வெள்ளி, 3 ஜனவரி, 2014

புதுமை அடைய வேண்டும் பதிப்புத் துறை



              கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி” என்று தமிழ் மொழியின் சீரிளமைத் திறம் வியந்து போற்றுகின்ற தமிழர்கள் நாம். இன்றளவிலும் பழமையின் பண்பு மாறாததாய் விளங்கும் செம்மொழிகள் வரிசையில் தமிழ் விளங்குகிறது. அத்தகைய தமிழின் பழமையான இலக்கண இலக்கிய வளங்களைத் தேடும் முயற்சியில் சான்றோர் பலர் அலைந்தனர். ஓலைச்சுவடியில் இருந்த தமிழ் உ.வே.சா. முதலான சான்றோரால் அச்சாக்கம் பெற்றது.
               உதித்து மறைந்து மீண்டும் எழுவது சூரியனுக்கும் வளர்ந்து தேய்ந்து பின் வளர்வது நிலவிற்கும் இயல்பாக அமைந்தது போல் தமிழின் நிலையும் வரலாற்றில் காணப்படுகிறது.  யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலான நூல்களின் உரைகளில் அந்த நூலுக்கு முன் ஏராளமான இலக்கண நூல்கள் இருந்தமை அறிய முடிகிறது. பாளித்தியம், பிங்கலம், குணகாங்கியம், நிருத்தம் என்பன அவற்றுள் சில. அந்நூல்கள் கிடைத்தனவா என்றால் ???  காரணம், இறையனார் களவியல் உரையில் கூறப்பட்டது போலக் கடற்கோளால் அவை அழிவுற்றிருக்கலாம்.
                பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் உரையாசிரியர் காலம் தொடங்குகிறது. உரையாசிரியர்கள் சில இடங்களில் குறிப்பிட்டுச் செல்கின்ற நூல்களும் காலவெள்ளத்தில் அழிந்து போயின.  மயிலை சீனிவேங்கடசாமி என்பாரின் “ மறைந்து போன தமிழ் நூல்கள் ” எனும் நூலில் இப்படிக் காலத்தால் அழிந்து முழுமையாகக் கிட்டாமல் ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளின்படி திரட்டப்பட்ட  பல நூல்களின் தொகுப்பைக்  காணலாம்.
                கடல்கோளின் தாக்கம், சுவடிகளின் பராமரிப்பின்மை, மூடநம்பிக்கையால் ஆற்றில் விடப்பட்டமை, கறையான்களின் காவு இக்காரணங்களால் பல நூல்கள் மறைந்தன.
                அச்சு எந்திரத்தின் வருகையால் தமிழ் மீண்டும் எழுச்சிக் கண்டது. உ.வே.சா., சி.வை. தாமோதரனார், கணேசையர் முதலானோர் ஓலைச்சுவடிகளை அரிதின் முயன்று அச்சடித்துத் தமிழை அரியாசனத்தமர்த்தினர்.  பழைய நூல்கள் பல எளிய விலைகளில் வெளிவந்தன. ஆனால், இன்று அந்நூல்கள் காணக் கிடைத்தில.  பல மறு பதிப்பின்றிக் கிடக்கின்றன. பல தமிழ் மூதறிஞர்களிடம் அந்நூல்கள் வெளி வராது இருக்கின்றன.  பழமையான நூலகங்களில் கூட அவை இன்று காட்சிப் பொருளாகவே உள்ள நிலையைப் பார்க்கும் போது அந்தோ!!!
                                   சில மாதங்களுக்கு முன் மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்குச் சென்றிருந்தேன்.அங்குள்ள செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்ற போது அந்த நூலகத்தில் தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தி, தொன்னூல் விளக்கம் முதலான நூல்களை வாங்கிச் சென்று படித்துள்ளேன்.  ஆனால், தற்சமயம் அவையாவும் அரியவகை நூல்கள் பட்டியலில் உள்ளன. எனவே, அவற்றை ஒளிப்படி எடுக்கக்கூட அனுமதி இல்லை. 
              சங்கம்வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் கம்பராமாயணமும் திருக்குறளும் கிடைக்காது வருந்தி, பின்பு பொன்.பாண்டித்துரையார் தனது இல்லத்தையே தமிழ்ச் சங்கமாக மாற்றினார்.  இன்று அதே தமிழ்ச் சங்கத்தில் அரிய நூல்கள் பல சிதிலமடைந்து கிடக்கின்றன.  காரணம் பல நூல்கள் மறு பதிப்புப் பெறாமையே ஆகும்.
             உரையாசிரியர்களின் உரையால் அழிந்து போன பல நூல்களை அறிந்து கொண்டோம்.  தற்போது நூலின் பின்புறம் காணப்படும் துணை நூல்களின் பட்டியல் மூலமாக மட்டுமே அச்சேறிய பழமையான  நூல்களின் பெயர்கள் அறிய முடிகிறது.  பழந்தமிழ் இலக்கண ஆய்விற்கு உரிய நூல்கள் கிடைக்காமையால் தான் என்னவோ, இலக்கணத்தில் ஆய்வு வளர்ச்சி குன்றியுள்ளது.
புத்தாக்க முயற்சி:
              சிதிலம் அடைந்த சுவடிகளை மீளவும் சுவடியாக்கம் செய்ததும்,  சுவடிகளை நூலாகப் பதிப்பித்ததும் தமிழின் வளர்ச்சியில் முக்கிய திருப்பம்.   நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்ப்பதுடன், இங்குள்ள பழமையான நூல்கள் மின்னூல் வடிவம் பெறவேண்டும்.
             யாழ்ப்பாணத்தின் “நூலகம்” எனும் இணையம் ஏராளமான தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் எண்ணிமப்படுத்தி வரும் முயற்சி பாராட்டுதற்குரியது.  அதே போல மதுரைத்திட்டம் எனும் இணையமும் நூல்களை மின்னூல் வடிவில் கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் அரிய வகை நூல்களை மின்னூல் வடிவில் கொண்டு வரத்  தமிழறிஞர்களிடம் நூல்களைக் கேட்டு அழைப்பு விடுத்துள்ளது.
             தமிழில் உள்ள ஐந்திணையுடன்,  இணையம் எனும் ஆறாம் திணை இணைந்துள்ளது.  கணினியில் நுழைந்தது காலாவதி ஆவதில்லை. எனவே, சுவடி – நூல்களில் இருந்த நம் தமிழ் மின்னூல்களாக உலா வர வேண்டும்.  அரியவகை நூல்கள் விரைவில் மின்னூல் வடிவம் பெற வேண்டும். தமிழ் இலக்கணத்தில் ஆய்வுப் பரப்பு வானமென விரிவடைய வேண்டும். வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்ற தமிழ் வானில் உலாவி வலை வாசலில் நம்மை வரவேற்க வேண்டும்.
            அரிய நூல்களுக்கு அழிவில்லா நிலையை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும். மீண்டும் கடற்கோள், கறையான், அந்துப் பூச்சி இவற்றின் பிடியில் தமிழ் விழ நாம் சற்றும் அனுமதிக்கக் கூடாது விரைவோம். பதிப்பியல் துறை மின்னூல் துறை என்று புதியதோர் பரிமாணம் பெற முயல்வோம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

              

16 கருத்துகள்:

  1. கண்டிப்பாக இனி எல்லாமே மின்நூல்கள் தான்... வேறு வழியில்லை... நல்லதொரு சிந்தனைக்கு பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    பதிலளிநீக்கு
  3. கட்டுரைக் கருத்தும் அருமை. அத்துடன்,
    “உதித்து மறைந்து மீண்டும் எழுவது சூரியனுக்கும் வளர்ந்து தேய்ந்து பின் வளர்வது நிலவிற்கும் இயல்பாக அமைந்தது” என்பன போலும் அரிய நடை மிகவும் அழகு கோபி!
    “அரிய நூல்களுக்கு அழிவில்லா நிலையை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும்“ என்னும் கருத்துடன் நான் உடன் படுகிறேன். அத்தோடு, கல்வித்துறை நூலனைத்தும் ஐபோடில், தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் என்னும் நிலை வந்தால் முன்னேற்றம் விரையும். இதுபோலும் நிறைய நிறையத் தொடர்ந்து எழுதுங்களய்யா.
    திண்டுக்கல் வலைச்சித்தரின் வழிகாட்டலைப் பின்பற்றுவது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா பாரதியைப் போலவே உங்கள் வார்த்தைகள் கூட மந்திரம் தான். தங்களது தினமணிக் கட்டுரைகளில் வெளிவந்த, விண்ணப்ப வியாபாரம் நீங்கி ஆன்லைன் பதிவு வர வேண்டும், தமிழ் படித்தோருக்கு முன்னுரிமை தர வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் இன்று நனவாகி உள்ளன. அதே போல கல்வித் துறையும் புத்தகத்திற்குப் பதிலாக மடிக்கணினி ஐ போடில் பாடம் வழங்கும் முறை, கணினியில் ஆசிரியர்கள் பயிற்றிவிக்கும் முறை வரும் காலம் தூரமில்லை. நெருங்கிவிட்டது. நன்றி ஐயா பகிர்வுக்கு.

      நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான கோபி, தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

      நீக்கு
  5. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரர்
    மிக அழகான கருத்தைச் சொல்லியுள்ளீர்கள். தமிழின் பெருமையைச் சொல்லியே சொல்லியே காலம் கடத்தி விட்டது போதும் இனி ஆக்கப்பூர்வமானப் பணிகளில் பயணிக்க அழைக்கும் உங்கள் கட்டுரை மிக நேர்த்தியானது. தங்கள் கருத்து மற்றும் ஆசையே எனதும். விரைவில் நீங்கள் சொல்லியது அனைத்தும் நடக்கும். பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  7. நல்ல நோக்கம் காலத்தை முன்னோக்கி வரவேற்கும் பதிவு
    பதிப்புத்துறை முன்னேறட்டும்...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரர்
    தங்களுக்கும், நமது இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள் ஐயா. தொடர்வோம் நமது நட்பை இனிமையாக. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  11. நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...? :-

    1. வாழ்க்கையின் எந்த நெறிமுறைகளுமே படிப்பதற்கும், அடுத்தவர்க்கு உப்தேசிப்பதற்கும் அல்லது அடுத்தவர் உபதேசத்தை கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கும்... ஆனால்...

    2. மின் நூல் பற்றிய சிறிய தகவல்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    பதிலளிநீக்கு
  12. என்ன ஆச்சு கோபி? படைப்பில் தாமதப் படுத்தும் எழுத்தாளரை முன்பெல்லாம் என்ன? பேனாவைத் தொலைச்சிட்டீங்களான்னு கேட்பார்கள். இப்ப நீங்க என்ன விரலைத் தொலைச்சிட்டீங்களாய்யா? அப்பப்ப எழுதிக்கிட்டே இருக்கணும் கோபி! இல்லன்னா புதிய நண்பர்கள் சேரமாட்டார்கள் என்பதிருக்கட்டும், பழைய நண்பர்களும் மறந்திடுவாங்கல்ல...? சோம்பேறித்தனம் இல்லன்னாலும் திட்டமிடுதலும் எதற்கு எந்த நேரத்தில் முக்கியத்துவம் தரணும்கிற முடிவும் ரொம்ப முக்கியம். காலம் போய்க்கொண்டே இருக்கும்!

    பதிலளிநீக்கு
  13. உங்கள் கணினி நேரம் சுமார் 11மணிநேரம் தாமதமாகப் போகிறது கோபி இந்தக் கருத்தை நான் எழுதும்போது என் கணினி நேரம் 19-02-2014 காலை மணி 7.00 ஆனால் உங்கள் வலையில் 18-02-2014 பிற்பகல் 5.30 என்று காட்டுகிறது (எனது முந்திய பதிவைக் கணக்கிட்டு) கவனியுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. அவசியம் மின்நூல்கள் தேவை...நல்லபதிவு வாழ்த்துகள் சார்..

    பதிலளிநீக்கு

>