வியாழன், 22 மே, 2014

சௌராஷ்டிர திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலாசிரியர் திரு.சங்குராம்




                                       நண்பர்களே கடந்த பதிவில் திருக்குறளின் சௌராஷ்டிர மொழிபெயர்ப்பு நூல் பற்றி அறிந்தோம். அந்த நூலை அழகுற யாத்த கவிஞர் சங்குராம் அவர்களின் வரலாறு இந்தப் பதிவில் பகிரப்படுகிறது.  கவிஞர்- ஸங்கு.ராம் மதுரை மீனாக்ஷிபுரத்தில் ஸௌராஷ்ட்ர குலத்தில்மார்கண்டேய கோத்ரத்தில்  பிரம்மஸ்ரீ . ஸங்கு. சுப்புராமய்யர் - நாகம்மாள்  தம்பதிகளின் தவப்புதல்வராக 06/04/1907 ல் ஸங்கு.ராம் தோன்றினார்.
இளம்பருவம் முதற்கொண்டு பண்புநலம் விளங்க கல்வி-கேள்விகளில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். தன்னியல்பாகத் தமிழிலும் ஸௌராஷ்ட்ர மொழியிலும் பாடல்கள் புனையும் பாங்கும் கைவரபெற்றவர்.
மதுரை ஸௌராஷ்ட்ர ஸுகுணோதய நாடக சபையோடு தொடர்பு கொண்டார். அதன் ஆசிரியர் ஸ்ரீ வை..வெங்கடேஷ்வர பாகவதர் அவர்களையும் வஸ்துகவி விப்ரபந்து குடுவா.வெ. பத்மநாப ஐயர் அவர்களையும் குருவாக ஏற்றார். கவிபாடும் திறனை வளர்த்துக்கொண்டார். பல ஸௌராஷ்ட்ர நாடகங்களில் கதை,வசனம்,பாடலாசிரியர் ஆனார்.
தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆர்வம் கொண்டு மதுரை தமிழ்ச்சங்கம் திரு. அப்பணய்யங்கார் அவர்களை குருவாக பெற்று தமிழ் கற்றார்.
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் அவ்வப்போது தொண்டர்களுக்கு ஸௌராஷ்ட்ரா மொழியிலும், தமிழ்மொழியிலும் தேசியப் பாடல்களை இயற்றிக்கொடுத்து பாடச் செய்தார்.
திருமண நலுங்கு பாடல்களை இயற்றிக்கொடுத்தார். நல்ல தமிழிலும் நயமான ஸௌராஷ்ட்ரா மொழியிலும் வரவேற்பிதழ்கள்வாழ்த்து மடல்கள் வரைந்து பலருக்கு வழங்கி உதவினார்.
தம் இல்லத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் தல வரலாறும்  ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ சதகம் என்னும் தமிழ் செய்யுள் நூலும் இயற்றி 1973 ல் கோயிலுக்கு வழங்கினார்.
மேலும் ஞானாமிர்த கீதம், ஸித்தாச்ரம பிரபாவம் முதலான பல நூல்களும் எழுதியுள்ளார். ஸௌராஷ்ட்ர நீதி ஸம்பு என்னும் அரிய ஸௌராஷ்ட்ர நூலுக்கு தமிழ் மணம் கமழும் அரிய விளக்கவுரை எழுதி வைத்துள்ளார்.
அவருடைய படைப்புகளில் தலையாயது உலகப்பொதுமறை எனப்பெறும் திருக்குறளின் ஸௌராஷ்ட்ர மொழியாக்கத் திருக்குறளாகும்தமிழ் வெண்பா இலக்கணப்படி ஸௌராஷ்ட்ர மொழியில் குறள்வெண்பாக்களாகவே படைக்கப்பெற்ற அருமையும் பெருமையும் உடையது ஸௌராஷ்ட்ர திருக்குறள்.   இஃது உருவான வரலாறு அருள்மயமானது.
ஸ்ரீ.சங்கு.ராம் அவர்கள்  ஸித்தாச்ரமத்துடன் பல்லாண்டு காலம் தொடர்புடையவராய் இருந்தார். ஸித்தாச்ரமத்தில் இவர் ஸமஸ்க்ருதம் பயின்ற மாணவர்,
 ஸித்தாச்ரம பாலர் வகுப்பில்ஸௌராஷ்ட்ர நீதி ஸம்பு  நூல் பயிற்றுவித்த ஆசிரியர், ஸித்தாச்ரம பூஜ்ய ஸ்ரீ குருஜி இளம்வயதில் பாரத ஹிமாலய யாத்திரை சென்றுவந்த பிறகு வைகை நதி தீரத்தில் நீண்டகாலம் குருஜியின் அருளுரை அமுதம் உண்டவர்ஆசி பெற்றவர் ஸ்ரீ.சங்கு.ராம் அவர்கள்.
ஒரு சமயம்  ஸ்ரீ.சங்கு.ராம் அவர் ஸௌராஷ்ட்ர மொழியில் தாம் எழுதிய ஒரு வாழ்த்து இதழை ஆஸ்ரம குருஜியிடம் காட்டி ஆசிபெறச் சென்றார். அந்த  வாழ்த்து இதழில் இரண்டு திருக்குறள் பாக்களை அவ்வமைப்பிலேயே மொழி பெயர்த்துச் சேந்த்திருந்தார்.
பூஜ்ய குருஜி  அவைகளைக்கண்டு மகிழ்ந்தார். அவற்றின் அமைப்பு அருமையும் பொருட்செறிவுப் பெருமையும் நினைந்து நினைந்து வியந்தார். பின் அவரை நோக்கி திருக்குறள் முழுவதையும் நீங்கள் ஸௌராஷ்ட்ரா மொழியில் படைக்கவேண்டும் அது உங்களால் முடியும் என்று அருளாசிவழங்கினார் ஊக்கமூட்டினார் மீண்டும் மீண்டும் தூண்டி உற்ச்சாகப்படுத்தினார் அந்த அருளாசி பெருவிளைவாக ஸௌராஷ்ட்ர திருக்குறள் சிறப்பாக முழுமையாக உருப்பெற்றுள்ளது.
சங்கு.ராம் தம் காலத்தில் இதனை அச்சிட்டு வெளியிட பல்வேறு முயன்றும் இயலாத்தாயிற்று. பின்னர் பூஜ்ய ஸ்ரீ  குருஜியை அணுகி குருவருளால்  உருவான இன்நூலை (சௌராஷ்ட்ர திருக்குறள்)  குரு தேவரே தம் சொந்த பணத்தால் நூல் வடிவில் நல்ல முறையில் அச்சிட்டு வெளியிட்டு உலகம் போற்றச் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டார்.
69 ஆண்டுகள் ( 1907 – 1976 ) வாழ்வாங்கு வாழ்ந்த ஸ்ரீ.சங்கு.ராம் அவர்கள் 26-4-1976 ல் பூதவுடல் நீத்து புகழுடல் பெற்றார்.  அதன்பின் அவர் விருப்பப்படி  ஸௌராஷ்ட்ர திருக்குறள் கையெழுத்துப் பிரதிகளை  கவிஞர் ஸ்ரீ.சங்கு.ராம் அவர்களின் வாரிசு களான துணைவியார் திருமதி.நாகலம்மாள் அவர்களும் இரு மகள்களும்  சகல உரிமைகளுடன் ஸித்தாச்ரம பூஜ்யஸ்ரீ குருஜிக்கே வழங்கிவிட்டனர்.
திருவள்ளுவர் நெசவுத்தொழில் செய்தார் என்பர். அவரால் தமிழகம் வான்புகழ் பெற்றது.
சங்கு.ராம் ஸௌராஷ்ட்ர  திருக்குறளால் உலகளாவி பரந்து  வாழும் உலக ஸௌராஷ்ட்ர சமுதாயம் உயர்தனி இடம் பெற்றுத்திகழும்.  இதனால் தமிழும் ஸௌராஷ்ட்ர மொழியும் சகோதர பாஷையாக யாண்டும் விளங்கும்.

அடக்கமும் அமைதியும் தவழும் முகம்;
உயர்ந்தோரைக் கவரும் கண்கள்;
எளிய வெள்ளாடை,
வேகமோ-மந்தமோ இல்லாத நடை
இங்கிதம் கொண்ட இனிய சொற்கள்
பணிவு சான்ற  பண்புள்ள பேச்சு
இவ்வளவும் சேர்ந்த ஓட்டுமொத்தமான உருவம்தான் ஸௌராஷ்ட்ர திருக்குறள் ஆசிரியர் அமரர்  கவிஞர் S.S.ராம் என்னும்சங்கு ராம் அவர்கள்.                              
      ( நன்றி : தம்பி கொ.சுப. செந்தில்குமாரின்     www.sourashtralibrary.blogspot.com                                          வலைப்பூவில் இருந்து இந்தத் தேறல் எடுத்துக் கொண்டமைக்கு..) 

செவ்வாய், 20 மே, 2014

குற்றியலுகரம் - சொல்லியல் தன்மை

            குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மை

     குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மைகளை இந்தப் பதிவில் காண்போம்
     தொல்காப்பியரின் கருத்துப்படி குற்றியலுகர எழுத்துகள் மொழிக்கண்    ( சொல்லின் இடை) வரும்போது அதன் வகைமை ஆறு.

          “ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
           ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
           ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்”    -  தொல்.

இங்கு ஈரெழுத்தொருமொழி என்பது நெடில்தொடர்க் குற்றியலுகரமாகும்.
     ஆடு – ஈரெழுத்தொருமொழி
    படகு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
    சார்பு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
    எக்கு – ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
    கொக்கு – வன்தொடர்க் குற்றியலுகரம்
    சங்கு – மென்தொடர்க் குற்றியலுகரம்
       பிற்காலத்தே வந்த நன்னூலார்,

           “நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலிஇடைத்
           தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம்
          அக்கும் பிறமேல் தொடரவும் பெறுமே” – நன்னூல்

எனச் சூத்திரம் வகுத்தார். தொல்காப்பியர் கூறிய ஈரெழுத்தொருமொழி நன்னூலாரால் நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனக் குறிக்கப்பட்டது.
          தொல்காப்பியர் ஆறு வகைக குற்றியளுகரத்துடன் ‘நுந்தை’ எனும் சொல்லில் உள்ள ( ந்+உ) குறுகி ஒலிக்கிறது என்றும் இது மொழி முதல் குற்றியலுகரம் என்றும் சொல்வார்.

            “குற்றிய லுகரம்  முறைப்பெயர் மருங்கின்
             ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்”   - (தொல்)

இத்துடன் தொல்காப்பியர் கூறும் குற்றியலுகரம் மொத்தம் ஏழு ஆகிறது.

உகரம் குறுகி ஒலிப்பதை அறிதல்:

       உகரத்திற்கு மாத்திரை ஒன்று. அது குறுகும் போது மாத்திரை அளவு அரை. இதை எவ்வாறு அறிவது?

          “உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே “ (தொல். பிறப்பியல்)

உகரமானது இதழ் குவிவதால் தோன்றும். ஆனால், குற்றியலுகரம் ஒலிக்கப்படும் போது இதழ் முழுமையாகக் குவிவதில்லை. குற்றியலுகரத்தை முழுமையாக அதாவது முற்றியலுகரமாக ஒலிக்கும் போது ஓசையில் மாற்றம் ஏற்படுகிறது. 
     நம்மவர், “கொக்கு வந்துச்சு சுட்டுப் போடு” என்று கூறுவதையும், வெளிநாட்டினர் இத்தொடரைச் சொல்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் வேறுபாட்டைச் சரியாக அறியலாம் என்பார் கவிஞர் முத்து நிலவன் அவர்கள்.
     குற்றியலுகரம் குறுகி ஒலித்த போதும் அதில் சில சிறப்பு விதிகளையும் தொல்காப்பியர் வகுத்துள்ளார்.  இதை நுண்மையாக அறியலாம்.  அதாவது புணர்ச்சியில் வன்தொடர்க் குற்றியலுகரம் நிலை மொழியாக இருக்க, வருமொழியில் வல்லினத்தை முதலாகக் கொண்ட சொல் வருமானால் அது குறுகி ஒலிக்காது.

            “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
             தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே”   - (தொல்)

  கொக்கு + கால் = கொக்குக் கால்  -- குறுகவில்லை .   ஆனால் வருமொழியில் உயிரோ, மேல்லினமோ, இடையினமோ வரும் போது  குறுகுகிறது.
      கொக்கு + அழகு = கொக்கழகு
      கொக்கு + வால் = கொக்குவால்
      பாக்கு + மட்டை = பாக்குமட்டை

ஈரெழுத்தொருமொழி – ஆய்வு :

       தொல்காப்பியர் நெடில்தொடர்க் குற்றியலுகரத்தை ஈரெழுத்தொருமொழி என்று கூறினார்.  காரணம் நெடில்தொடர்க் குற்றியலுகரம் இரண்டு எழுத்தால் மட்டுமே வரும்.
     எ.கா.  ஆடு, மாடு, பாடு, காது, ஏசு, பாகு, சேறு
       குற்றியலுகர வகையை அதை அயல் எழுத்தை நோக்கியே அறிவோம்.  அப்படிப் பார்த்தால் படகு, தரகு என்பன உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள். ( பட் +அ + கு )
        ஆடு  -  நெடில்தொடர்க் குற்றியலுகரம்
      அசோகு -  உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
நெடில் தொடர்க் குற்றியலுகரத்திலும் உயிர் தானே உள்ளது. ஏன் அதை மட்டும் தனித்துப் பார்த்தார்கள். இதற்குத் தொல்காப்பியர் கையாண்ட மொழிநிலைக் கொள்கையே காரணமாகும்.  தொல்காப்பியர்,

        “ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி
       இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
       மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே” – (தொல்)

என்றார்.  ஆனால் பவணந்தியார்,

         “தனிமொழி தொடர்மொழி பொதுமொழி” ( நன்னூல்)

என வகுத்தார்.  இருப்பினும் அவர் நூற்பாவில் நெடில்தொடர்க் குற்றியலுகரத்தை ‘நெடிலோடு”  என்று பிரித்தார்.

     தமிழில் ஒன்று, பல என்ற கோட்பாடே உள்ளது.  ஒன்று, இரண்டு, பல என்பது வடநூல் கொள்கை.  எனவே, தொல்காப்பியர் மொழி நிலையில் வடநூல் கொள்கையைப் பின்பற்றிவிட்டாரா என்ற ஐயம் எழுகின்றது.  இது ஒருபுறம் இருக்க, யாப்பருங்கல விருத்தி குற்றியலுகரம் வகைமையால் ஏழு என்று கூறுகிறது. அதை அடுத்தப் பதிவில் காண்போம்.

திங்கள், 19 மே, 2014

குற்றியலுகரம் - எழுத்தியல் தன்மை

     தமிழில் உள்ள பத்துச் சார்பெழுத்துகளில் ( நன்னூலார் கூற்றுப்படி ) குறுகி ஒலிக்கக் கூடிய எழுத்துகள் ஆறு.  அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்ககுறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன.  இவற்றில் குற்றியலுகரத்தின் எழுத்தியல், சொல்லியல், யாப்பியல் தன்மைகளைப் பற்றித் தொடர்ந்து நம் வலைப் பக்கத்தில் காண்போம்.
குற்றியலுகரம்:
     குற்றியலிகரம் தானே முதலில் வருகிறது அதைப் பற்றிச் சொல்லாமல் குற்றியலுகரத்தைப் பேசுகிறானே என்று கருதாதீர்கள்.  குற்றியலிகரம் கூட குற்றியலுகரத்தின் திரிபாகவே வருகிறது. எனவே, முதற்கண் குற்றியலுகரத்தைப் பற்றி ஆராய முற்பட்டோம்.
     குறுகி ஒலிக்கும் இயல்புடைய உகரம் குற்றியலுகரம். அதனால் குற்றியலுகரம் எனப்பட்டது.  ஒரு மாத்திரை அளவுடைய உகரம் தன் மாத்திரை அளவில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கிறது.
குற்றியலுகரத்திற்கான களம்:
       குற்றியலுகரத்திற்கான முக்கியமான களம், உகரம் வல்லின மெய்களின் மீது ஊர்ந்து வருவதாகும்.  அதாவது,  க் + உ = கு , ச் + உ =சு, ட் +உ = டு, த் +உ = து , ப் +உ = பு , ற் +உ =று என வருவதாகும்.
      i. பாகு, காசு, ஆடு, காது, பாபு, சாறு
      ii. கொக்கு, அச்சு, பாட்டு, கொத்து, ஆப்பு, காற்று
      iii. சங்கு, மஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று
      iv வெய்து, சார்பு, உல்கு
      v. படகு, அரசு, கரடு, கருது, அளறு
      vi. எக்கு, கக்சு, சுக்று
       மேற்கண்ட சான்றுகளின் கடைசி எழுத்துகள் கு, சு, டு, து, பு, று – ஆக இருக்கிறதல்லவா? இதைப் பார்த்தவுடனே அச்சொல் குற்றியலுகரம் என்பதை அறியலாம்.  இருப்பினும்  தனிக் குறிலை அடுத்து வரும் கு, சு, டு, து, பு, று குற்றியலுகரமன்று. அதாவது,  பகு, பசு, சுடு, அது, தபு, வறு இவை குற்றியலுகரச் சொற்களல்ல. முற்றியலுகரங்கள். மாத்திரை அளவு குறையாமல் ஒலிப்பது முற்றியலுகரம்.
குற்றியலுகரத்தின் எழுத்தியல் தன்மை : 
     குற்றியலுகரம் சார்பெழுத்து. எழுத்தியல் தன்மையில் பார்க்கும் போது இதற்கு அரை மாத்திரை.  இவ்வெழுத்து இயங்குதற்கான களம் வல்லின எழுத்துகளை ஊர்ந்து வருதல் என்பனவற்றை முன்னரே கண்டோம்.  குற்றியலுகரத்திற்கெனத் தனி வரி வடிவம் இருந்துள்ளது என்பதனை இலக்கண நூல்களின் வழியாக நாம் தெளிகிறோம்.  இந்த வலைப் பூவில் ஏற்கனவே குற்றியலுகரம் புள்ளி பெறுமா?  என்பது குறித்து ஆய்ந்தோம்.  அதில் தொல்காப்பிய நூற்பாக்களால் அறியலாகும் வரி வடிவக் கொட்பாடோல் அதாவது மகரக் குறுக்கம் இரு புள்ளிகள் பெற்ற காரணம் குறித்து அலசினோம். 
          ”மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்”,
           “குற்றியலுகரமும் அற்றுஎன மொழிப”
என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் குற்றியலுகரம் புள்ளி  பெறும் என்ப்பதை உணர்த்துகின்றன. 
         “குற்றியலிகரமும் குற்றியலுகரமும் புள்ளி பெறும். என்னை?
       “குற்றிய லிகரமும் குற்றிய லுகரமும்
        மற்றவை தாமே புள்ளி பெறுமே”
என்பது சங்க யாப்பு ஆகலின்” என்று யாப்பருங்கல விருத்தி உரையில் காணப்படுகிறது.  எனவே, பழங்காலத்தே குற்றியலுகர எழுத்து புள்ளி பெற்றது என்பது துணிவு.
      ஆக,  குற்றியலுகரம் எழுத்தியல் தன்மையில் உள்ள  கூறுகளான அதன் ஒலி அளவு, நிலைக்களம், வரிவடிவம் முதலானவற்றைக் கண்டோம். இனி குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மைகளை அடுத்தப் பதிவில் அறிவோம்.



ஞாயிறு, 18 மே, 2014

திருக்குறளும் சௌராஷ்டிர மொழியும்

                               தமிழ் மறை என்று அழைக்கப்படும் திருக்குறள் உலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  ஏராளமானோர் உரை எழுதியுள்ளனர்.  வேறெந்த நூலுக்கும் இல்லாத சிறப்பு,  உரை கூட யாப்பு முறையில்  காணப்படுவதே. இக்காலத்தில் கவிஞர் பலரும் புதுக்கவிதையில் திருக்குறளுக்கு உரை வகுத்துள்ளனர்.
     மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மாற்றம் செய்யும் செயல். இச்செயலைச் செய்யும் முன் அந்தந்த மொழிகளுக்கான கலாச்சாரக் கூறுகளும் பின்புலமாவதைக் காண்கிறோம். சான்றாக வடமொழியில் இருந்து இராமாயணம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட போது தமிழ்ப் பண்பாடு இந்த நிலத்திற்குரிய திணை ஒழுக்கம் மாறாவண்ணம் கம்பர் மொழிபெயர்த்தார். வடமொழி யாப்பு முறை வேறு. நம் தமிழ் யாப்பு முறை வேறு.  கம்பர் விருத்த யாப்பில் இராமாயணத்தை மொழிபெயர்த்தார்.
     தமிழ் நூலான திருக்குறளுக்கு யாப்பு வடிவில் சோமேசர் முதுமொழி வெண்பா எனும் நூல் செய்யுள் வடிவ உரை நூலாக உள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழிபெயர்ப்புகள் உரை நடை வடிவில் காணப்படுகின்றன. ஆனால், வெண்பா யாப்பு முறையில் அமைந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று உள்ளது.
     “திருக்குறளில் தளைப் பிழையா?” எனும் தலைப்பில்  கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த போது நான் பல உரையாசிரியர்களின் உரைகளைக் காண நேர்ந்தது. தருமை ஆதீன வெளியீட்டில் “அக்தின்றேல்” எனும் சீர் பல இடங்களில் “அது இன்றேல்” என்று பாடபேதம் குறிக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு கூற்றும், யாப்பருங்கல நூலின் உரை மேற்கோள் நூற்பாக்களாலும் திருக்குறளில் தளைப் பிழை இல்லை பாடபேதம் உண்டு என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நான் திருக்குறளுக்கு உரிய பழைய உரை நூல்கள் ஆய்வு நூல்களைச் சேகரிக்கத் தலைப்பட்டேன். 
    மதுரை காமராசர் பல்கலைக் கழகம் திருக்குறள்  உரைவளம் எட்டுத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது.  இன்று சில தொகுதிகள் மறுபதிப்பின்றி உள்ளன. துறவறவியல் தவிர எஞ்சியுள்ள ஏழு தொகுதிகளை வாங்கினேன். பின்பு திருக்குறளுக்குச்  சௌராஷ்டிரா மொழிபெயர்ப்பு உள்ளதை அறிந்தேன். அந்த நூலும்  மறுபதிப்பு இல்லாமல் இருக்கிறது. நூலை பதிப்பித்து வெளியிட்ட மதுரைத் தெப்பக்குளம் சித்தாச்ரமம் சென்று அணுகினேன். ஒரு சில பிரதிகளே அவர்களிடம் இருந்தன. அரிதின் முயன்று அந்த நூலைப் பெற்றேன்.

                                      சிறுபான்மை மொழியாக விளங்கும் சௌராஷ்டிரா மொழியில் கவிஞர் சங்குராம் என்பவர் மிக அழகாகத் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பில் கண்ட சிறப்பு,  தமிழ் மொழியின் வெண்பா யாப்பு முறை அப்படியே கையாளப்பட்டுள்ளது.  திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கும் உவமைகள் கொஞ்சம் கூட சுவை குன்றாமல் செப்பலோசை குன்றாமல் சௌராஷ்டிரா மொழியில் படைத்துள்ள விதம் வியக்கத்தக்கதாக உள்ளது.  “ஸ்ரீ த்வின்” எனத் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார் கவிஞர் சங்குராம்.
      சில வருடங்களுக்கு முன்பு தான் சாகித்ய அகாதெமி சௌராஷ்டிரா மொழியை இணைத்துக் கொண்டு அம்மொழியில் வரும் படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் ஊக்கமூட்டிவருகிறது. ஆனால் சௌராஷ்டிரா மொழியில் இராமாயணம், கீர்த்தனைகள், நாடகங்கள் எனப் பல உள்ளதை அறிகிறோம்.  திருக்குறள் சௌராஷ்டிர மொழிபெயர்ப்பு நூல் பற்றி இன்னும் ஒரு கட்டுரையில் விளக்கமாகக் காண்போம். அரிய நூலைக் கண்ட அனுபவத்தை இங்குப் பகிர்ந்து கொண்டேன்.
     பிராகிருத மொழியில் நடுநாயகமாக விளங்கிய சௌரசேனை எனும் மாபாசையின் திரிபாகச் சௌராஷ்ட்ர மொழி சிறுபான்மை மக்களால் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புலம் பெயர்ந்து நில மொழியான தமிழைப் பேசிவரும் போதும் சௌராஷ்டிரா மக்கள் தம் தாய்மொழியை விட்டுக்கொடுக்காது பேசி வருவதால் இன்னும் அம்மொழி பேச்சு மொழியாக உயிருடன் இங்கு வாழ்கிறது. 
    

>