ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

குற்றியலுகரம் புள்ளி பெறுமா?

                           குற்றியலுகரம் புள்ளி பெறுமா?
       நம் தமிழ் மொழியில் மெய்யெழுத்துகள் புள்ளி பெறுகின்றன. உயிர் எழுத்துகளில் எகரம் ஒகரம் ஆகிய இரண்டும் புள்ளி பெற்று வழங்கின.
              “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”
              “எகர ஒகரத்து இயற்கையும் அற்றே”
என இவற்றைத் தெளிவு செய்கின்றது தொல்காப்பியம். இப்போது ஒரு ஐயம் எழுகின்றது. என்னவென்றால் 
               “குற்றியலுகரமும் அற்றென மொழிப” 
எனும் நூற்பாவை உணரும் போது குற்றியலுகரமும் முன்பு புள்ளி பெற்றதா? என்பது.
     பொதுவாகத் தமிழில் ஓர் எழுத்து தன் மாத்திரையிலிருந்து பாதி அளவில் குறைந்து ஒலிக்கும் போது புள்ளி பெறுகின்றது.  க – ஒரு மாத்திரை க் – அரை மாத்திரை.  இந்தக் கோட்பாட்டை நாம் தொல்காப்பியத்தின் மூலமாகவே பெறுகின்றோம்.  தொல்காப்பிய நூன்மரபில்                                                                                                         "உட்பெறு புள்ளி உருவா கும்மே”
எனும் நூற்பா மகரக் குறுக்கத்தின் வரிவடிவத்தை உணர்த்துகின்றது.   மகர மெய் புள்ளி பெற்றே இருக்கும். இது தனது அரை மாத்திரையில் இருந்து குறுகிக் கால் மாத்திரையாக ஒலிக்கின்ற போது புள்ளி இட்டு எழுதுக என்பதே இந்த நூற்பாவின் பொருள். இந்த நூற்பா மாட்டேறு நூற்பா.
  “ அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
       இசை இடன் அருகும் தெரியும் காலை”
என்பதே இதற்கு முந்தைய நூற்பா. எனவே, மகரக் குறுக்கம் மேலும் ஒரு புள்ளி பெற்று எழுத வேண்டும் என்ற கருத்தைப் பெறுகின்றோம். 
அதே போல
               “ குற்றியலுகரமும் அற்றென  மொழிப”
எனும் நூற்பாவும் மாட்டேறு நூற்பா. இதற்கு முந்தைய நூற்பாக்கள்                    “மெய்யின் இயற்கை புள்ளியயொடு நிலையல்”
          “எகர ஒகரத்து இயற்கையும் அற்றே”
என்பன. எனவே, குற்றியலுகரமும் புள்ளி பெறுமா எனும் கருத்து தோன்றுகிறது. காரணம் உகரம் தன் மாத்திரையில் இருந்து குறுகி ஒலிக்கிறது. ஆகையால் மகரக் குறுக்கம் போலக் குற்றியலுகரமும் முற்காலத்தில் புள்ளி பெற்றதா எனும் கருத்து உதயமாகிறது. 

     இங்கு இன்னொரு கருத்தும் நோக்கத்தக்கது. மெய் எழுத்து உயிர் எழுத்து ஏற இடம் தருவதைப் போலக் குற்றியலுகரமும் தான் ஊர்ந்து வந்த மெய்யை விட்டு உயிர் ஏற இடம் தருகின்றது. 
கொக்கு +  அழகு = கொக் + அழகு = கொக்கழகு. 

     இப்படி எழுத்தின் தன்மை அடிப்படையில் பார்த்தால் குற்றியலுகரம் புள்ளி பெறும் என்பதையும், புணரியல் அடிப்படையில் பார்த்தால் குற்றியலுகரம் மெய் போல உயிர் ஏற இடம் தரும் என்ற கருத்தையும் பெறுகின்றோம்.  ஆனால், குற்றியலுகரம் புள்ளி இட்டு எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும் தமிழ் மொழியின் வரி வடிவ ஆய்விற்கு இந்த நூற்பாக்கள் இன்றியமையாது விளங்குகின்றன.

7 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரர்
  தகுந்த நூற்பாவோடு குற்றியலுகரம் புள்ளி பெறுமா என்ற ஆய்வும், புணர்ச்சி விதிப்படி உயிர் ஏற்கும் எனும் கருத்தும் சிறப்பாக உள்ளது. தங்களின் இலக்கணப் புலமை கண்டு மகிழ்ச்சியாய் உள்ளது. தொடர வாழ்த்துகள். (அப்படியே நமக்கும் கொஞ்சம் சொல்லித் தந்தீங்கனா நலமாக இருக்குமே). பகிர்வுக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் நண்பரே தெரிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். கருத்திட்டமைக்கு நன்றி.தொடருங்கள்.

   நீக்கு
 2. அன்பு கோபி, பின்வரும் நம் நண்பர் திருச்சி ஜோசப் விஜூ அவர்களின் கட்டுரையைப் பார்த்து, தொடர வேண்டுகிறேன்.
  http://oomaikkanavugal.blogspot.in/2014/06/normal-0-false-false-false-en-us-x-none.html

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்!

  குற்றியல் எண்ணிக் கொடுத்த உரைதெளிந்தேன்!
  பற்றுடன் நன்றே படித்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு


 4. ஐயா வணக்கம்!

  இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_5.html

  பதிலளிநீக்கு

>