செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இலக்கணமும் பண்பாடும்

                                                                                                                                                        


         உலகத்தில் உள்ள பல மொழிகளின் இலக்கணத் தன்மையில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது நம் தமிழ் மொழி.  தமிழர் வாழ்வியலை அகம், புறம் எனப் பிரித்துப் பொருள் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது தமிழ் மொழி ஒன்றே.  பொருள் இலக்கணத்தில் மட்டுமின்றிச் சொல் இலக்கணம் சொல்லும் போதும் பண்பாட்டைப் புலப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர்.

வணிக வழக்கும் நேர்மறை சிந்தனையும்:

    வணிகர்கள் தம்மிடம் பொருள் வாங்க வருபவர் பொருள் ஒன்றைக் கேட்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பொருள் இருப்பில் இல்லாத நிலையில் உடனே வணிகர் ‘இல்லை’ என்று கூறக் கூடாது. இருக்கின்ற பொருளைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.
         “ எப்பொருள் ஆயினும் அல்லது இல்லெனின்
          அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல் “ (தொல்.சொல். 35 )
      அப்படியே இல்லை என்று சொல்லும் நிலை வந்தாலும் பொருளைக் குறிப்பிட்டு ‘இதுவல்லது இல்லை’ என்றே கூற வேண்டும்.
                        “அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்”  (தொல்.சொல்.36  )
அதாவது ஒருவர் கடைக்குச் சென்று துவரம் பருப்பு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  கடையில் அப்பருப்பு இருப்பு இல்லாத நிலையில் கடைக்காரர் “கடலைப் பருப்பு உள்ளது” என்று கூறலாம். அல்லது “கடலைப் பருப்பு அல்லது இல்லை “ என்றும் கூறலாம்.  இப்படி நேர்மறையாகப் பதில் கூறும் நுட்பத்தைத் தொல்காப்பியச் சொல்லதிகாரக் கிளவியாக்கத்தில் நாம் உணரலாம்.

அறிவுரையும் தகுதியும்:

    “ ஊருக்கு உபதேசம் தனக்கு இல்லை “ என்ற பழமொழி உண்டு. காரணம் பலர் இப்படித் தனக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி என்று வாழ்கின்றனர்.  ஆனால் அறிவுரை கூறுபவர் முதலில் அதனைப் பின்பற்றி ஒழுகுபவராக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் தொல்காப்பியச் சொல்லதிகார வினையியல் நூற்பா ஒன்றின் மூலம் அறியலாம்.
     “இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி
     இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
     தன்பா லானும் பிறன்பா லானும்”  ( தொல்.சொல்.243  )
      ஒருவரிடம் ‘இதனைச் செய் இப்படிச் செய்’ என்று  கூறுகின்றோம் என்றால் அதைச் செய்யும் ஆற்றலும்  பின்பற்றும் தன்மையும் நம்மிடம் வேண்டும்.  உளப்பாட்டுத் தன்மை வினை முன்னிலையையும் உணர்த்தும் என்பதை உணர்த்த வந்து தொல்காப்பியர் அறிவுரை கூறுவதற்கும் ஒரு தகுதி உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். 
     எவற்றையும் நாம் இயல்பாகக் கூறிவிடுவோம். ஆனால் செயல் வடிவம் தருவதே பிரதானமானது.
            “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
            சொல்லிய வண்ணம் செயல்”
 என்றார் வள்ளுவரும்.        

  இவ்வாறு  இலக்கண விதிகளின்படி வாழ்வியலையும் அமைத்துக் கொள்வோம்.

3 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரர்
  தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல இலக்கண நூலும் தமிழர்களின் பண்பாட்டினை உலகிற்கு பறைசாற்றுகின்றன என்பதைத் தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தொல்காப்பியம் நூற்பாவும் உங்கள் விளக்கமும் அழகு. புதிய செய்திகள் புதுவித கற்றலுக்கு உதவுகிறது. தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 2. தன தவற்றை முதலில் உணர்ந்தால் தான் பிரச்சனை ஏது...?

  பதிலளிநீக்கு
 3. “ஒருவர் கடைக்குச் சென்று துவரம் பருப்பு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கடையில் அப்பருப்பு இருப்பு இல்லாத நிலையில் கடைக்காரர் “கடலைப் பருப்பு உள்ளது” என்று கூறலாம்.“ - இதைத்தான் “இனமொழி விடை“ என்று நன்னூல் சொல்கிறது. பதிவு நன்று. இன்னும் “கள்“ ஈறும் வள்ளுவரும், ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் சமூகப்பின்னணியில் பார்த்தால் பொருள்விரிவு தரும் என்பது பற்றியும் சிந்திக்கலாம். ஆறறிவு விளக்கம் அற்புதம் “இலக்கண மாற்றத்தின் சமூகப் பின்னணி“ என்றொரு பெருநூலே எழுத வேண்டிய அவசியமுள்ளது கோபி. நீங்களாவது நம் அய்யா அருள்முருகனாவதுதான் அதைச் செய்ய முடியும். எப்போ?

  பதிலளிநீக்கு

>