புதன், 18 ஜூன், 2014

கனவு இலக்கண நூல் அறிவோம்!

     

        கனவு இலக்கண நூல் அறிவோம்!

       விஞ்ஞானிகளின் கனவுகள் உலகத்தை உயர்வடையச் செய்கின்றன. பல விஞ்ஞானிகள் தங்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை அவர்களின் கனவுகள் தீர்த்துவைத்துள்ளன.  ஒரு பொருளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அப்பொருள் பற்றிய கனவு தோன்றுவது இயல்பு. பேரறிஞர்கள் கண்ட மனக் கனவுகள் சமுதாயத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கின்றன.
     கனவுகளின் அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு என்பாரின் கருத்து. உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் கனவு காண்கின்றனர் தனிப்பட்ட மனிதர்களும் காண்கின்ற கனவுகள் அவர்கள் வாழ்க்கையை ஒட்டி அமைகின்றன. கனவு காணாத மனிதர்களே இல்லை.
     கனவைப் பற்றிய ஆராய்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் மிகுதியாக வளர்ந்தது.  ஆனால் கனவு பற்றிய செய்திகள் இலக்கியங்களில் கண்டிருப்போம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பாண்டிமாதேவி கனவுகள், சீவக சிந்தாமணியில் விசையையின் கனவு என்பன நாம் அறிந்தவை.
     கனவுகள் எதிர்பாராது தோன்றுவன. அதனால் தான் எதிர்பாராத இன்பம் பெறும் போதும், நினையாத துன்பம் நேரும் போதும் ‘கனவுபோல நடந்து விட்டது, கனவில் கூட நான் துரோகம் நினைக்க மாட்டேன்” என்பன போன்ற சொல்லாடல்கள் உள்ளன. நனவில் நிகழாதவையும் கனவில் நிகழலாம். நனவு நிலை அறிவு நிலைக்குக் கட்டுப்பட்டது.  கனவு அறிவு நிலை மயங்கி, அதனையும் மீறி நிகழ்வது. இந்தியா எவாறு இருக்க வேண்டும் என்பதை அரசியல் தலைவர்கள் அறிந்ஞர்கள் போன்றோர் கனவு காண்கின்றனர். பயபு அது நனவாகவும் அமைகிறது. பழங்காலப் புலவர்களும் ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தம் கவிதையின் வழி தம் கனவினைத் தெரிவிக்கின்றனர். தொல்காப்பியத்திலும் கனவு காண்பது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.
     சில நேரங்களில் சில நிகழ்வுகள் நடக்கும் போது அதை முன்பே கண்டது போன்றும், சில நேரங்களில் சில மனிதர்களைச் சந்திக்கும் போதும் அவர்களுடன் முன்பே பழகியது போன்றும் தோன்றுகின்றன. நிச்சயம் இது கனவின் வெளிப்பாடே.
     இப்படி கனவுகள் பற்றி விவரித்துக் கொண்டே போகலாம்.  கனவுக்குக் கூட நம் மொழியில் இலக்கண நூல் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா?  ஆம் நண்பர்களே.  “பொன்னவன் கனா நூல்” எனும் கனவு இலக்கண நூல் ஒன்றை சமீப காலத்தில் வாசித்தேன். இந்த நூல் திராவிட மொழிகளில் முதலில் தோன்றிய கனவு நூல்.
      கனவு நூல் பற்றிய குறிப்புகள்  சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் காணக் கிடக்கின்றன.  ஆனால், 1920 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் இந்தக் கனா நூலை வெளியிட்டுள்ளனர். பொன்னவன் எனும் புலவர் இந்த நூலை யாத்துள்ளார்.  முப்பது பாடல்களைக் கொண்ட இந்த நூல் அந்தாதி யாப்பில் உள்ளது. மேலும் பெண்ணை முன்னிலையாய் ( மகடூஉ) வைத்துப் பாடப்பட்டுள்ளது.
      கனவு காணும் நேரத்தைப்பொறுத்து அதன் நனவு தோன்றுமாம்.
       “படைத்த முற்சாம் ஓராண்டிற் பலிக்கும் பகர்இரண்டே
       கிடைத்தபிற் சாம மிகுதிங்கள் எட்டில் கிடைக்கும் என்னும்
       இடைப்பட்ட சாமம் மூன்றில் திங்கள் ஒரு மூன்று என்பவால்
       கடைப்பட்ட சாமமும் நாள் பத்துளே பலங்கைப் பெறுமே”
என்பது நூலின் தொடக்கத்தில் உள்ள ஒரு பாட்டு.
         இரவு 10- 11மணி   முதல் சாமம், 11-12 இரண்டாம் சாமம், 12-1 மூன்றாம் சாமம், 1-2 நான்காம் சாமம்.
       “ பற்றிடும் கீர்த்தி அணிகள் பெற்றால்,  இன்பம் பால்பருகில்
         அற்றிடும் துன்பம்,  தயிர் பேரில் பொன் பெறும்,  அப்பம் தின்றால்
         உற்றிடும் துன்பம், வரகும் செஞ்சாலியும் உப்பும் எள்ளும்
         பெற்றிடும் இன்பம், இறைச்சி உண்டாலும் பெருநலமே”
எனும் பாடல் நற்பலன்களைச் சொல்கின்றது.
      “ அல்லல் உண்டாகும் இரந்திடில், கட்டிலில் அப்பம் தின்றால்
        செல்வம் உண்டாகும், செழுமனிப் பூணைச் சில பறித்துப்
        புல்லர் கொண்டு ஓடினும் செல்வம் போம், சுரை, பூசணிக்காய்
        கொல்லைஅம் சாரல் வரையினில் காய் பேரில் குற்றம் உண்டே”
எனும் பாடலில் தீய பலன்களும் சொல்லப்படுகின்றன

        தமிழ் ஒரு பெருங்கடல். யாவும் அடங்குகின்றன. உலகில் கனவு பற்றிய ஆராய்ச்சி தொடங்கும் முன்பே இங்கு அதற்கு ஓர் இலக்கண நூல் இருந்துள்ளமை அறியும் போது என்னே வியப்பு. இப்படி எல்லாத் துறைக்குமான பழந்தமிழ் நூல்கள் வெளிப்பட வேண்டும்.  அரிய வகை நூல்கள் வெளிக்கொணர வேண்டும் என்ற கூற்றே தீர்க்க தரிசி பாரதியின் கனவு.  கனவு மெய்ப்படும்.  காத்திருப்போம்.  
>