வெள்ளி, 3 ஜனவரி, 2014

புதுமை அடைய வேண்டும் பதிப்புத் துறை



              கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி” என்று தமிழ் மொழியின் சீரிளமைத் திறம் வியந்து போற்றுகின்ற தமிழர்கள் நாம். இன்றளவிலும் பழமையின் பண்பு மாறாததாய் விளங்கும் செம்மொழிகள் வரிசையில் தமிழ் விளங்குகிறது. அத்தகைய தமிழின் பழமையான இலக்கண இலக்கிய வளங்களைத் தேடும் முயற்சியில் சான்றோர் பலர் அலைந்தனர். ஓலைச்சுவடியில் இருந்த தமிழ் உ.வே.சா. முதலான சான்றோரால் அச்சாக்கம் பெற்றது.
               உதித்து மறைந்து மீண்டும் எழுவது சூரியனுக்கும் வளர்ந்து தேய்ந்து பின் வளர்வது நிலவிற்கும் இயல்பாக அமைந்தது போல் தமிழின் நிலையும் வரலாற்றில் காணப்படுகிறது.  யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலான நூல்களின் உரைகளில் அந்த நூலுக்கு முன் ஏராளமான இலக்கண நூல்கள் இருந்தமை அறிய முடிகிறது. பாளித்தியம், பிங்கலம், குணகாங்கியம், நிருத்தம் என்பன அவற்றுள் சில. அந்நூல்கள் கிடைத்தனவா என்றால் ???  காரணம், இறையனார் களவியல் உரையில் கூறப்பட்டது போலக் கடற்கோளால் அவை அழிவுற்றிருக்கலாம்.
                பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் உரையாசிரியர் காலம் தொடங்குகிறது. உரையாசிரியர்கள் சில இடங்களில் குறிப்பிட்டுச் செல்கின்ற நூல்களும் காலவெள்ளத்தில் அழிந்து போயின.  மயிலை சீனிவேங்கடசாமி என்பாரின் “ மறைந்து போன தமிழ் நூல்கள் ” எனும் நூலில் இப்படிக் காலத்தால் அழிந்து முழுமையாகக் கிட்டாமல் ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளின்படி திரட்டப்பட்ட  பல நூல்களின் தொகுப்பைக்  காணலாம்.
                கடல்கோளின் தாக்கம், சுவடிகளின் பராமரிப்பின்மை, மூடநம்பிக்கையால் ஆற்றில் விடப்பட்டமை, கறையான்களின் காவு இக்காரணங்களால் பல நூல்கள் மறைந்தன.
                அச்சு எந்திரத்தின் வருகையால் தமிழ் மீண்டும் எழுச்சிக் கண்டது. உ.வே.சா., சி.வை. தாமோதரனார், கணேசையர் முதலானோர் ஓலைச்சுவடிகளை அரிதின் முயன்று அச்சடித்துத் தமிழை அரியாசனத்தமர்த்தினர்.  பழைய நூல்கள் பல எளிய விலைகளில் வெளிவந்தன. ஆனால், இன்று அந்நூல்கள் காணக் கிடைத்தில.  பல மறு பதிப்பின்றிக் கிடக்கின்றன. பல தமிழ் மூதறிஞர்களிடம் அந்நூல்கள் வெளி வராது இருக்கின்றன.  பழமையான நூலகங்களில் கூட அவை இன்று காட்சிப் பொருளாகவே உள்ள நிலையைப் பார்க்கும் போது அந்தோ!!!
                                   சில மாதங்களுக்கு முன் மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்குச் சென்றிருந்தேன்.அங்குள்ள செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்ற போது அந்த நூலகத்தில் தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தி, தொன்னூல் விளக்கம் முதலான நூல்களை வாங்கிச் சென்று படித்துள்ளேன்.  ஆனால், தற்சமயம் அவையாவும் அரியவகை நூல்கள் பட்டியலில் உள்ளன. எனவே, அவற்றை ஒளிப்படி எடுக்கக்கூட அனுமதி இல்லை. 
              சங்கம்வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் கம்பராமாயணமும் திருக்குறளும் கிடைக்காது வருந்தி, பின்பு பொன்.பாண்டித்துரையார் தனது இல்லத்தையே தமிழ்ச் சங்கமாக மாற்றினார்.  இன்று அதே தமிழ்ச் சங்கத்தில் அரிய நூல்கள் பல சிதிலமடைந்து கிடக்கின்றன.  காரணம் பல நூல்கள் மறு பதிப்புப் பெறாமையே ஆகும்.
             உரையாசிரியர்களின் உரையால் அழிந்து போன பல நூல்களை அறிந்து கொண்டோம்.  தற்போது நூலின் பின்புறம் காணப்படும் துணை நூல்களின் பட்டியல் மூலமாக மட்டுமே அச்சேறிய பழமையான  நூல்களின் பெயர்கள் அறிய முடிகிறது.  பழந்தமிழ் இலக்கண ஆய்விற்கு உரிய நூல்கள் கிடைக்காமையால் தான் என்னவோ, இலக்கணத்தில் ஆய்வு வளர்ச்சி குன்றியுள்ளது.
புத்தாக்க முயற்சி:
              சிதிலம் அடைந்த சுவடிகளை மீளவும் சுவடியாக்கம் செய்ததும்,  சுவடிகளை நூலாகப் பதிப்பித்ததும் தமிழின் வளர்ச்சியில் முக்கிய திருப்பம்.   நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்ப்பதுடன், இங்குள்ள பழமையான நூல்கள் மின்னூல் வடிவம் பெறவேண்டும்.
             யாழ்ப்பாணத்தின் “நூலகம்” எனும் இணையம் ஏராளமான தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் எண்ணிமப்படுத்தி வரும் முயற்சி பாராட்டுதற்குரியது.  அதே போல மதுரைத்திட்டம் எனும் இணையமும் நூல்களை மின்னூல் வடிவில் கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் அரிய வகை நூல்களை மின்னூல் வடிவில் கொண்டு வரத்  தமிழறிஞர்களிடம் நூல்களைக் கேட்டு அழைப்பு விடுத்துள்ளது.
             தமிழில் உள்ள ஐந்திணையுடன்,  இணையம் எனும் ஆறாம் திணை இணைந்துள்ளது.  கணினியில் நுழைந்தது காலாவதி ஆவதில்லை. எனவே, சுவடி – நூல்களில் இருந்த நம் தமிழ் மின்னூல்களாக உலா வர வேண்டும்.  அரியவகை நூல்கள் விரைவில் மின்னூல் வடிவம் பெற வேண்டும். தமிழ் இலக்கணத்தில் ஆய்வுப் பரப்பு வானமென விரிவடைய வேண்டும். வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்ற தமிழ் வானில் உலாவி வலை வாசலில் நம்மை வரவேற்க வேண்டும்.
            அரிய நூல்களுக்கு அழிவில்லா நிலையை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும். மீண்டும் கடற்கோள், கறையான், அந்துப் பூச்சி இவற்றின் பிடியில் தமிழ் விழ நாம் சற்றும் அனுமதிக்கக் கூடாது விரைவோம். பதிப்பியல் துறை மின்னூல் துறை என்று புதியதோர் பரிமாணம் பெற முயல்வோம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

              

புதன், 1 ஜனவரி, 2014

பூத்தது 2014-ஆம் ஆண்டு

"பழையன கழிதலும் புதியன  புகுதலும்
வழுவல கால வகையி னானே”   ( நன்னூல்)


         பழமையின் வழியில் புதுமையை வரவேற்போம். 
   வலைவாசலுக்கு வரும் உள்ளங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு                             நல்வாழ்த்துகள்.  
>