் இளைய சமுதாயம் படங்களில் தான் மழையைப் பாரக்கமுடியுமோ என்ற அளவிற்கு மழை பொய்யெனப் பெய்து வருகிறது.  இந்த உலகம் இயங்க மழைநீர் ஆதாரமாக இருப்பதால் தான் அதனைப் பூலோக அமிழ்தம் என்றார் திருவள்ளுவர். வான் சிறப்பு அதிகாரத்தில் அனைவரும் அறிந்த குறட்பா, 
                 “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
                  துப்பாய தூஉம் மழை”.
இந்தக் குறட்பாவை எவரும் “தூவும் மழை” என்றே வாசிக்கின்றனர். “தூஉம்” என்பதில் உள்ள அளபெடையைப் பலரும் மறந்துவிட்டனர் போலும்!
     உண்பவருக்குத் தேவையான உணவுப் பொருள்களை விளையவைப்பதுடன், தானும் உணவாக ஆனது மழை நீர்.   துப்பு + ஆயதூஉம்  = துப்பாய தூஉம் எனச் செய்யுளில் நிற்கிறது. எனவே, துப்பு ஆயதூஉம் எனச் சரியாக அசை பிரித்து வாசித்தால் பொருளில் பிழைபடாது. இல்லையேல் செய்யுளில், மழை மட்டுமே தூவுமே தவிர “மழை நீர் உணவு” என்ற பொருள் வராது.
     தமிழில் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துகள் உண்டு.  இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துகள் உண்டு. மூன்று மாத்திரை ஒலிக்கும் எழுத்து என்று தனியாக இல்லை.. அவ்வாறு ஒலித்திட நேர்கின்ற போது நெடிலுக்கு இணையான இன எழுத்தைப் பக்கத்தில் இட்டு எழுத வேண்டும் மேலும், அந்த ஒலி தனித் தனியே, அதாவது ஆ-அ, ஈ-இ , ஊ-உ, ஏ-எ, ஓ-ஒ, ஐ-இ என விட்டிசைக்காமல் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ என நீட்டி ஒலிக்க வேண்டும்.  அளபெடையை நீருடன் நீர் கலந்தாற்போல ஒலிக்கவேண்டும். இந்த இலக்கணம் கூறும் போதே தொல்காப்பியர்,
            “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
            கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் “
என்று நம்மை அளபெடைப்  பயிற்சியில் ஈடுபடுத்தச் செய்கிறார்.
எனவே, ஒலிப்புமுறையைச் சரியாகக் கற்றுத் தந்தால்  தமிழின் நீர்மை இனிமையினும் இனிமையே!


5 கருத்துகள்:

  1. ஆகா..ஆகா.. அருமை கோபி, இதை இப்படித்தான் சொல்லணும்.
    இலக்கணம் என்றாலே காததூரம் ஓடும் இன்றைய “மூன்றாம் காதாய் செல்பேசி”யை வைத்துத் திரியும் இளசுகளுக்கு இப்படித்தான் இலக்கணத்தைச் சொல்லணும். அதிலும் உங்கள்- “அளபெடையை நீருடன் நீர் கலந்தாற்போல ஒலிக்கவேண்டும்” என்னும் உவமை அழகோ அழகும் பொருத்தமும் கூட. இத்தோடும் கூட அந்த மழைப்படத்தை எங்க, எப்படிப் புடிச்சீங்க கோபி மிக மிக அருமை. எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எதச் சொல்லணும் அத எப்படிச் சொல்லணும்னு உங்களுக்குப் பிடிபட்டுவிட்டது. வெளுத்து வாங்குங்க... நான் “இளைய தமிழ்த்தாத்தா” என்று உங்களைப் புதுக்கோட்டையில் அறிமுகப்படுத்தியது சரிதான் என்பதை இந்த ஒரே பதிவில் காட்டிவிட்டீர்கள்... தொடரட்டும் உங்கள் தேன்மழை.

    பதிலளிநீக்கு
  2. நண்பருக்கு வணக்கம்,
    இலக்கணம் இனிக்கும் என்பதை இளைஞர்கள் உணரும் படி நேர்த்தியாக பதிந்த விதம் அழகு. உங்களுடைய மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். முத்துநிலவன் அய்யா அவர்கள் கொடுத்த தமிழ்தாத்தா பட்டம் மிகப்பொருத்தம். பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. அய்யா வணக்கம்!
    என்ன அருமையாகச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறீர்கள்! அளபெடை விட்டிசைத்தல் இல்லாமல் ஒலிக்க வேண்டும் என்பதற்குக் காட்டும் உவமை அருமை.
    உயிர் 1அல்லது 2 மாத்திரை. அதனுடன் அரை மாத்திரை அளவுள்ள மெய் சேர்ந்து உயிர்மெய் ஆகும்போது அது 1 1/2 அல்லது 2 1/2 மாத்திரையாகாமல் உயிரின் அளவே பெற்று 1 அல்லது 2 மாத்திரையாக நிற்பது எப்படி என்பதற்கு உரைக்காரன் “ ஒரு நாழி நீரில் அரைநாழி உப்பைச் சேர்த்தால் அதன் அளவு மாறாதது போல“ என உவமை எடுத்தாள்வானே அதை நினைக்கிறேன்.
    இச்சூத்திரத்தையேதான் நானும் உடம்பொடு புணர்த்தலில் எடுத்தாண்டு இருக்கிறேன். ஒன்றாகச் சிந்திக்கிறோம்.
    நீங்கள் அனுமதித்தால் வழக்கமான எனது “வளவள“ பாணியில் அளபெடை பற்றித் தனியே எழுதுவேன். நன்றி!

    பதிலளிநீக்கு

>